“மஞ்சத்தைப் பகிர பல்லாயிரம் பெண்கள் கிடைப்பார்கள். நகைச்சுவையைப் பகிர பெண்ணை பிரம்மனிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும் என்று என் அமைச்சர் சொல்வார்...” என்றான். “யார் அவர்?” என்றாள் அம்பிகை. “ஸ்தானகர் என்று பெயர். அவர் என்னுடன் சேர்ந்து சிரிப்பதனால்தான் நான் வாழ்கிறேன்” என்றான். “அவரிடம் சொல்லுங்கள் பெண்ணுடன் சேர்ந்து அழாத ஆணுக்கு, சேர்ந்து சிரிப்பதற்கு உரிமை இல்லை என.” விசித்திரவீரியன் சிரித்து “சொல்கிறேன்... உறுதியாகச் சொல்கிறேன். திகைத்துவிடுவார், பாவம்” என்றான்.

