நிர்குண ரூபமான மனிதனுக்குத் தருக்கம் இல்லை. அவன்முன் பிரபஞ்சம் மகத்தான ஒருமையாகக் காட்சியளிக்கிறது. தருக்கத்தின் முதல் கதிர் பட்டதும் உலகம் பிரிவுபட ஆரம்பிக்கிறது. தருக்கம் என்பதே ஞானம். தருக்கம் வளரும்தோறும் உலகம் பிளவுபட்டு, பிளவுகள் பின்னிச் சிக்கலாகி, தோற்றம் தருகிறது. உடைப்பதும் பிரிப்பதும் பெயரிடுவதும் தொகுப்பதும்தான் தருக்கத்தின் போக்கு. ஆனால் பெருவெளியில் திசை இல்லை. எந்தப் பயணமும் போதிய தூரம் சென்றால் ஒரே புள்ளியையே சென்றடைகிறது. தருக்கத்தின் உச்சியில் மனம் அதருக்க நிலையை அடைகிறது. மகத்தான முழுமையுடன் பிரபஞ்சம் மீண்டும் காட்சி தருகிறது.