என் புருவங்களின் கீழிருந்து அவளை நோக்குகிறேன். அவள் கையில் பிடித்த மெழுகுவர்த்தியின் சுடரில் அவள் முகம் ரோஜாவின் செவ்விதழில் ஏற்றிக்கொண்டிருக்கிறது. எடுப்பான மூக்கின் கீழ், உதடுகள் சிற்பச் செதுக்கலில் அமைதியாக உறங்குகின்றன. நடு வகிடிலிருந்து கூந்தல் வங்கி வங்கியாய், நீர்வீழ்ச்சிபோல் இருமருங்கிலும் இறங்குகிறது. அவள் உடுத்திய மஞ்சள் ‘ஸேட்டின்’ சேலை, அங்கத்திரட்சிகள் மேல் பாயும் அலைகளில், இந்த முக்கால் இருள், மிச்சம் கால் ஒளியாட்டத்தில் புலிக் கோடுகள் பிறந்து விளையாடுகின்றன.