பிரம்மம் என்ற ஒன்று இருக்கும் என்றால் அது இல்லாத நிலையும் இருந்தாக வேண்டும். அங்கு இருப்பது என்ன? நான்கு நிலைகளிலும் இருக்கமுடிவது ஒன்றுதான். அது சூனியம். இருத்தல், இல்லாமல் இருத்தல் என்ற இருநிலைகளே மனித அனுபவத்திற்குள் சிக்குபவை. மனித சிந்தனையே இந்த இருநிலைகளின் முரண்பாடுகளால் ஆன ஒன்று. இருத்தலுமில்லை. இல்லாமல் இருத்ததுமில்லை என்ற சொற்களை மனித அனுபவத்தை மீறிய ஒரு நிலையைச் சுட்ட நாங்கள் பயன்படுத்துகிறோம். அதுவே சூனியம் என்பது. சூனியம் என்பது இல்லாமையல்ல. அதற்கும் அப்பாற்பட்ட அதீத நிலை.