“பிரபஞ்சம் எவராலும், எப்போதும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல. அனைத்துமே உள்ளன என்பது எங்கள் தரிசனம். இதை நாங்கள் சர்வாஸ்தி வாதம் என்கிறோம். “அனைத்துமே உள்ளன— ஆனால்” என்று சூத்திரமாகக் கூறுவோம். பிரபஞ்சம் அஜீவங்களும் ஜீவங்களும் அடங்கிய பேரிருப்பு. பொருட்தொகுதி மற்றும் இடம், காலம், சலனம், சலனமின்மை என்று ஐந்து வகை அஜீவங்கள் உள்ளன. ஜீவன், ஆத்மா என்பவை ஜீவங்கள். இவை ஒன்றோடொன்று பின்னியும் பிணைந்தும் உருவானதே இந்தப் பிரபஞ்சம் என்று ஜைன தரிசன மரபு ஊகிக்கிறது.”