வண்டு ஒருகணத்தில் தன்னை இயக்கும் வட்டப்பாதையை உணர்ந்தது. வட்டமென்பது ஒரு நியதி என்று அறிந்தது. தன் மையமின்மையை உணர்ந்தது; அதுவே ஆதிபௌத்த மெய்ஞானம். அந்த வட்டத்தை அனைத்தையும் இயக்கும் மகாநியதியாகக் கண்டது; அதுவே காலமும் வெளியும் சுழலக் காரணம்; அதில் தானும் ஒரு புள்ளி என்று அறிந்தது. அதுவே வைபாஷிக மெய்ஞானம். தூரமென்பதும் காலமென்பதும் வட்டமென்பதும் மையமென்பதும் பிரமையே என்று உணர்ந்தது; அதுவே மாத்யமிக சூனியவாதம். வட்டப்பிரமையையும் வண்டு எனும் பிரமையையும், மையப்பிரமையையும் உருவாக்கும் ஞானாதீதத்தின் இருப்பை ஊகித்தது; அதுவே யோகாசாரம்.