“தருக்கம் வசப்பட்டதும், சுயமான தருக்கமுடிவுகளை உண்டுபண்ணுவோம். அவை நாம் கற்றறிந்தவற்றின் வேறு வடிவங்கள்தாம். ஆனால் நம்மை நாம் சிருஷ்டிகர்த்தா என்றும் ஞானி என்றும் நம்புவோம். நம்மைவிட பலவீனமான மனங்கள் நம்மை வியக்க ஆரம்பிக்கின்றன. சுயதருக்கங்களினால் மனம் நிரம்பி இருப்பதனால் புதிதாகக் கற்பது சிரமமாக உள்ளது. கற்பவைகூட நாம் ஏற்கெனவே உருவாக்கியுள்ள தருக்க அமைப்புக்குள் வந்து பொருந்திவிடுகின்றன. மிகப் பெரும்பாலான தேடல்கள் இங்கேயே நின்றுவிடுகின்றன. ஞானமே அஞ்ஞானமாக ஆகும் நிலை இது.”