விசித்திரவீரியன் வருவதற்காக இளஞ்செந்நிற மஞ்சத்தில் காத்திருந்தபோது அம்பிகை சொற்களால் நிறைந்திருந்தாள். அவனிடம் நேற்றிரவெல்லாம் பேசிப்பேசி புலரியைக் கண்டபின்னும் மறுநாளைக்குள் மும்மடங்கு பேசுவதற்கு எப்படி சொற்கள் சேர்ந்துவிட்டன என்று அவளுக்குப் புரியவில்லை. முந்தையநாள் இரவு தொண்டை உலர்ந்து குரல் கம்மியதும் எழுந்து நீர் அருந்துவதற்குள்ளேயே சொற்கள் நிறைந்து தளும்பத்தொடங்கிவிட்டன. “ஏனென்றால் நீ சொல்வதையெல்லாம் நானும் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீ உன் மனதால் அவற்றை கேட்கிறாய்” என்றான் விசித்திரவீரியன்.

