More on this book
Kindle Notes & Highlights
இடியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை. சண்டை போலவே சமரஸத்திலும் அவள்தான் முதல். ஆனால், பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொற்றி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம்கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டைவழி நிறைவு காணாத வஞ்சம். சதை மூலம் தேடும் வடிகால். ஊன்வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி எனும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புத்தான்.
புயல் கடைந்த கடலில், கட்டுமரம் அலையுச்சியின் நுரை கக்கலின் மேல் சவாரி செய்தால் என்ன? அலையிறங்கி மிதந்தால் என்ன? அலை ஓய்வது என்பதில்லை.
அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை புரிந்துகொண்டிருக்கின்றன. மானிடர் மக்கு. நமக்குப் புரியவைக்கும் நேரம் அவைகளுக்கில்லை. தேவையுமில்லை. பூரா புரிந்துகொள்ளும் சக்தியும் பாவிகள் நமக்கிலை. நெகிழ நெஞ்சம், பார்க்கப் பாக்கியம், மலரக் கண், படைத்தவர் கண்டுகொண்டேயிருக்கலாம். காண்பதும் கண்டதில் இழைவதுமன்றி கவிதையில் புரிந்து ஆகவேண்டியதென்ன?
கவலையற்ற கடவுள். கொடுத்து வைத்தவர். நமக்குக் கவலையைக் கொடுத்த கவலையற்ற கடவுள் கொடுத்து வைத்தவர்.
குனிந்து காலடியில் ஒரு வெள்ளைக் கூழாங்கல்லைப் பொறுக்குகிறேன். பூஜையில் வைக்கலாம், அவ்வளவு உருண்டை, மழமழ. ஒன்றைப்போல் பல குட்டிக் கருவேல நாதர்கள், கெட்டிக் கருவேல நாதர்கள். கீழே போட்டு உடைத்தாலும் உடைந்தாலும் பளார் எனப் பிளந்து போமேயன்றி குட்டு உடையாது. அவைகளின் ரகஸ்யம் காலத்துக்கும் பத்ரம்.
ஆனால், இத்தனையும் மூச்சின் ‘தம்’ இருக்கும்வரை குளுமையில் ஆழ்ந்துகொண்டே போகையில் காணும் ஆசைக் கனவுதான். பிராணனின் விம்மலில் மார் வெடிக்கையில், தொண்டை தூணாய்ப் புடைக்கையில், இத்தனை வருடங்கள் கைகள், புஜங்கள், கால்கள், தொடைகளில் உறங்கிக் கிடந்த நீச்சல் திரும்ப விழித்துக் கொள்கையில்,