எல்லையற்ற நாதப்பெருவெளியில் இந்த விஷ்ணுபுரம் ஒரு சொல்தான். எல்லாச் சொல்லுக்கும் முன்னும் பின்னும் மௌனம் உள்ளது. நாதத்தின் உச்சம் மௌனம். அதில் ஒரு துளியை, அர்த்தம் ஓர் அபூர்வ தருணத்தில் வந்து தொடுகிறது. காலப் பிரவாகத்தில் முடிவின்றி நகரும் அந்த ஒலி அந்தக் கணத்தில் மட்டும் அந்த அர்த்தத்திற்கு உரியதாக ஆகிறது. அந்தச் சுமையுடன் அது காற்றுவெளியில் இருந்து பிரிந்து வருகிறது. அதன் மகத்தான முழுமையும் உள்ஒழுங்கும் சிதறி விடுகின்றன. பிறகு அது தன் முழுமையை, ஆதியைத் தேட ஆரம்பிக்கிறது. ஈரம் பட்ட விதைபோல அதற்குள் இயக்கத்தின் முதல் பிடிப்பு உருவாகி விடுகிறது. தன் கூட்டைப் பிளந்து அது வெளிவருகிறது. முளையாகி,
...more