“இருபது விதமான சத்காய திருஷ்டியினால் ஆகியுள்ளது பிரபஞ்சப் பெருவெளி. அதாவது அகப்பிரபஞ்சத்தில் புறப்பிரபஞ்சம் இருபது விதமாகப் பிரதிபலிக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக விலக்க, மூன்று பேரிருப்புகளையும் தூய நிலையில் அறிந்து மகாதர்மத்தின் ஒருமையை அறிவதே போதிசத்வ நிலை. அதுவே முக்தி. பருவெளித் தோற்றம் எனும் சத்காய திருஷ்டி நீங்கும்போது வெளி எல்லையற்றது என்ற உணர்வு ஏற்படுகிறது. பின்பு ஞானம் எல்லையற்றது என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்நிலை தாண்டினால் தர்மம் எல்லையற்றது என்ற பிரக்ஞை ஏற்படுகிறது. இருகண்ணாடிகளும் பரஸ்பரம் பிரதிபலிக்காத நிலையே வெறுமை, சூனியம். அதையே விமுக்தி அல்லது விடுதலை என்கிறோம்.”