இந்த நிலையில் வந்தியத்தேவன் தலை நிமிர்ந்து குந்தவை தேவியைப் பார்த்தான். என்னவெல்லாமோ சொல்ல வேணும் என்று அவனுடைய உள்ளம் பொங்கியது. ஆனால் அதைச் சொல்லும் சக்தி உயிரற்ற வெறும் வார்த்தைகளுக்கு ஏது? சொல்ல வேண்டியதையெல்லாம் அவனுடைய கண்களே சொல்லின. அச்சமயம் வந்தியத்தேவனுடைய கண்கள் புனைந்துரைத்த கவிதைகளுக்கிணையான காதற் கவிதைகளைக் காளிதாஸனும் புனைந்ததில்லை. ‘முத்தொள்ளாயிரம்’ இயற்றிய பழந்தமிழ்க் கவிஞர்களும் இயற்றியதில்லையென்றால் வேறு என்ன சொல்ல வேண்டும்?