இடியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை. சண்டை போலவே சமரஸத்திலும் அவள்தான் முதல். ஆனால், பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொற்றி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம்கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டைவழி நிறைவு காணாத வஞ்சம். சதை மூலம் தேடும் வடிகால். ஊன்வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி எனும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புத்தான்.