பெண்களின் அறிவுத் திறத்திற்கு உதாரணமாக இவர் ஒரு அவ்வைப்பிராட்டியை எடுத்துக்காட்டுகின்றார். அதே மூச்சில் திருவள்ளுவரையும் எடுத்துக்காட்டியிருப்பாரானால், தாழ்த்தப்பட்டவர் களுக்குள்ளும் ஏதோ ஒருவருக்கு அறிவு வளர்ச்சி இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டிருப்பார். எனவே, நாம் ஒன்றிரண்டு பெண்ணரசிகளைப் பற்றிப் பேச வரவில்லை என்பதையும் தற்காலத்தில் வாழும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் வீதமுள்ள பெண்களைப்பற்றிப் பேசுகின்றோம் என்பதையும் உணர வேண்டுகின்றோம்.

