விளையாட்டுப்பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக்கூழாங்கற்களையும் எடுத்துக்காட்டுவதுபோல அவள் தன் அகம் திறந்துகொண்டிருந்தாள். அவளுடைய மங்கலமும் அழகும் எல்லாமே என் மெல்லிய உயிரில் உள்ளது என்று அறிந்தபோது நேற்றிரவு என் அகம் நடுங்கிவிட்டது. என்ன செய்துவிட்டேன், எப்படிச்செய்தேன் என்று என் உள்ளம் அரற்றிக்கொண்டே இருந்தது. அந்த இரு கன்னியரையும் அமங்கலியராக்கி அந்தப்புர இருளுக்குள் செலுத்திவிட்டு நான் செல்வது எந்த நரகத்துக்கு என்று எண்ணிக்கொண்டேன்.”

