ஒருமுறை என் உபவனத்தில் சிறுபாறை இடுக்குக்குள் ஒரு ராஜநாகத்தைப் பார்த்தோம். அது உள்ளே புகுந்து இன்னொரு நாகத்தை விழுங்கிவிட்டது. அதன்பின் உள்ளே சென்ற இடுக்குவழியாக வெளியே வர முடியவில்லை. அங்கேயே மடிந்து எலும்புச்சரடாக வளைந்திருந்தது. அதனுள் இன்னொரு எலும்புச்சரடாக அந்த இரை. இரைக்குள் ஒரு தவளையின் சிறிய எலும்புத்தொகை இருந்தது...” விசித்திரவீரியன் சிரித்து மெல்லப்புரண்டு “பிரம்மனின் நகைச்சுவைக்கு முடிவே இல்லை அல்லவா?” என்றான்.

