திராவிடர் கழகம் திராவிட உணர்வுகளைப் பரப்பத் தொடங்கியபோது, இராவணன், இரணியன், நரகாசுரன், கம்சன் ஆகியோரைப் பற்றிய கதைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இம்மாந்தர்கள் அந்நாளைய திராவிட உணர்வோடு திகழ்ந்த திருவினர் என்றும், இவர்களை இழிவாக எடுத்துக் காட்டுவது தமிழினத்தைத் தகர்ப்பதற்கான சமுதாயச் சாடல் என்றும் பெரியார் மேடைதோறும் இடிமுழக்கம் செய்து வந்தார். இராவண காவியம் என்றே புலவர் குழந்தை இராவணனைத் தலைமகனாகக் கொண்டு ஒரு காவியப் பனுவல் பாடினார்.