"இரவிலே அகண்ட வானத்திலே மின்னும் நட்சத்திரங்களெல்லாம் தங்களுடன் வந்து சேரும்படி என்னைக் கண் சிமிட்டி அழைப்பதுபோலத் தோன்றும். அவற்றின் அழைப்புக்கிணங்கி நானும் மனோரதத்தில் ஏறி உயர உயரப் பறந்து செல்வேன். சில சமயம் சந்திரனைப் பார்த்தால் எனக்கு அன்னப் பட்சியைப் போலிருக்கும். அதன்மேல் ஏறிக் கொண்டு நட்சத்திரங்களுக்கிடையே வட்டமிட்டுக் கொண்டிருப்பேன். சில சமயம் நிலாமதியானது ஒரு அழகிய சிறு தோணியைப்போல் எனக்குத் தோன்றும். அதன்மேல் ஏறிக் கொண்டு வானமாகிய நீலக்கடலில் மிதந்து வருவேன். வழியிலே தென்படும் நட்சத்திரச் சுடர் மணிகளையெல்லாம் கைநிறைய அள்ளி அள்ளி மடியிலே சேர்த்துக் கட்டிக்கொள்வேன்.