பார்த்திவம் குண்டலினியை விட்டு எழும் கணம் ஞானமும் கர்வமும் சிதறுகின்றன. மனோமண்டலம் சிதறி அலைகிறது. காற்றில் சருகுகள் போல, எண்ணங்கள் பறந்து சுழல்கின்றன. மரணம் நெருங்க நெருங்க சகல பிரமைகளும் உதிர்கின்றன. சகல மாயைகளும் விலகுகின்றன. ஞானியும் பேதையும் பாவியும் புனிதனும் அப்போது ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். குழந்தை நிலை அது. எந்தப் பைத்தியமும் பைத்தியமாக மரணமடைவதில்லை. எந்த நோயாளியும் நோய்நிலையில் சாவதில்லை. மரணம் இரண்டாவது பிறப்பு.