நமது காலப்பிரக்ஞை எட்டும் தொலைவிற்கு அப்பால் இருக்கிறது அவன் காலம். மகாவாக்ய உபநிடதம் சோமனையும் வருணனையும் இந்திரனையும் வாதத்திலே வென்று நீருக்கு அதிபனாக ஆன ஓர் அக்னிதத்தனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அக்னி நிறமானவன் என்று அது அவனை வர்ணிக்கிறது. பிராணாக்னி உபநிடதத்தில் பிருகு முனிவருக்கும் அவனுக்கும் இடையே நடந்த சம்வாதம் கூறப்படுகிறது. சர்வசார உபநிடதத்தின்படி அவன் அக்னியின் மனைவியான நதி ஒன்றில் இருந்து பிரணவத்தை மீட்டெடுத்தவன்.