More on this book
Kindle Notes & Highlights
ஒரு சமயம் அதன் ஊதல் உவகையின் எக்காளம்; ஒரு சமயம் வேகத்தின் வெற்றிப்பிளிறு; மறுசமயம் அது இழுத்துச் செல்லும் சிறு உலகத்தின் சுமை கனத்தினின்று இழுத்த பாகாய், அது செல்லுமிடம் சேரும் வரை, அதன் கர்ப்பத்தில் தாங்கிய அத்தனை மக்களின் அவரவர் விதியின் தனித்தனிச் சஞ்சலங்கள், பிரிகள் ஒன்று திரித்த ஓலக்குரல் தீனக்குரல்
விளக்குக்கு ஏற்றினால் வெளிச்சம். ஆனால், விடிவு என்னவோ வேளையில்தான்.
எல்லாமே தெரிந்த வரைக்கும்தானே! மிச்சமெல்லாம் துணிச்சல்தான். வாழ்க்கையின் நியதியே துணிச்சல்தான்.
ஆனால், செல்வத்துக்கே ஒரு கலையுண்டு. பிறவியிலேயே வளத்துக்கு ஒரு தோரணை உண்டு.
ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம்; ஆனால் ராணி மணந்த ஏழை, ராஜா இல்லை. என்றும் அவன் பிரஜைதான்.
புயல் கடைந்த கடலில், கட்டுமரம் அலையுச்சியின் நுரை கக்கலின் மேல் சவாரி செய்தால் என்ன? அலையிறங்கி மிதந்தால் என்ன? அலை ஓய்வது என்பதில்லை.
இப்படித் தணிந்து, அவளை அவள் இயற்கைக்கு விரோதமாய்ப் பார்க்கவும் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர், ஒருவரிடமிருந்து ஒருவர் என்னதான் வேண்டுகிறோம்? வாழ்க்கையில் இதற்குள்ளேயே இவ்வளவு தெவிட்டல். பாக்கி நாள் கழிப்பதெப்படி?
எத்தனை நேரம் இப்படியே மௌனமாய் நின்றோமோ! நித்தியத்துவத்தினின்று சிந்தி உருண்ட கண்ணீர்த்துளி விரிந்த இரு பாதிகள் எனக் காட்டும் முறையில் எங்கள் மேல் கவிந்த வான்கிண்ணமும் எங்களை ஏந்திய பூமியின் வரம்பும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் விளிம்பு கட்டின. நாங்கள் அதனுள் மாட்டிக்கொண்ட கண்ணீரின் நிழல்கள்.
உப்பும் புளியும் பக்குவமாய்க் கூடினதால் மட்டும் ருசி கிட்டிவிடுவதில்லை. அன்னமிட்டாரின் எண்ணமும் கலந்த ரஸவாதம்தான் நெஞ்சு நிறைகிறது.
பூகம்பத்தில், குஹையை மூடிய பாறை தானே உருண்டு விழுகிறது. நுழைவது புதையல் குஹையோ புலிக் குஹையோ. புதையல் கண்டவன் எல்லாம் தன்னால்தான் என்று பூமாலை சூட்டிக் கொள்கிறான். புலிக்கிரையானவன் வேளைமேல் பழி.
உடல் ஒரு கூடு எனில் இதயம் அதனில் குருவி.
வான் பாதியும் பூமியின் பாதியும் விளிம்பு சேர்ந்த முழு உருட்டு இப்பூமி. நித்யத்வம் உகுத்த கண்ணீர்த் துளி. அதன் நீரோட்டத்தில் ஆடும் நிழல்கள் நாம். நம்மை நாம் என்று கொண்டதன் விளைவாய் நேர்ந்த நம் வாழ்வுகள் தாழ்வுகள், அஸ்திகள், அஸ்தியில் பூத்த நினைவுகள். நாம் எல்லோருமே கண்ணீரின் நிழல்கள்.
மணவறை மஞ்சத்தில் புலவி வெறியில் பிய்த்தும் உருவியும் தானாவும் உதிர்ந்த மலர்கள்போல் வானில் மேகங்கள் இப்போது சிதறிக்கிடக்கின்றன. இவ்வளவு மகத்தான கலவிகொண்ட விராட்புருஷன், அவனுடைய ஸ்திரீ யார்?
காண்பதும் கண்டதில் இழைவதுமன்றி கவிதையில் புரிந்து ஆகவேண்டியதென்ன?
இடுப்பில் குடத்துக்கு இடம், குடத்தின் செருக்கு. இடையில் குடம், இடுப்பின் செருக்கு. இடையின் வளைவுள் குடத்தின் வளைவு புதைந்ததும் கோடுகள் பூக்கும் மர்மப் புன்னகை இதயத்தில் ஒளி தட்டுகின்றது.
சென்று போன காலத்துள் புதையும், தான் மென்று உமிழ்ந்த மண்ணில் புதைந்த மண்உணிப் பாம்பு. சென்றுபோனதற்கும் இனி வரப்போவதற்கும் வித்தியாசம் என்ன? இரண்டுமே நடுநின்ற தருணத்தின் தூலச் சாயல்கள்தான்.
‘அபிதா’ அ - சிமிழ் போன்ற வாயின் லேசான குமிழ்வில், - பி - உதடுகளின் சந்திப்பில், தா - நாக்கின் தெறிப்பில்.
தொடல். உடைமையின் முத்திரை. உறவின் வழித் துணை. உணர்வின் பழி ரேகைக்கு ரேகை பாயும் மந்திர சக்தி என்ன?
அன்பிட்டவர்களின் குறைகளே அவர்களிட்ட அன்பின் விசேஷ ருசி. எப்பவுமே பசிக்காகவா சாப்பிடுகிறோம்? சமைத்ததற்காகவா சாப்பிடுகிறோம்?
‘நீ.’ ஒரே எழுத்து. ஒரே சொல். ஒரே கத்தி. ஒரே குத்து.
என்னத்தையோ எழுதி, எழுதியதைப் படித்து, படித்ததை நினைத்து, படித்ததை வாழ்ந்து, வாழ்ந்ததைப் படித்து, அனுபவத்தை நினைத்து, நினைத்ததையே நினைந்து, நினைவை அவ்வப்போது காயப்படுத்தி, காயத்திலிருந்து சொரியும் ரத்தம் உணர்ந்து, அர்த்தங்கள், பிரயத்தனங்கள் கொள்கிறோம். நினைவின் ரணமே உயிரின் தைரியம், உயிரோவியத்தின் பல வர்ணங்கள்.
வாழ்க்கையின் ஏடுகளைத் திரும்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப் பத்திரிகையாகவே படிக்கின்றன.
நான்தான் உன் பிறவியின் முழு ஒளி உன் அவதார நிமித்தம் உயிரின் கவிதாமணி நீ அறியாது, தொண்டையில் மாட்டிக் கொண்டிருக்கும் உன் கனவின் தூண்டில் முள் தொன்றுதொட்டு உலகின் ஆதிமகன். ஆதி மகளுக்கும் உனக்கும் இன்றுவரை வழிவழி வந்த சொந்தம் வேஷங்கள் இற்று விழுந்ததும் அன்றிலிருந்து இன்று வரை மாறாத மிச்சம் உனக்கு உன் அடையாளம்.
எல்லாம் அறிந்து தன்னுள் தானடங்கி மேலிறங்கிய மோனத்தில் விதியின் தொடுப்பல்.