அவனை நினைத்தபோது ஏன் உள்ளம் துள்ளுகிறது என அவளுக்குப் புரியவில்லை. அவள் தனக்குள் கற்பனை செய்திருந்த ஆணே அல்ல. ஆனால் அவனைப்போல அவளுக்குள் இடம்பெற்ற ஓர் ஆணும் இல்லை. ஆணிடமல்ல, இன்னொரு மனித உயிரிடம்கூட அத்தனை நெருக்கம் தன்னுள் உருவாகுமென அவள் நினைத்திருக்கவில்லை. ஆடைகளைக் கழற்றிவிட்டு அருவிக்குக் கீழே நிற்பவள்போல அவன்முன் நின்றிருந்தாள்.

