உள்ளே இருப்பது எது? இருபத்து ஒன்று நரம்புகள் கொண்ட பேரியாழா? அல்ல. அது எண்ணிலடங்காத நரம்புகளுடன் திசைகளை அடைத்துப் பரவியிருக்கும் மாபெரும் யாழ். ஒரு முனையில் தந்திகள் லயம் கெட்டு அபசுருதி எழுப்புகையிலும் மறுமுனையில் நாத மோனம் கூடியிருக்கும் அற்புத யாழ் அது. பெரும் கடலில் இருந்து சிப்பிமூடியால் நீர் மொள்வதுபோல இந்தச் சிறு யாழில் அதன் நாதத்தை மொண்டெடுக்க முயல்கிறேன். அனந்தரூபனை சிறு மூர்த்தியில் ஆவாகனம் செய்வது போல அந்த யாழை இந்த யாழால் மீட்டுகிறேன்.