“புருஷ தத்துவம் என்பது தூலமான, ஏகமான தன்னிலையாகிய ஒரு பேரிருப்பைப் பற்றிப் பேசும் ஒரு சிந்தனைமுறை. அந்த ஏகஇருப்பின் உட்கூறுகளே மானுட சேதனைகள் என்கிறது அது. சாங்கியம் பௌதிகப் பிரபஞ்சமெனும் பன்மைக்கு ஆதாரமாக மூலப்பிரகிருதி என்ற ஒருமையைக் கற்பனைசெய்தது. அதன் எதிர்வினையாகவே அது மானுட மனங்கள் என்ற பன்மையின் ஆதாரமாக புருஷன் என்ற ஒருமையையும் கற்பனைசெய்தது. ஆலயவிஞ்ஞானம் என்பது ஓர் இருப்பல்ல. அது ஓர் ஒழுங்கமைவு. அதன் நியதியையே பௌத்தம் மகாதர்மம் என்கிறது.”