ஆயினும் அப்படியும் சொல்லிவிட முடியாது. விடுமுறை நாள் சம்பவம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது. பெரியம்மா மகனான தம்பி, பந்து எறிந்து தொலைக்காட்சியை உடைத்துவிட்டான். பெரியம்மா ஒரு கட்டையை எடுத்து அவனை அடிக்கத் துரத்தியது. பிஞ்சு வயதின் வேகத்தில் நான் ஓடிச் சென்று அவனைப் பிடித்தபடி, ‘‘பெரியம்மா! இங்க வாங்க மாட்டிக்கிட்டான்’’ என்றேன். மூச்சு வாங்க ஓடி வந்த பெரியம்மா, கட்டையைக் கீழே போட்டுவிட்டு, ‘‘ஏன்டா... என் புள்ள அடி வாங்குறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா?’’ என்றது. அந்தக் கணம் என் கால்களுக்குக் கீழே தரை நான்கு அடி பிளந்தது. உள் மனசில் இருந்து ஒரு குரல் சொன்னது ‘உறவு வேறு... உதிரம் வேறு!’