More on this book
Community
Kindle Notes & Highlights
நீதி நூல்கள் என்பவைகள் எப்படிப்பட்ட பெரியோர்களால் எழுதப்பட்டவைகள் என்றாலும் அவை அக்கால நிலையையும், எழுதப்பட்ட கூட்டத்தின் சவுகரியங்களையும் அனுசரித்து எழுதப்பட்டதென்றும், மற்றும் ஒரு நீதியானது எக்காலத்தும் எல்லாத் தேசத்திற்கும், எல்லாக் கூட்டத்தாருக்கும் சவுகரியமாகவும், பொதுவாயும் இருக்கும்படியாக எழுத முடியாதென்றும், ஆதலால் எந்தக் கொள்கையும் எக்காலத்தும், எல்லாத் தேசத்திற்கும், எல்லோருக்கும் சவுகரியமாயிருக்குமென்றும் கருதி, கண்மூடித்தனமாய், குரங்குப் பிடிவாதமாய்ப் பின்பற்றக் கூடாது என்றும் வலியுறுத்த எழுதப்பட்டதாகும்.
‘பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழியவேண்டும்’
பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்றும், எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பாடுபடவேண்டும்
உண்மையான சமத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்போமானால், உண்மையான அன்பு இருக்குமானால், பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர, மற்ற காரியங்கள் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது உறுதி.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனதிஷ்டத்தை - திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்களென்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு, அறிவீனம், அனுபவமின்மை, ஏமாற்றம் என்பவைகளைவிடச் சிறிதுகூட சிறந்தது அல்ல
உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால், அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால், அதுபோலவே காதலர்கள் என்பவர்களும் நடந்து, தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள்.
கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்விதக் குறைகளும் குற்றங்களும் ஏற்பட முடியுமா? என்பதை யோசித்தாலே, தெய்வீகம் என்பது முழுப்புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியமாற் போகாது.
‘‘ஏதோ கல்யாணம் என்பதாக ஒன்றைச் செய்துகொண்டோமே, செய்தாய்விட்டதே, அது எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்கவேண்டும்’’ என்று கருதி, துன்பத்தையும், அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதும், அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும், மனிதத் தன்மையும், சுயமரியாதையுமற்ற காரியமாகுமேயல்லாமல் ஒரு நாளும் அறிவுடைமை யாகாது என்பதே நமதபிப்பிராயமாகும்.
உலகில், மனித வர்க்கத்தினருக்குள்ளிருக்கும் அடிமைத்தன்மை ஒழியவேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழியவேண்டும். அது அழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாம்.
பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும், சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால், சாதாரணமாய்ப் பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம். அதுமாத்திரல்லாமல், பல பிள்ளைகளைப் பெறுகின்ற காரணத்தால் ஆண்களும்கூடச் சுயேச்சையுடனும், வீரத்துடனும், விடுதலையுடனும் இருக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியாது என்பதை ருஜுப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள்.

