"உலகத்திலே எதைப் பார்த்தாலும் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமாயிருக்கும். காலையிலே எழுந்ததும் தகதகவென்று பிரகாசித்துக் கொண்டு உதயமாகும் தங்கச் சூரியனைக் கண்டு ஆனந்திப்பேன். மாமரங்களில் தளிர்த்திருக்கும் இளஞ் சிவப்பு நிறத் தளிர்களைக் கண்டு களிப்படைவேன். மரம் செடி கொடிகளில் புஷ்பிக்கும் விதவிதமான வர்ண மலர்கள் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிப்பதுண்டு. செடி கொடிகளுக்கு மத்தியில் ஆடிக்கொண்டே பறக்கும் பட்டுப் பூச்சிகளை ஓடிப் பிடிக்க முயல்வேன். அவை என் கையில் அகப்படாமல் தப்பிக் கொள்ளும்போது கலீரென்று சிரிப்பேன்.