அரசாங்கத்தின் கட்டிடங்கள் தேவையான அளவை விட பிரமாண்டமாக அமைந்திருப்பதன் உளவியலை அவன் இப்போது நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டான். அவற்றைப் பார்க்கும்போதே மக்களின் மனதில் அச்சம் வரவேண்டும், மரியாதையோடு பக்தியும் வர வேண்டும். உள்ளே அமர்ந்து ஆண்டு கொண்டிருப்பவர் ஒரு சாதாரண மனிதர் என்ற எண்ணமே அவர்களுக்கு வரக் கூடாது. சைரன்கள், காவலர்கள், துப்பாக்கிகள் இவற்றோடு இந்த பிரமாண்டமும் அவசியமாகி விடுகிறது. இது வரை அந்தக் கட்டிடத்தினுள் பலமுறை வந்து போயிருக்கிறான். ஆனால் இன்று அந்தக் கட்டிடம் தனது அதிகார மொழியில் தன்னோடு பேசுவதாக உணர்ந்தான்.