More on this book
Community
Kindle Notes & Highlights
நினைவுகளின் வழியாகக் கூட நீ உன் பால்யத்திற்குத் திரும்பிச் செல்லாதே. கிணற்றில் முங்கி எழுவதைப் போல சுலபமில்லை அது. தெருமுனைத் தேநீர்க் கடைக்கு சென்று திரும்புவதைப் போல இயல்பானதுமில்லை. வயதென்னும் ரயில் வண்டி முன்னேற முன்னேற பின்னோக்கி நகரும் மரங்களின் மாயத்தோற்றத்தில் மயங்கி நீ உன் பால்யத்துக்குள் நுழையத் துடிக்கிறாய். தெரிந்த துரோகத்தை; தெரியாத காதலை; முறிந்த உறவை; முறியாத முட்காடுகளை; மீண்டும் சென்று தொடுவதில் என்ன கிடைத்துவிடப் போகிறது உனக்கு? ஒரு வலியைத் திரும்பத்திரும்பத் தொடும் வலியில் அப்படி என்ன சுகம்? உன் துருப்பிடித்த சைக்கிளின் செம்மண் தடங்களை தார்ச்சாலைகள் மூடிவிட்டன. நீ நடந்து
...more
Moneeswaran liked this
ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு தோற்றம் காட்டும் கண்ணாடிதானோ வாழ்க்கை!
உன்னுள் கருவாகி, உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான். மண்ணுள் நான் வீழ்ந்து, மெள்ள உதிரும் வரை என்னுள்... நீ வாழ்வாய்!
உண்டு.அழுதுகொண்டு இருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்துவிடுவது இல்லை... அழுதுகொண்டு இருக்கும் அப்பாவின் முகம்.
‘எனக்குத் தமிழ் மட்டும் தெரிஞ்சதாலதான், தமிழ்ப் புத்தகம் மட்டும் வாங்கினேன். அதனால, கடனாளியா மட்டும் இருக்கேன். ஆங்கிலமும் தெரிஞ்சிருந்தா... நாம எல்லாம் நடுத்தெருவுலதான் நின்னிருப்போம்.’
உங்கள் உயிரின் ஒரு துளியில் இருந்து என் உலகம் தொடங்கியது. இன்று, இவ்வேளையில் அளவில்லா அன்புடன் என் கண்ணீரில் சில துளிகளை உங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்!
இனி, அந்த வீடு அக்கா வாழ்ந்த வீடு அல்ல; அக்கா வந்து போகும் வீடு.
வேதாளம் கேட்டது. ‘‘தம்பி என்று சொன்னவுடன் உன் மனதில் உடனே வரும் பிம்பம் என்ன?’’ ‘‘நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும் என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால், என் பசி அறிந்தவன். என் நாணயத்தின் இன்னொரு பக்கம். துக்கத்தில் எனைத் தாங்கும் தூண். சக
‘இதோ உன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைக்கு நீ தாய்மாமன். இவன் உன் சகோதரியின் உதிரம். அலைக்கழித்தோடும் இவன் உதிர நதியில் உன் வம்சத்தின் துளியும் கலந்திருக்கிறது. இவனைப் பெற்றவர்கள் பக்கத்தில் இருந்தாலும், காலம் முழுவதும் இவன் மீது காயம் படாமலும், காற்று படாமலும் காக்க வேண்டியது உன் கடமை. தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்!’’
காலம் காலமாக ஆயாக்கள் இப்படித்தான் வடை சுடுகிறபோது காக்கைகளிடமும்; தின்பண்டங்கள் சுடுகிறபோது பேரன்களிடமும் பறிகொடுத்துவிடுகிறார்கள்.
பூமியே ஒரு வாடகை வீடுதான் என்பது கவிஞனின் பெருமிதம்.
அப்பா - மகன் உறவுக்கும்; தாத்தா - பேரன் உறவுக்கும் என்ன வித்தியாசம் என நான் யோசிக்க ஆரம்பித்தேன். அப்பா - மகன் உறவில், ஒரு ப்ரியம்; ஒரு வாஞ்சை; ஒரு தோழமை; ஒரு கண்டிப்பு; ஒரு கவனம்; ஒரு கவலை; ஒரு பதற்றம்; எல்லாவற்றுக்கும் மேல் ஓர் எதிர்பார்ப்பு எங்கோ அடி ஆழத்தில் ஒளிந்துகிடக்கிறது. மாறாக, தாத்தா - பேரன் உறவில்... ப்ரியமும், வாஞ்சையும், தோழமையும் தாண்டி இருவருக்குள்ளும் ஒரு குழந்தமை ஆயிரமாயிரம் வண்ணங்களுடன் தலை காட்டுகிறது. கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் குழந்தைகளும் முதியவர்களும் மட்டுமே. ஆகவே, அந்த உறவில் ஒரு தெய்விகத் தன்மையைத் தரிசிக்க முடிகிறது.
பால்யத்தின் கண்கள் வழியாகப் பார்க்கையில் பிரமிப்புடன் தெரிந்த இந்தப் பிரபஞ்சம், முதுமையின் கண்கள் வழியாகப் பார்க்கையில், அதே பிரமிப்பு அடங்காமல் வடிவம் காட்டுகிறது.
தன் கிளையில் தன் வண்ணத்தையும் வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த பூவைப்பற்றிய செடியின் பெருமிதம் அப்பா மகன் - உறவு எனில், தன் காலடியில் தன் விழுதும் தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும் அமைதியின் பெருநிலையே தாத்தா - பேரன் உறவோ?
பனங்காயின் மூன்று கண்களுக்கும் நடுவே நீண்டு வளைந்த கம்பைச் சொருகி பனங்காய் வண்டி விளையாட்டு. தூரத்தில் கானல் நீரில் நீந்திக்கொண்டு இருந்த ஒரு மரத்தை இலக்காக்கி, யார் அதை முதலில் தொடுவது என்கிற பந்தயம் நடந்துகொண்டு இருந்தது. நெருஞ்சி முட்காட்டில் பனங்காய் வண்டியை உருட்டியபடி அந்தச் சிறுவர்கள் மரத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தார்கள். இத்தனை உக்கிரமாக தான் இருந்தும், தன் வெம்மைக்குத் தப்பி இந்தப் பனை மரங்கள் காய்கள் தருவது குறித்து வெயிலுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவர்கள் விளையாடுவதற்காகவாவது இனி, பனை மரங்கள் மீது கூடுதல் உக்கிரம் காட்டுவது இல்லை என வெயில் தீர்மானித்தது. பனங்காய் வண்டிகள்
...more
பின்பொரு நாள் அந்த ஊருக்கு மழை வந்தது. முதிர்ந்த மழை. அந்த மழைக்குப் பல லட்சம் வயது இருக்கும். ஒவ்வொரு முறை மேகத்தில் இருந்து குதிக்கும்போதும், தன் வயதை அது கூட்டிக்கொண்டே வரும். முதல் முறை அது ஒரு மலைக் காட்டில் குதித்தபோது, அதன் தகப்பன் சொன்னது, ‘‘முதல் முறை மண்ணுக்குப் போகிறாய்... மேகமாகித் திரும்பி வா.’’ மலைக் காட்டில் அருவியாகி, ஏதேதோ ஊர்களில் நதியாகிக் கடந்து, கடலில் ஆவியாகி மேகத்தை அடைந்து, மீண்டும் அது ஒரு பெரு நகரத்தில் குதித்தது. ஆடி ஆடி சாக்கடை நீரில் மிதந்து கடலிடம் கலக்கையில், அது தன் வாழ்வின் மிகப் பெரும் அனுபவத்தைத் தன் ஞாபகக் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டது. ஆயிற்று வருடங்கள். பல
...more
வெயில் மழையிடம் சொன்னது, ‘‘அண்ணன்கள் வெயிலின் வார்ப்புகள். கோபத்தின் உக்கிரம் அப்படியே இருக்கிறது.’’ மழை குறுக்கிட்டது, ‘‘இல்லை இல்லை... அண்ணன்கள் மழையின் மைந்தர்கள். கண்ணீரின் ஈரத்தைக் கண்டதால் சொல்கிறேன்.’’
கண் எதிரே காற்றில் மிதக்கும் மேகங்கள். தோன்றிக் கலைந்து மீண்டும் புதிதாகத் தோன்றி எதைச் சொல்ல வருகின்றன இந்த மேகங்கள். ஓடி ஓடிக் காற்றில் உடைவதற்கா, இந்த ஓட்டம்?
எங்கள் கிளைகள் பூப்பதற்காகவே, நீங்கள் வேராக மண்ணுக்குள் மறைந்துகிடந்தீர்கள். உண்மையில் பூக்கள் ஒருநாள் மண்ணில் உதிர்வது எல்லாம், வேர்களை முத்தமிடத்தானோ?
மது, நினைவுகளின் பொக்கிஷத்தைத் திறக்கும் சாவி. சில நேரங்களில் அதுவே நினைவுகளின் புதைகுழியை மூடும் வேலியாகவும் அமைந்துவிடுகிறது. விமானமும் நானும் மேகத்தில் மிதந்தபடி குலுங்கிக்கொண்டு இருந்தோம்.
ஆயினும் அப்படியும் சொல்லிவிட முடியாது. விடுமுறை நாள் சம்பவம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது. பெரியம்மா மகனான தம்பி, பந்து எறிந்து தொலைக்காட்சியை உடைத்துவிட்டான். பெரியம்மா ஒரு கட்டையை எடுத்து அவனை அடிக்கத் துரத்தியது. பிஞ்சு வயதின் வேகத்தில் நான் ஓடிச் சென்று அவனைப் பிடித்தபடி, ‘‘பெரியம்மா! இங்க வாங்க மாட்டிக்கிட்டான்’’ என்றேன். மூச்சு வாங்க ஓடி வந்த பெரியம்மா, கட்டையைக் கீழே போட்டுவிட்டு, ‘‘ஏன்டா... என் புள்ள அடி வாங்குறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா?’’ என்றது. அந்தக் கணம் என் கால்களுக்குக் கீழே தரை நான்கு அடி பிளந்தது. உள் மனசில் இருந்து ஒரு குரல் சொன்னது ‘உறவு வேறு... உதிரம் வேறு!’
ஆண்கள் மனதில் பாவமாகத் தோன்றுவது, பெண்கள் மனசுக்குப் பரவசமாகத் தோன்றும்போல.