வயலட்'s Blog, page 2
April 10, 2024
பேசும் மொழிபெயர்ப்பாளர்கள்
மொழிபெயர்ப்பு என்ற சொல்லை நாம் இரு வடிவங்களில் பயன்படுத்துகிறோம். மொழிபெயர்க்கப்பட்ட பிரதியைக் குறிக்கவும், மொழிபெயர்ப்பு எனும் செயல்பாட்டைக் குறிக்கவும். மொழிபெயர்ப்பு என்பது ஒரு செயல்பாடென்றால், மொழிபெயர்க்கப்பட்ட பிரதியில் அது என்னவாக மிஞ்சியிருக்கிறது என்பதை யோசிப்பது ஒருவகையில் மயிர்பிளக்கும் பயனில்லா விவாதமாகத் தோன்றலாம், ஆனால் நாம் எப்படி மொழிபெயர்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள இது பயன்படும்.
ஒரு கவிதை மொழிபெயர்க்கப்பட அது தன்னகத்தே மொழிபெயர்ப்புச் சாத்தியங்களைக் கொண்டிருக்க வேண்டுமா? ஒரு மொழிபெயர்ப்பாளர் கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை இன்னொரு மொழியில் திருப்பச் சொல்வதன் மூலம், சொல்லப்படாத ஒன்றை மீட்டுருவாக்கம் செய்கிறாள் அல்லது செய்துவிட்டதாக நம்புகிறாள். மொழிபெயர்ப்பைப் படிக்கும் வாசகி மூலத்தைப் படிக்கப் போவதில்லை என்பது ஒரு பொது அனுமானம். தன்னிடம் இருக்கும் கவிதையுடன் மட்டுமே வாசகிக்கு தொடர்பு. எப்படி மூலத்துக்கு மொழிபெயர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லையோ, அதேபோல் இந்த மொழிபெயர்ப்புச் செயல்பாட்டுக்குப் பிறகு மொழிபெயர்க்கப்பட்ட பிரதிக்கும் மூலத்தால் எந்த பாதிப்பும் இல்லைதானே?
நாம் எதனை மொழிபெயர்க்கிறோம்? நிச்சயம் சொற்களை அல்ல. சொற்கள் மட்டும் எதையும் உருவாக்குவதில்லை. அர்த்தத்தை என்றால், ஒரு பிரதிக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோமா? மொழிபெயர்ப்ப்பு இரு மொழிகளுக்குள் இருக்கும் தொடர்பை காட்டுவது என்கிறார் வால்டர் பெஞ்சமின். எல்லா மொழிகளுக்கும் இடையே பொதுவானதொரு அமைப்பு மனித மூளைக்கூறின் பகுதியாக அமைந்திருக்கிறதா? அதனால்தான் மொழி செயல்படுகிறதா?
மொழி அல்லாது மொழிபெயர்ப்பில் பங்காற்றும் முக்கியமான ஒன்று மொழிபெயர்ப்பாளர் என்ற தனிநபர். ஒவ்வொரு தனிநபரைப் போல மொழிபெயர்ப்பாளரும் பல முன்முடிவுகள், அரசியல் கருத்துகள், வாழ்க்கை அனுபவங்கள் இவற்றின் கலவையாகவே இருக்கிறாள். அப்படி ஒருத்தி ஏன் மொழிபெயர்க்க வேண்டும்? ஏ. கே. ராமானுஜன் பொறாமையைக் கை காட்டுகிறார். பொறாமை, ஒரு நல்ல தூண்டுதல். அன்பு அல்லது காதல் மற்றுமொரு தூண்டுதல். பிரபலமான ஒன்றும் கூட. ஒரு பிரதியை மொழிபெயர்ப்பாளரை விட மிக நெருக்கமாக வா(நே)சிக்கக்கூடிய ஒரு வாசகர் இல்லை. ஒருவகையில் அதுவும் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டும் செயல்பாடு. இவையன்றி மூன்றாவதொரு தூண்டுதல் விளையாட்டு. எழுத்தில் விதிகள் இல்லை, அல்லது நீங்களே வகுத்துக் கொள்பவை தாண்டி வேறு விதிகள் இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு அப்படியல்ல. அதற்கு மொழிபெயர்ப்பின் விதிகள் இருக்கின்றன. இரு மொழிகள், இரு கலாச்சாரங்களின் எல்லைகள், விதிகள். மொழிபெயர்க்கப்படும் பிரதியின் விதிகள். அது இவை எல்லாவற்றோடும் ஆடும் ஒரு விளையாட்டு. மிகவும் சுவாரஸ்யமான மகிழ்ச்சியான வேடிக்கையான விளையாட்டு. உண்மையில் இந்த விளையாட்டே பொறாமை, காதல் போன்றவற்றை விட மிக அடிப்படையான மானுட உணர்வாக இருக்கலாம். அதுவே பல சமயங்களில் மொழிபெயர்ப்புக்கு மீண்டும் இழுத்து வருகிறது.
எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பொதுவான அம்சம், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் யோசிப்பதன் மனப் பிளவுகள். ஏகேஆர் தனது டைரியில் 1982இல் எழுதிய குறிப்பில் எழுதுவதைப் பற்றி இப்படிக் குறித்திருக்கிறார்.
“…மூன்று மொழிகளை பயன்படுத்துவதும் ஒத்துப்போகச் செய்வதுமே என் முழுநேர வேலை; ஆங்கிலத்தில் எழுது-கொஞ்சம் கன்னடத்திலும்; கன்னடம், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்; என் ஆங்கிலமும் தமிழும் கன்னடமும் ஒன்றிலிருந்து ஒன்று அடைபட்டுவிடாதபடி எழுது. இருந்தாலும் எழுதும் மொழி தேர்வல்ல. நீண்ட, சிக்கலான, தனிப்பட்ட, பல வகையான வரலாறுகள் நம் மொழியைத் தேர்வுசெய்கின்றன; மொழி நம்மை தேர்வு செய்வதாகவும் தோன்றுகிறது. ஒரு கவிதை உருவில்லாமல் வந்து ‘உனக்கு மூன்று மொழி தெரியும், என்னை எதில் எழுதுவாய்?’ என்று கேட்பதில்லை. கனவில் தோன்றும் கிராமத்துக் கடவுளைப் போல, முழு ஆடையணிந்து, உன் – அவள் தாய்மொழியில் அலறியபடி தோன்றுகிறது, அல்லது அவளுக்கு உயிரளித்த மொழியில். பின் அவளை சமாதானப்படுத்தி, கெஞ்சி, காத்திருந்து, கஷ்டப்பட்டு வேலை செய்து, ஓரிரு ஆடுகளை பலியிட்டு, அவளை இருக்கச் செய்யவேண்டும். உனக்கு மட்டுமின்றி, ஊரில் உள்ள பிறருக்கும் இருக்கச் செய்யவேண்டும்.”
ஏ.கே.ராமானுஜன்எழுதுபவருக்கு தெய்வம் கனவில் சன்னதமாகிறதென்றால், மொழிபெயர்ப்பாளர் எழுந்துள்ள தெய்வத்தை வேறு ஊரில் கொண்டுவந்து இருத்தவேண்டும். புதிய பூசைகளை, ஏற்கனவே இருக்கும் பூசைகளை இதற்குப் பயன்படுத்தவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அவர் கொண்டு வந்த தெய்வத்தை இழந்து புதிய தெய்வத்தையே உருவாக்குகிறார். இந்த செய்கையை எப்படிப் புரிந்துகொள்வது?
அதற்கு மொழிபெயர்ப்பாளரின் குரலைக் கேட்கவேண்டும். பெருமாள் முருகனின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜனனி கண்ணன் இப்படிச் சொல்கிறார். “மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளரின் கருத்தை முன்வைக்காமல் ஆசிரியரின் கருத்தை நிலைநிறுத்துவது முக்கியமாக இருக்கவேண்டும்.” தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார். “மூல ஆசிரியருக்கு மொழிபெயர்ப்பாளர் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். அவரது தொனி, மொழி, நடை என்று எல்லாவற்றையும் அப்படியே கொண்டுவர வேண்டும்.” மேலும் “மொழிபெயர்ப்பு என்பது ஓர் இணையான படைப்பாக்கம். வாசகரைப் படைப்பாளியிடம் மொழிபெயர்ப்பாளர் கொண்டுசேர்க்க வேண்டும். படைப்பாளியை வாசகரிடம் கொண்டுவருதல் இலக்கிய மொழிபெயர்ப்பாகாது” என்கிறார்.
இருவர் சொல்வதிலும் ஆசிரியரின் குரலும் தொனியுமே முன்னிலை வகிக்கின்றன. மொழிபெயர்ப்பின் அடிப்படை அதுதான் என்றாலும், குறிப்பிட்ட மொழிபெயர்ப்பாளரின் பங்கு படைப்பூக்கமிக்கது. ஒரு மொழிபெயர்ப்பாளரின் குரல்(கள்), தொனி(கள்) வழியாகவே நாம் படைப்பை வாசிக்கிறோம். அவை அந்தப் படைப்பை எப்படி உருமாற்றுகின்றன என்பதை நாம் யோசிக்கிறோமா?
இன்னொரு தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளர், சில கதாபாத்திரங்களின் தமிழுக்கு இணையான ஆங்கிலத்தை எழுத முயன்றதாக சொல்லியதையும் நேரில் கேட்டிருக்கிறேன். இப்படி ஒரு ‘இணை மொழி’யை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, உருவாக்கவே படுகிறது. அது கவித்துவ நடையாக இருக்கலாம், பேச்சு வழக்காக இருக்கலாம். எந்த ஒரு எழுத்தாளரின் ‘வட்டார வழக்கும்’ அந்த வட்டார வழக்கை அவர் எவ்வாறு புனைவில் மீட்டுருவாக்குகிறார் என்பதைப் பொறுத்து மாறுவதைப் போல. எனவே அந்த இணை மொழி, ஒரு இணை மொழியாக எப்படி வேலை செய்கிறது? இவையே இந்த மொழிபெயர்ப்பாளர்களின் முழுமையான கருத்து என்று சொல்லிவிட முடியாது. ஆனால், எழுத்தாளர்களின் குரலைப் பிரதிபலிக்க முயலும் இந்த மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தில் மொழிபெயர்ப்பாளரின் குரல் கேட்கிறதா என்றால் ஏதோ குறைவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனை முழுமையாக புரிந்துகொள்ளாதவரை நாம் மொழிபெயர்ப்பு என்னும் செயல்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. தனித்துவமான நடையும் மொழியும் கொண்ட உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் நாம் மொழிபெயர்ப்பாளரிடம் என்ன எதிர்பார்க்கிறோம், ஒரு மொழிபெயர்ப்பாளரின் சுதந்திரங்களும் கட்டுப்பாடுகளும் என்ன என்பதை நாம் இன்னும் செறிவாக அணுகமுடியும்.
ஷோகன் (Shōgun) அமெரிக்கர்களால் தயாரிக்கப்படும், நிறைய ஜப்பானியர்கள் நடிக்கும் பங்கேற்கும் ஒரு தொலைக்காட்சித் தொடர். இதே தலைப்பிலான ஜேம்ஸ் க்ளேவலின் ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டது. குழப்பமான அரசியல் சூழலும், போர்ச்சுகீசியர்களும் நிறைந்த 1600களின் ஜப்பானுக்கு வரும் ஒரு ப்ரொட்டெஸ்டண்ட் ஆங்கிலேய கப்பலோட்டி, ஜப்பான் அரசியலின் ஒரு முக்கியமான நபரான டொரனாகாவுடன் அணுக்கமாவதே கதை. கதைப்படி ஜப்பானில் இருக்கும் போர்ச்சுகீசியர்களும், அவர்களுடன் பழகிய அங்கிருக்கும் கிறுஸ்துவர்களும் போர்ச்சுகீஸ் மொழியே அறிந்திருக்கிறார்கள். அவர்களுடன் கப்பலோட்டி போர்ச்சுகீஸில் பேசுகிறான். தொலைக்காட்சியில் அது நமக்கு ஆங்கிலமாகவே கேட்கிறது. இரண்டு நிலையிலாக மொழிபெயர்ப்பு நடக்கிறது. கதைக்குள்ளேயேயும் வெளியேயுமாக.
மாரிகோ எனும் ஒரு முக்கிய கதாபாத்திரமும், அவ்வப்போது வரும் ட்ஸூஜி(மொழிபெயர்ப்பாளன்) எனும் கத்தோலிக்க பாதிரியும் மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். இந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருவருக்குமே தங்களுக்கென நோக்கங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையில் மொழிபெயர்க்கிறோம் என்ற போதம் இருக்கிறது. அதை விட்டுத்தருவது அவர்களுக்கோ, அவர்கள் மொழிபெயர்ப்பவர்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய சூழலிலும் அவர்கள் செயல்படுகிறார்கள். ஷோகன் தொடரில் மொழிபெயர்ப்பாளர்கள் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சமயங்களில் மொழிபெயர்க்கிறார்கள். கலாச்சார வித்தியாசங்களுக்கு ஏற்ப விவரணைகளைக் கூட்டுகிறார்கள், சில விசயங்களை சொல்லாமல் தவிர்க்கிறார்கள், மாற்றிச் சொல்கிறார்கள். மொழிபெயர்ப்பு என்பது வரலாற்றில் அப்படியாக ஒரு அரசியல் கருவியாகவும் இருக்கிறது.
நவீன இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது நிச்சயம் இதிலிருந்து மாறுபட்டதே. நாம் இங்கே வேறு சில விதிகளின் கீழே செயல்படுகிறோம். இந்த வெளியில் நாம் மொழிபெயர்ப்பாளர்களது அரசியல் அவர்களது தேர்வுகளுடனே நின்றுவிடுவதாக அடிக்கடி நம்புகிறோம், அல்லது விரும்புகிறோம். ஆனால் பொதுவான / சீர்படுத்தப்பட்ட (standardized) மொழி இருப்பதாக எண்ணுவது போலஇதுவுமொரு கற்பனையே. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சுகுமாரன் சொன்னதுபோல ‘மொழிபெயர்ப்பு ஒரு நன்றி வேண்டாத செயல்’ என்றாலும், இது ஒருவகை பொறுப்புத் துறப்பு என்றும் சொல்லலாமா? ஒரு எழுத்தாளரை இலக்கணம் வழுவாமல் எழுதவேண்டுமென நாம் நிர்பந்திக்க மாட்டோம் என்கையில், மொழிபெயர்ப்பாளரை நிர்பந்திக்க முடியுமா? அல்லது எது மொழிபெயர்ப்பாளரின் இலக்கணம்? இங்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளரை விட ஒரு நடிகருக்கு நெருக்கமாக இருக்கிறாரோ என்று தோன்றலாம். எழுத்தாளரை விட பல விதமான கதாபாத்திரங்களுக்கு உயிரளிக்கிறாரா என்பதை யோசிக்கலாம். ஆனால் நடிகரோ, எழுத்தாளரோ, மொழிபெயர்ப்பாளரோ கதாபாத்திரங்களுக்கு தங்களுடைய சாரத்திலிருந்தே உயிரூட்டுகிறார்கள். அந்த சாரம் குறித்தே நாம் பேசுகிறோம்.
பல இடங்களில் நான் ஏ.கே.ராமானுஜத்தை நினைத்துக் கொள்கிறேன். மொழிபெயர்ப்பாளர்கள் இரு கலாச்சாரங்களுக்கு இடையில் பணியாற்றுகிறார்கள் என்பதன் முழுமையான பிரதிபலிப்பு ஏ.கே.ஆர்தான். ஒப்பீட்டுக்கு இந்தியாவில் தனது தாய்மொழி பேசும் பிராந்தியத்தில் வசித்தபடி, அதிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் ஒருவர், கலாச்சார வித்தியாசங்களுக்கு இடையே மொழிபெயர்க்கிறார் என்றாலும் அது மிகக்குறைந்த இடைவெளி. ஆங்கிலம் பேசும் இந்தியர்களுக்கும், ஆங்கிலம் பேசாதோர்க்கும் உள்ளது போன்ற இடைவெளி என்று சொல்லலாம். அதன் கலாச்சார இடைவெளி வர்க்கங்களுக்கு இடையிலான வித்தியாசம் மட்டுமே. ஏ.கே.ஆர் காலங்கள், கலாச்சாரங்கள், கண்டங்களுக்கு இடையில் மொழிபெயர்த்தார். இதை அவர் முழுக்கவும் அறிந்திருந்தார்.
இன்னொரு பக்கம் ஏ.கே.ஆர் ஒரு முழுமையான கவிஞர். அவரது கவிதைக் குரல் தனக்கென முழு வடிவம் கொண்டது. ஏ.கே.ஆர் அதன்மேல் நின்றே மொழிபெயர்க்கிறார். அந்த குரல் வழியாகவே தான் மொழிபெயர்ப்பவற்றை எழுதுகிறார். இவற்றை மிகத் தெளிவாக அணுக உதவிய ஒரு தமிழ் மொழிபெயர்ப்புக் குரல், அக்கமகாதேவியின் வசனங்களை மொழிபெயர்த்த பெருந்தேவியின் முன்னுரை. அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“ஏ.கே. ராமானுஜனின் வசன மொழியாக்கத்துக்கு அதற்கேயான சிறப்பம்சங்கள் இருப்பதை மறுக்க முடியாது. நவீன ஆங்கிலக் கவிதைப் பாணியின் எளிமையும், வார்த்தைத் தேர்வில் உலகார்ந்த தன்மையும் கொண்டிருப்பது அவருடைய மொழியாக்கம் என்றாலும், சென்னமல்லிகார்ச்சுனன் என்ற பெயரை அவர் மொழிபெயர்த்த விதம் எனக்கு உவக்கவில்லை. ராமானுஜனின் “ஓ மல்லிகையைப் போன்ற வெண்மையான கடவுளே” (O Lord, white as jasmine) என்பதற்கும் சைதன்யாவின் “சென்னமல்லிகார்ச்சுனனே, மென்-மல்லிகையே” (Channamallikaarjuna, jasmine-tender) என்ற அழைப்புக்கும்தான் எத்தனை தொலைவு!”
எனக்குத் தனிப்பட்ட முறையில் ராமானுஜத்தின் அக்கமகாதேவியும் மனதுக்கு நெருக்கமே. பனிவிழும் வனங்களின் தனிமை போல் பிரம்மாண்டமான கடவுள் அவளுடையது. அதற்கு வெண்மை பொருத்தமான சொல்லே. ஒரு மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்ட ‘வாசகர்களுக்காக’ மொழிபெயர்க்கிறார் என்பதை விட, இலக்கிய பிரதியை மொழிபெயர்ப்பாளர் தனது குரலில் மீட்டுருவாக்குகிறார் என்பதே இங்கு உணரவேண்டியது.
அதே முன்னுரையில் பெருந்தேவி “கவிதையின் மீளுருவாக்கத்தில் கவிதை தங்கவேண்டும்” என்பதைக் குறிப்பிடுகிறார். “இத்தொகுப்பை அக்கமகாதேவியின் வசனங்களுக்கான என் பொருள்கோடலாகவும் வாசிக்கலாம்” என்றும் சொல்கிறார். இவை மிக முக்கியமானவை. கலைநுட்பத்தில் மொழிபெயர்ப்பு குறைந்ததல்ல என்பதை நாம் ஒப்புக்கொண்டாலும், அதை அடுத்து மொழிபெயர்ப்பாளரின் தனித்தன்மை/குரல் மொழிபெயர்ப்பில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் விரிவாகப் பேசியறிவது நம்மை இன்னும் முன்னகர்த்திச் செல்லும்.
நீலகேசி – சிவசங்கர் எஸ்.ஜே

சமீபத்தில் ஒரு கான்வாசில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது, சில அடுக்குகள் பச்சையும் பொன்னும் மாற்றி மாற்றி தீட்டினேன். எதேச்சையாக அதில் பட்டின் சாயல் வந்துவிட்டது. உடனே ஏதோ ஒரு மாயாஜாலத்தை உருவாக்கிய உணர்வெழுந்தது. அதை தொட்டுப் பார்க்கத் தோன்றியது. சில நாட்கள் கழித்து சுப்திகா எம்மின் “அலைகளால்” என்ற புகைப்படக் கண்காட்சியில் பார்த்த மஞ்சள் பொன்னிற புடவையொன்றின் படம் அதே உணர்வை ஏற்படுத்தியது. நீலகேசியை சிவசங்கர் எஸ்.ஜே. பட்டு நீலத்தின் விவரணையோடு தொடங்குகிறார்.
பொன் நீலத்திலிருந்து ‘எனிக்கொரு சரித்ரம் இல்லடா பொன்னுமோனே’ என்ற குரலுடைய கனவாக நீலகேசி தொடங்குகிறது. கொடைவிழா சம்பவங்கள் ஒரு ஆய்வாளனின் ஆவணப்படுத்தலாகவும், அந்த ஆவணப்படுத்தலே கதையாகவும் தொடர்ந்து விரிகிறது. ஒரு சிறுமழையாக, முதல் கனவிற்கு சில பதில்களை சொல்லும் உரையோடு முடிகிறது. சாதிக் கொலையொன்றில் பல கதைவடிவங்களை பதிவுசெய்யும் நீலகேசி, சிவசங்கர் தன் பின்னுரையில் சொல்வது போல சாதிக்கான நிவாரணமான இணக்கத்தை முன்வைக்கிறது.
எனக்கு இச்சமயத்தில் நீலகேசியில் பட்டு நீலமே மிக அணுக்கமாகப் படுகிறது. சமீபமாக உண்மையை எழுதுதல் என்ற கருத்தாக்கம் குறித்து நிறையவே யோசிக்கத் தோன்றியிருக்கிறது. நேரடியாக உலகை நம் பார்வையிலிருந்து, நம் பார்வையின் எல்லா கோளாறுகளுடனும், அப்பட்டமாக சித்தரிப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஆனால் அந்தக் கவர்ச்சி சீக்கிரமே மங்கிவிடுகிறது. நாம் உலகை பல பார்வைகளில் இருந்தே பார்க்கிறோம். காதல் நமக்கு இன்னொரு ஜோடிக் கண்களை வழங்குவதாலேயே அற்புதம் நிறைந்ததாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியின் முன் இந்த ஒற்றைப்படை உண்மை அவ்வளவு மின்னுவதில்லை.
நீலகேசியில் இந்த அற்புதமே நிகழ்ந்திருக்கிறது. நமது பார்வையின் எல்லைகளுக்கு மேல் ஒரு நிகழ்வைக் காண முடிகிற அற்புதம். பல கதைகளால் நெய்யப்பட்ட, பட்டு நீலத்தின் ஒளி. அறிதல் என சொல்லப்படும் அனுபவம் எந்த ஒரு அளவிலும் நமக்கு வாய்க்கும்போது நிகழும் மகிழ்ச்சி அதுவே. நீலகேசியின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது சில எதிர்கருத்துகள், கேள்விகள் மனதில் தோன்றியபடி இருந்தாலும், அதில் தொனிக்கும் அறிதலின் அல்லது இணக்கத்தின் மகிழ்ச்சி மனம் நிறையச் செய்வது.
சமகாலம்-வரலாறு-நினைவு இவற்றை ஒன்றின் வழி இன்னொன்றைப் பார்த்தறியும் ஒரு கதவாக நீலகேசி இருக்கிறது. ஆய்வுப் புனைவென அமைந்திருக்கிற இதில் கதைகள் மெய்யாகவும், கதை சொல்கிற கேட்கிற நிகழ்வுகள் கதையாகவும் அமைந்திருப்பதால், நம்மில் உருவாகும் உணர்வுகளும் மெய்-புனைவு என்ற இரு நிலைகளை தொடர்ந்து யோசிக்கச் செய்கின்றன. இது வழியாக நாம், நமது, பிறர் என இயல்பாகப் புழங்கும் விசயங்களை யோசிக்க இட்டுச் செல்கிறது.
நீலகேசியின் வடிவத்தை, ஓவியர் செசான் செயிண்ட் விக்டோர் மலையை வரைந்த ஓவியங்களோடு ஒப்பிடலாம். நமக்கும் ஓவியத்துக்கும், நமக்கும் வண்ணங்களுக்கும், நம் உணர்வுகள் வழி நாம் அறிவதற்கும் – அவற்றைக் காட்சிப்படுத்துவதற்குமான உறவை சில வகைகளில் மீள் வரையறை செய்தவர் என்று செசானை சொல்லலாம். செசான் அந்த மலைகளின் உண்மையை வரைய முயன்றார் என்று யோசித்தால், அது அவற்றை அப்படியே புகைப்படம் போல பிரதியெடுப்பதாக இருக்கவில்லை. நாம் காணும்-அறியும் விசயங்களை பல வழிகளில் காட்சிப் படுத்தலாம் – நேரடியாக; அதைச் சுற்றி இருப்பவற்றைப் பேசுவதன் வழியாக; அதை நாம் அறிந்த வடிவங்களிலும் தர்க்கங்களிலும் பொருத்தி விவரிப்பது வழியாக. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் இடையில் உண்மையை விவரிப்பதற்கான ஏக்கம் நமக்குள் நிறைந்திருக்கிறது. அது நாம் மட்டுமே அறிந்த உண்மையாகவோ நம்மால் அறியவே முடியாத உண்மையாகவோ இருக்கலாம்.
செசான் கிட்டத்தட்ட இருபதாண்டுகள் காலத்தில் இதையே முயற்சித்தார். ஒளியைத் தீட்டுவதன் வழி, தூரிகையை முடிந்தவரை லேசாகப் பயன்படுத்துவதன் வழி, செசான் மீண்டும் மீண்டும் மவுண்ட் செயிண்ட் விக்டோரில் எதை வரைய முயன்றார்? அதை வெறும் உண்மை என்று சொல்லிவிட முடியுமா? மலையை மலை பற்றிய நம் அறிதலுக்கு வெளியே எப்படி பார்ப்பது? பாறையை வெறும் பாறையாக – சிசிஃபஸோ அல்லது சார்த்தரின் இருத்தலியல்வாதமோ இல்லாமல்- எப்படி பார்ப்பது? அடையாளமில்லாத இடத்தில் ஒவ்வொன்றையும் எப்படி சந்திப்பது?
அடையாளம் என்ற வார்த்தை தனிப்பட்ட, சமூக எனும் இரு நிலைகளிலும் கனத்த அர்த்தங்கள் கொண்டதாய் மாறியிருக்கிறது. உண்மை, அடையாளம் போன்றவை தொடர்புடையவை என நாம் கண்டறிந்திருக்கிறோம். நீலகேசியின் ஆய்வு இதைக் குறித்த செறிவான பார்வையை வழங்குகிறது.கதைசொல்லியை ஆய்வாளனாக, கதாபாத்திரமாக, அமைதியாக கதை சேகரிப்பவனாக பல பார்வைகளில் அறியத் தருவதன் வழியாக சிவசங்கர் நமக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறார். அறிதல் தரும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும் ஒன்றாக அந்த அனுபவம் இருக்கிறது.
நீலகேசி – நீலம் வெளியீடு
March 5, 2024
ஒரு நகரத்துப் பெண்ணின் சித்திரம்
நேற்று ஒரு இலக்கிய விழாவில் பார்த்த அந்தப் பெண்ணின் பக்கத்தை இன்ஸ்டாகிராம் பரிந்துரைத்ததைப் பற்றி உன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் போகவேண்டிய இடத்துக்கு இன்னும் ஒரு மணிநேரம் ஆகும். ஆட்டோவில் உனக்கு லேசாக வாந்தி வருவது போலிருந்தது. அவ்வளவு புகை இந்த ஊரில். அந்தப் பெண்ணுக்கு மிக அழகிய முகம். உலகம் அழகானவர்களால் நிரம்பியிருக்கிறது. நான் ஏன் அவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. இதற்குப் பெயர்தான் கிரஷ்ஷா? உன்னிடம் சொல்லியதை நான் ஏன் எழுதுகிறேன் என்று எனக்குத் தெரியும். நான் உண்மையை எழுதுகிறேன். சொல்லும்போது கொஞ்சம் சிரிப்பு வருகிறது. ஆனால் கார்ல் ஓவ் நாஸ்கார்டின் நாவல்களைப் படித்து லேசாக மூளை குழம்பியிருக்கும் இந்த நிலையில் வேறு எதை எழுதுவது என்று தெரியவில்லை. நம்மைச் சுற்றி எங்கும் புனைவாக இருக்கிறது. எனவே நான் உண்மையை எழுதுகிறேன் என்று கார்ல் ஓவ் எழுதிய ஆறு நாவல்களில் இரண்டைப் படித்துவிட்டு நானும் சற்றே குழம்பிய நிலையில் இருக்கிறேன். நேற்று அந்த இலக்கிய விழாவில் ஒரு கவிஞர் நிலம் இல்லாத படைப்புகள் போலியானவை என்பது பற்றிப் பேசினார். இலக்கியத்தில் புனைவின், அபுனைவின் உண்மைத்தன்மை பற்றியும் பேசப்பட்டது. உண்மை மிக முக்கியமானதாம். அதே அளவு நிலமும். நான் நிலத்தை எழுதவேண்டும். ஆனால் எனக்கென்று நிலமில்லை. எனக்கென்று வீடில்லை. இந்தக் கதையை நான் வாழ்ந்த எந்த ஊரிலும் எழுதிவிட முடியும், பெரிதாக வித்தியாசம் எதுவும் இருக்காது. எனவே நிலம் பற்றி எழுத எனக்கு எதுவுமில்லை. நிலம் என்பது சொந்தமாக இருக்கும் நிலம் மட்டுமல்ல. நிலம் என்பது வளமாக மட்டுமல்ல, உங்கள் மீது செலுத்தப்பட்ட ஒடுக்குமுறையாகவும் இருக்கலாம்.
நிலம் என்பது காதலாக இருக்கலாம். பிறர் ரிலேட்டபிள் என்று கருதும் இன்பம் துன்பம் எதுவாகவும் இருக்கலாம். நிலம் என்பது நீ யார் என்ற அதே கேள்விதான். நிலம், உடல், இனம் பலவும் புனைப்பெயர்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. கதை என்றால் முரண் இருக்க வேண்டும் என்றார் ஒரு நண்பர். நான் உர்சுலா லெ குவினின் கட்டுரை ஒன்றை நினைவூட்டினேன். கதை என்பது பையில் பொறுக்கிப் போட்ட விதைகளாக, பீச்சில் சேகரித்துக் கைவிட்ட கிளிஞ்சல்களாக இருக்கலாம் என்றேன். க்ளாரிஸ் லிஸ்பெக்டரின் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் வித்தியாசம் சொல்ல முடியுமா. நான் என் சோம்பேறித்தனங்களுக்குக் காரணங்கள் கற்பிக்கிறேனா? இருக்கலாம்.
செத்த எலியைப் பரிசளிக்கும் கடவுள்கள் இருக்கும் இந்த உலகத்தில் வேறு என்ன செய்ய முடியும். வாழ்க்கையைப் பற்றி ஏதுமறியாத அந்தச் சின்னஞ்சிறு சிறுவன் விளையாடப் போகும் இடத்தில் கடவுள் ஒரு செத்த எலியைப் போட்டு வைத்திருக்கிறார். அம்மா என்றோ அப்பா என்றோ கத்தாமல் அவன் கடவுளின் பெயரைச் சொல்லிக் கத்துகிறான். சுற்றியிருப்பவர்களுக்குக் கூடக் கேட்காமல் தொண்டையிலேயே அடைபட்டுப் போய்விட்ட அந்தக் குரல் கடவுளை மருகச் செய்கிறது. அச்சச்சோ பயப்படாதே சிற்றுயிரே என்றபடி அந்த எலிக்கு உயிர்கொடுத்து ஓடச் செய்கிறார். எலும்புகள் வெளித்தெரிய காய்ந்துகிடந்த எலி எழுந்தோடுவதைக் கண்ட சிறுவன் பயத்தில் உறைந்துபோனான்.
அவன் தன்னைவிட வயதுமூத்த நான்கு நண்பர்களோடு அங்கே கால்பந்து விளையாட வந்திருந்தான். அவனுக்குப் பெங்காலியும், கொஞ்சம் இந்தியும் மட்டும்தான் தெரியும். அவனோடு விளையாட வந்திருந்த எங்கள் நால்வருக்கும் தமிழும், ஆங்கிலமும் கொஞ்சமே கொஞ்சம் இந்தியும்தான் தெரியும். கால்பந்தைக் கொண்டு ஒரு சதுர இடத்தில் நாங்கள் விளையாட முயலும் விளையாட்டின் விதிகள் அவனுக்குப் புரிவதாயில்லை. இந்தச் செருப்பு வேறு பந்தை உதைக்கும்போதெல்லாம் பந்தை விட உயரமாகப் பறந்துபோகிறது. அவனிடம் ஒரு ஷூ இருக்கிறது. அதைப் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அது கிழிந்துவிட்டால் ஸ்கூலுக்கு எதைப் போட்டுப் போவாய், செருப்பையே போட்டு வா என்று நாங்கள் சொல்லிவிட்டோம்.
நாங்கள் நால்வரும் ஒரு மைதானத்துக்குச் சென்று விளையாடி நீண்ட காலம் ஆகிறது. உலகக்கோப்பை ஆர்வத்தில் வாங்கிய பந்து சும்மா கிடக்கிறதே என்று அந்த ஞாயிறு மதியத்தில் விளையாட வந்திருந்தோம். மைதானம் முழுக்கக் கூட்டமும் தூசியுமாக இருந்தது. நிறையச் சிறுவர்களும் ஆண்களும் க்ரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பால், பால் என்ற குரல்கள் எங்கும் பந்தின் பின் ஓடிக்கொண்டிருந்தன. சிறுவன் உதைத்த பந்தில் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களின் க்ரிக்கெட் பந்து பட்டுப் பறந்து, எங்களில் ஒருவரின் தோளில் அடித்துப் பறந்தது. தோள்பட்டையைத் தேய்த்துக்கொண்டே அவர் சிறுவனைப் பார்த்தார்.
எதன் பக்கத்திலோ போகப் பயந்துகொண்டே உறைந்து நின்றிருந்தான். டேய் இந்தப் பக்கம் வா நீ… அய்யோ தமிழ்லயே பேசிக்கிட்டு இருக்கேன் இவன்கிட்ட என்றபடி அவனைக் கையைப் பிடித்து இந்தப் பக்கம் வா என்று இழுத்துவிட்டு அங்கே பார்க்க, ஒரு செத்த எலி காய்ந்து கிடந்தது. காலால் எத்தி அதைத் தள்ளிவிட்டார். பின் அங்குக் கிடந்த ஒரு காக்கி நிறக் காகிதத்தை எடுத்து எலியை மூடி வைத்தார். இப்போது சிறுவன் மைதானத்தின் களேபரத்தில் ஆழ்ந்திருந்தான். தூரத்தில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவர்கள் மீதே அவன் கண்ணிருந்தது. பளபளக்கும் சில்வர் காகிதங்கள் சலசலக்க அவர்கள் அப்பட்டத்தைப் பறக்க வைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். எனக்குச் சர்வம் படத்தில் பட்டம் நூலால் கழுத்தறுந்து இறந்துபோகும் த்ரிஷாவின் நினைவு வந்தது.
த்ரிஷாவின் நினைவை மூளைக்குள் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு என் பக்கம் வந்து, என்னைக் கடந்து சென்ற பந்தின் பின் ஓடினேன். எவ்வளவு வேகமாக ஓடியும் பந்தைக் காலால் நிறுத்தமுடியவில்லை. கொஞ்சம் மூச்சுப் பிடித்து ஓரிரு அடிகள் வேகமாக ஓடி பந்தைக் கையில் எடுத்தேன். பக்கத்தில் சில குழந்தைகள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அனைவரும் ஃபுட்பால் ஷூக்கள், ஜெர்சிக்கள் அணிந்திருந்தனர். மெஸ்ஸியின் பெயர் போட்ட டிஷர்ட் அணிந்திருந்த ஒரு சிறுமி பந்தைத் துரத்திக் கொண்டிருந்தாள். நான்கு பந்துகள் அடுக்கி வைத்தால் என்ன உயரம் வருமோ அவ்வளவுதான் இருந்தாள் அவள். பளபளவென ஸ்ட்ரெயிட்டன் செய்யப்பட்ட முடியில் குதிரை வால் ஆட ஓடிக்கொண்டிருந்தாள். தூரத்திலிருந்து பந்தை எடுத்து வரும்போது விரல்கள் படாமல், இரண்டு முட்டிக் கைகளுக்கும் இடையில் பந்தைப் பிடித்துத் தூக்கி வினோதமாக நடந்துவந்தாள்.
அந்தச் சிறுமியின் முகத்தில் விளையாட்டின் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அவளோடு விளையாடிய இன்னொரு சிறுமியும், இரு சிறுவர்களும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களோடு விளையாடிக்கொண்டிருந்த அந்த ஆண், அவர்களில் ஒருவரது தந்தையா இல்லை அவர்களின் விளையாட்டுப் பயிற்சியாளரா என்று சொல்லமுடியாதபடி இருந்தார். அவரும் அவர்களுக்கு இணையாக ஓடி, பந்தை எடுத்துவரச் சொல்லி ஆட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தார். அந்தச் சிறுவர்கள் இருவரும் பந்தை தங்களுக்குள் வைத்துக்கொண்டே விளையாடினர். அவர்களுக்குச் சிறுமிகள் இருவரும் பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் மெஸ்ஸி டிஷர்ட் அணிந்திருந்த சிறுமி அவர்களை அப்படி விளையாட அனுமதிக்கவில்லை. அவள் இடையில் புகுந்து பந்தைப் பறிக்கவோ, பந்து நீண்ட தூரம் போகும்போது முதல்
ஆளாக அதன் பின் ஓடவோ தயங்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாகப் பந்து ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் கைக்குப் போவது குறைந்தது. ஒவ்வொருவராக ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கத் தொடங்கினோம். கடவுளிடமிருந்து செத்த எலி பரிசுபெற்ற சிறுவன், மைதானத்தில் களேபரத்தில் கவனத்தைத் தொலைத்திருந்தான். படபடக்கும் பட்டம் மீதே எல்லோர் கவனமும் அவ்வப்போது சென்று திரும்பியது. இந்தக் களேபரங்களுக்கு இடையே ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் பொன்னிற நாயுடன் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தனர். நாங்கள் ஓரமாக உட்கார்ந்து மெஸ்ஸி ஆடை
அணிந்த பெண்ணும் பிறரும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். சிறுவன் அவர்கள் பக்கமே திரும்பாமல் பந்தை உதைத்தும் வேடிக்கை பார்த்தும் விளையாடிக் கொண்டிருந்தான்.
திடீரென்று ஓவென்ற அழுகுரல் சத்தம் மைதானத்தை நிரப்பியது. கவனிக்காதவர்களுக்கு கவனித்தவர்கள் விளக்கியபடி, என்ன நடந்ததென்றால், அந்தப் பொன்னிற நாய் ஓடிச்சென்று ஒரே தாவாகத் தாவி சற்றே குறைவான உயரத்தில் பறந்துகொண்டிருந்த பட்டத்தைக் கவ்விச் சென்றுவிட்டது. பட்டத்தை வைத்திருந்த சிறுவனின் அழுகுரல்தான் அது. நாயுடன் வந்தவர்களில் ஒருவர் சிறுவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். இன்னொருவர் மைதானத்தில் மூலையில் தனக்குக் கிடைத்த பட்ட இரையைப் பிய்த்துக் கொண்டிருந்த நாயை சமாதானப் படுத்தப் போனார். பட்டம் வைத்திருந்த சிறுவன் சமாதானமாவதாகத் தெரியவில்லை. மைதானத்தின் ஒட்டுமொத்த கரிசனம் அவன் பக்கமே சரிந்திருந்தது. இந்த மாதிரி கூட்டமான இடத்துக்கெல்லாம் ஏன் நாயைக் கூட்டி வர்றாங்க என்று சிலர் விசனப்பட்டனர்.
நான் மெஸ்ஸி டிஷர்ட் அணிந்திருந்த சிறுமியையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வியர்த்து விறுவிறுக்க அந்தச் சிறிய உருவம் சற்றும் சிரிக்காமல் பந்தின் பின் ஓடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றியது.
பசிக்கிதா? நாலு பேரில் யார் இந்தக் கேள்வியைக் கேட்டோம் தெரியவில்லை. ஆனால் எல்லோர் மனதிலும் நிரம்பிவிட்டது. ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா என்றோம். சிறுவன் தலையாட்டி மறுத்துவிட்டான். ஐஸ்கிரீமை மறுக்கும் குழந்தைகளை என்ன செய்வது. நாங்கள் மெதுவாக மைதானத்தை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினோம்.
அப்போதுதான் எங்களைக் கவனித்த மெஸ்ஸி டிஷர்ட், சட்டென்று சிறுவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். அவன் அவள் பக்கம் திரும்பி சட்டென்று சிரித்துவிட்டு, சிரித்தான் என்றே நான் நினைக்கிறேன், ஏனென்றால் அந்தச் சிறுமியின் முகத்தில் புன்னகை படிந்திருந்தது, எங்களை முந்தி நடக்கத் தொடங்கினான். உனக்குத் தெரியுமாடா அந்தப் பெண்ணை என்று கேட்டதற்கு, மிக மெல்லிய குரலில் என் வகுப்புதான் என்றான். நான் அந்தச் சிறுமியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேன். நாங்கள் மீண்டும் ஐஸ்கிரீம் குறித்துப் பேசியபடி நடக்கத் தொடங்கினோம்.
சிலரைப் பார்த்தால் சட்டென்று இவர் நமது வாழ்க்கையில் இருந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றும். இந்தப் புன்னகை நமது நண்பருடையதாக இருக்கவேண்டுமெனத் தோன்றும். ஆனால் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது அப்படித் தோன்றுமா. இவளை நான் தினமும் கவனித்துக் கொள்ளவேண்டும், சோறூட்ட வேண்டும், வளர்வதைப் பார்க்க வேண்டும் என்று.
இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. நாம் மனதில் இருந்த சோகங்களை மறைக்கவில்லை. கல்யாண வெப்சைட்ல போட அம்மா ஃபோட்டோ கேட்டாங்க, என் லவ்வர எடுத்துத்தரச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன், எடுத்துக் கொடு என்று விளையாடிக் கொண்டிருந்தோம். நான் அப்போதுதான் உன்னிடம் ஃபுட்பால், மெஸ்ஸி டிஷர்ட், சிறுவன் கதையைச் சொல்லி முடித்திருந்தேன். சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் கதையாக எழுதும்போது விவரங்கள் வேண்டும் என்றாய் இதைப் படித்துவிட்டு. என்ன மாதிரி விவரங்கள்? அந்தச் சிறுவன் என்ன நிறத்தில் உடை அணிந்திருந்தான். நாம் பேசிக்கொண்டிருந்தபோது ஆட்டோக்காரர் என்ன செய்துகொண்டிருந்தார். நான் எழுதலாம்தான். ஆனால் ஒவ்வொருவரும் அதில் ஒவ்வொன்றை நிரப்பிக்கொள்வார்கள்தானே. ஒவ்வொருவரும் தங்கள் நினைவில் உள்ள சிறுவர்களை, நிறங்களை, நகரங்களை… ஒவ்வொரு நகரத்திலும் பல ஊர்கள் இருக்கின்றன என்று சொல்வார்கள். நாம் ஊர்விட்டு ஊர் வந்திருந்தோம். சொந்த நாட்டுக்கு டூரிஸ்ட்டாகத் திரும்பி வந்தவர்களின் மனநிலை லேசாகத் தலைகாட்டியிருந்தது. நாம் அந்தப் பகுதியின் சிறப்பம்சங்களை ஓரளவு பார்த்துவிட்டிருந்தோம். பழைய புத்தகக் கடைகள், சுவரோவியங்கள்… ஒரு நல்ல காஃபி. ஒரு கடையில் தோடு வாங்கிக் கொடுத்தாய். நீ எனக்குப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது பற்றி நாம் இருவர் மட்டும் சிரித்துக்கொள்ளச் சில விசயங்கள் இருந்தன. போதுமா நடந்தது என்று தோன்றியது. இங்கு எங்கோ ஒரு கோயில் இருக்கிறது. கொஞ்சம் பழைய கோயில். அழகிய நாகராஜா சிற்பங்கள் கொண்டது என்றாய். நடக்கத் தெம்பிருக்கிறதா? ம்ம்ம் இந்த நெரிசலில் ஆட்டோவில் போக இருவருமே தயாராக இல்லை. ஏற்கனவே ஒரு மணிநேரம் ஆட்டோவில் வந்தது தலைசுற்றுவது போல் இருந்தது.
போகும் வழியில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அதில் சாப்பிடலாமா என்று பார்க்கலாம். ஆனால் அங்கு நமக்கு எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. எனவே இரண்டு சாத்துக்குடி ஜூஸ் மட்டும் சொல்லிவிட்டு வெளியே அமைத்திருந்த ஒரு மேடையில் உட்கார்ந்தோம். ஜூஸ் வர நேரம் ஆகும்போல் இருந்தது. அப்போதுதான் அந்தக் குட்டி உருவம் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அது என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அவளது தந்தையைப் போலிருந்த ஒருவரும், நீயும் கவனித்தீர்கள். அவளுக்குச் சிறிய தங்கமீன்கள் போன்ற கண்கள், மிக அழகிய அரிசி மணிகள் போன்ற பற்கள். அவளுக்கு மலைவாசஸ்தலங்களில் இருக்கும் துணிக்கடை பொம்மையைப் போல அழகாக ஆடை உடுத்தியிருந்தார்கள். என்ன என்று தலையாட்டிக் கேட்டேன். ஒண்ணுமில்ல என்று பதிலுக்குத் தலையாட்டினாள். நான் சிரித்தேன். அவள் கண்ணிமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கள் இருவருக்கும் நடுவே ஒரு தூண் இருந்தது. நான் சற்றே நகர்ந்து மறைந்தேன். கண்ணாமூச்சி. அவள் தூணைச் சுற்றி வந்து மெல்லச் சிரித்துப் பின் தன் பழைய பார்வைக்குத் திரும்பினாள். அவள் அப்பா அவளிடம் ஏதோ கேட்டார். அவள் பதிலளிக்கவில்லை. நீ என்னிடம் ஏதாவது கேட்டாயா. என்னையும் அவளையும் பார்க்க இரு குழந்தைகள் போல் இருந்ததா? அம்மாவும் குழந்தையும் போல் இருந்தது என்று சொல்லேன். அப்படியொரு நிமிடம். அருகில் இருப்பவர்கள் பொறாமைப்படுமளவு ஒரு வரமளிக்கப்பட்டதாய் உணர்ந்தேன். ஆனால் நீ என்னைப் பார்த்துச் சந்தோஷமாக இருந்தாய்.
அங்கிருந்து நாம் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டோம். ஆனாலும் அவள் உருவம் என் மனதை விட்டுப் போகவில்லை. அவள் பெயர் அப்பு என்று அவளது அப்பா அழைத்ததாகச் சொன்னாய். அடுத்தடுத்து நான் பேசும்போது அப்புவை மிகப் பரிச்சயமானது போல் பெயர் சொல்லிப் பேசத் தொடங்கினேன். ஏன் நான் இவ்வளவு அதையே யோசித்துக் கொண்டிருக்கிறேன்? நாம் இதற்கு முன் குழந்தை வளர்ப்புப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறோம். சொல்லப்போனால் உன்னிடம்தான் முதல்முறை நான் தாய்மை குறித்த என் அவாக்களை, ஏக்கங்களை, வெறுப்புகளை முழுமையாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் இப்போது புதிதாக ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கின்றேன். எதற்காக அவள் என்னை அப்படிப் பார்த்தாள். இதற்கு முன்னும் குழந்தைகள் என்னை முறைத்திருக்கின்றன, சிரித்திருக்கின்றன, வினோதமாகப் பார்த்திருக்கின்றன. ஆனால் இம்முறை என் மனது என்னவோ ஆகியிருந்தது. நிரம்பியிருந்தது. நாம் ஒரு கோயிலுக்குச் சென்றோம். அங்கிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் ஏறினோம்.
அப்புவுக்குத் தங்கமீன் கண்கள், அரிசி மணிப் பற்கள்… நான் இன்னமும் அப்புவைக் குறித்தே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
October 11, 2023
இடுக்கேரி
இந்த வருட நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டவுடன் யோன் ஃபோஸ்ஸெவின் இந்த சிறிய நாவலை வாசித்தேன். சிறிய நாவல் என்பதே ஊக்கப்படுத்தியது. இடுக்கேரி எனப்படும் மலையிடைக் கடல்பகுதி நார்வேஜிய நிலப்பகுதியை யோசிக்கும்போதே மனதில் தோன்றுவது. கார்ல் ஓவ் நாஸ்கார்ட் உள்ளிட்ட பிற நார்வேஜிய எழுத்தாளர்களை வாசிக்கும்போது தோன்றிய அதே அடர்த்தி இப்போதும் தோன்றியது. ஒரு நார்வேஜியப் பெண் முன் காணாமல் போன தன் கணவனைப் பற்றி யோசிப்பதிலிருந்து நூறாண்டுகளுக்கு மேலாக அந்தக் குடும்பம் வாழ்ந்து வரும் அந்த வீட்டின் நினைவுகள், அவர்கள் இருவரின் நினைவுகளோடு கலந்து நிகழ்கிறது.
இரண்டு விசயங்கள் உடனடியாக ஈர்த்தன. இந்நாவலில் சிந்தனையோட்டத்தில் நிறைந்திருக்கும் கேள்விகள். நாம் யோசிக்கும்போதும் மனதில் எவ்வளவு கேள்விகள் நிறைந்திருக்கின்றன என்பதைக் குறித்து மீண்டும் யோசிக்கவைத்தது. இரண்டாவது வசனங்கள், நாடக ஆசிரியருமான யோன் ஃபோஸ்ஸெவின் வசனங்கள் தனித்துவமான நாடகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன. திரும்பத் திரும்ப வரும் வரிகள் அடர்த்தியைக் கூட்டிக்கொண்டே செல்கின்றன.
எனவே வாசித்த நாவலின் முதல் சில பக்கங்களை, விரைவாக மொழிபெயர்த்த ஒரு முயற்சி.
தீயில் ஆலிஸ்
நாவல் பகுதி
அறையில் இருக்கும் பெஞ்ச்சில் சிக்னே படுத்திருப்பதைப் பார்க்கிறேன், அவள் பழைய மேசை அடுப்பு மரப்பெட்டி சுவரின் பழைய மரப் பலகைகள் இடுக்கேரியை நோக்கியிருக்கும் பெரிய ஜன்னல் என பழகிய விசயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள், எல்லாவற்றையும் பார்க்காமலேயே பார்த்துக்கொண்டிருக்கிறாள், எல்லாம் மாறாமல் எப்படியிருந்ததோ அப்படியே இருந்தாலும் எல்லாம் மாறிவிட்டது என்று நினைக்கிறாள் ஏனென்றால் அவன் காணாமல் போய் காணாமலேயே இருப்பதிலிருந்து எதுவுமே மாறாமல் இல்லை, அவள் அங்கு இல்லாமலே இருக்கிறாள், பகல்கள் வருகின்றன, பகல்கள் போகின்றன, இரவுகள் வருகின்றன, இரவுகள் போகின்றன, அவளும் அவற்றுடன் மெல்ல நகர்ந்தபடி போகிறாள், எதையும் பெரிதாக மாற்றிவிடாமல் எதுவும் எந்தத் தடயங்களும் விட்டுச் செல்லாமல், இன்று என்ன நாளென்று அவளுக்குத் தெரியுமா? இன்று வியாழனாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள், இன்று மார்ச், வருடம் 2002, ஆம் அவளுக்கு அவ்வளவு தெரியும் ஆனால் தேதி அப்புறம் இன்னபிறவெல்லாம், அவளால் அவ்வளவு முடியாது, அவள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? என்ன பயம்? என்று நினைக்கிறாள், என்ன இருந்தாலும் அவளால் தன்னில் பாதுகாப்பாக உறுதியாக இருக்கமுடியும், அவன் காணாமல் போவதற்கு முன் அவள் இருந்தது மாதிரியே, ஆனால் அது அவளுக்கு இப்போது நினைவில் எழுகிறது, அவன் எப்படி காணாமல் போனானென்று, 1979இல் நவம்பர் பிற்பகுதியில் அந்த செவ்வாய்க்கிழமையில் யோசித்தவுடனே அவள் மீண்டும் அந்த வெறுமையில் இருக்கிறாள் என்று நினைத்தாள், வாசற்கதவைப் பார்த்தால் அது திறப்பதையும் அதன் வழியாக அவள் உள்ளே வந்து கதவை சாத்திவிட்டு அறைக்குள் நடந்துபோவதையும் பார்க்கிறாள், நின்று ஜன்னலைப் பார்க்கிறாள் ஜன்னலின் முன் அவள் நிற்பதைப் பார்க்கிறாள் அந்த அறையில் நின்றபடி அவன் நீண்ட கருப்பு முடியும் இருளைப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்க்கிறாள், அவன் தன் கருப்பு ஸ்வெட்டர் அணிந்திருக்கிறான், அவள் பின்னிய அந்த ஸ்வெட்டரைத்தான் குளிராக இருக்கும்போதெல்லாம் அணிந்திருப்பான், அங்கே நிற்கிறான், வெளியிலிருக்கும் இருளுடன் ஒன்றாகிவிட்டான் என்று நினைக்கிறாள், அவன் இருளோடு அப்படி ஒன்றிணைந்திருக்கிறான் அவள் கதவைத் திறந்து பார்த்தபோது அவன் நிற்பதையே அவள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறாள் என்றாலும் யோசிக்காமலேயே அவளுக்குத் தெரியும், சொல்லாமலேயே அவளுக்குத் தெரியும், அவன் அங்கே அப்படி நிற்பான் என்றும் அவன் கருப்பு ஸ்வெட்டரும் ஜன்னலுக்கு வெளியிலிருக்கும் இருளும் ஒன்றாக இருக்குமென்றும் அவள் நினைக்கிறாள், அவனே இருள், இருள்தான் அவன் ஆனாலும் அப்படித்தான் அது என்று அவள் நினைக்கிறாள், அவள் வந்து அவன் அங்கே நிற்பதைப் பார்த்தபோது எதிர்பாரா எதையோ பார்த்ததுபோல அதுதான் வினோதமானது ஏனென்றால் அவன் எல்லா நேரமும் ஜன்னலுக்கு எதிரே அப்படியேதான் நிற்பான், ஆனால் என்ன அவள் வழக்கமாக அதைப் பார்க்கமாட்டாள் என்று நினைக்கிறாள், இல்லை அதை எப்படியோ கவனிக்கமாட்டாள் ஏனென்றால் அவன் அப்படி நிற்பதும் ஒரு பழக்கமாகிவிட்டது எல்லாவற்றையும் போல அவளைச் சுற்றி அப்படியே இருக்கும் ஒரு விசயமாகிவிட்டது ஆனாலும் இம்முறை அவள் அறைக்கு வந்து அவன் அங்கே நிற்பதையும் அவன் கருப்பு முடியையும் கருப்பு ஸ்வெட்டரையும் பார்த்தபோது, அவன் அப்படியே நின்று இருளைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே ஏன் அப்படிச் செய்கிறான்? என்று நினைக்கிறாள், அவன் ஏன் அப்படி நின்றுகொண்டிருக்கிறான்? ஜன்னலுக்கு வெளியே பார்க்க எதுவும் இருக்கிறதென்றாலும் சரி, எதுவுமில்லை, வெறும் இருள், இந்த கனத்த கிட்டத்தட்ட முழுமையான இருள், எப்போதாவது கார் ஒன்று வந்தால் வரும் காரின் முன்விளக்கு தெருவின் ஒரு பகுதியை வெளிச்சத்தால் நிரப்பும் என்றாலும் அங்கே நிறைய கார்கள் வருவதில்லை, அதுதான் அவளுக்கும் பிடிக்கும், அவள் யாரும் இல்லாத இடத்தில் வாழ விரும்பினாள், சிக்னேவும் அஸ்லேவும், அவனும் அவளும், முடிந்தவரை தனியாக இருக்கும் இடத்தில் எல்லாரும் போய்விட்ட இடத்தில் வசந்தம் வசந்தமாக இலையுதிர் இலையுதிராக குளிர்காலம் குளிர்காலமாக வெய்யில் வெய்யிலாக இருக்கும் இடத்தில் அப்படியொரு இடத்தில்தான் வாழ விரும்பியதாக அவள் நினைத்தால் ஆனால் இப்போது பார்க்க இருள் மட்டும்தான் இருக்கிறது, அவன் ஏன் அப்படி நின்று இருளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவன் ஏன் அப்படிச் செய்கிறான்? பார்க்க எதுவுமே இல்லாதபோது, ஏன் அங்கேயே எல்லா நேரமும் நின்றுகொண்டிருக்கிறான்? என்று நினைக்கிறாள், இப்போது மட்ட்டும் வசந்தகாலமாக இருந்தால், அவள் நினைக்கிறாள், இப்போது மட்டும் வசந்தம் தன் ஒளியுடனும் வெதுவெதுப்பான நாட்களுடனும் புல்வெளி முழுக்க மலர்களுடனும் மரங்களில் மொட்டுகளும் புது இலைகளும் உருவாகவும் வந்தால் ஏனென்றால் இந்த இருள் எப்போதும் முடிவற்று நீளும் இந்த இருள், இதை அவளால் பொறுக்கமுடியவில்லை என்று நினைக்கிறாள், அவனிடம் அவள் ஏதாவது சொல்லவேண்டும், ஏதாவது என்று நினைக்கிறாள், எதுவுமே அவையாக இல்லாதிருப்பது போல அவள் அறையைச் சுற்றிப் பார்த்து நினைக்கிறாள், ஆம் எல்லாம் அவையாகவே இருக்கின்றன, எதுவும் மாறவில்லை, ஏன் அப்படி ஏதோ மாறிவிட்டதாக நினைக்கிறாள்? ஏதாவது ஏன் மாறியிருக்கவேண்டுமென நினைக்கிறாள், ஏதாவது எப்படி மாறியிருக்க முடியும்? ஏனென்றாள் அவன் ஜன்னலுக்கு முன் நிற்கிறான், வெளியிலிருக்கும் இருளிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாதபடி என்று நினைக்கிறாள், ஆனால் அவனிடம் கொஞ்ச நாளாக என்ன சரியில்லை? ஏதாவது நடந்ததா? அவன் மாறிவிட்டானா? அவன் ஏன் அமைதியாகிவிட்டான்? ஆமாம், அமைதியாகிவிட்டான், ஆனால், ஆம் அவன் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பான் என்று அவள் நினைக்கிறாள், அவனைப் பற்றி வேறு ஏதாவது வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் அவன் எப்போதுமே அமைதியான ஆள்தான், எனவே வழக்கத்துக்கு மாறாக ஒன்றுமில்லை, அவன் அப்படித்தான், அவ்வளவுதான், அவன் அப்படித்தான் இருப்பான் என்று நினைக்கிறாள், அவன் இப்போது திரும்பி அவளைப் பார்த்து அவளிடம் ஏதாவது பேசலாம் என்று நினைக்கிறாள், ஏதாவது, சும்மா ஏதாவது சொல்லலாம், ஆனால் அவள் வந்ததையே கவனிக்காதது போல அவன் நின்றுகொண்டிருக்கிறான்
இதோ இருக்கிறாயா, சிக்னே சொல்கிறாள்
அவன் திரும்பி அவளைப் பார்க்க, அவள் அவன் கண்களிலும் இருக்கும் இருளைப் பார்க்கிறாள்
ஆமாம், இங்கதான் இருக்கேன்னு நினைக்கிறேன் அஸ்லே சொல்கிறான்
அங்க பார்க்க என்ன பெருசா எதுவும் இல்லையே சிக்னே சொல்கிறாள்
இல்ல எதுவுமில்ல அஸ்லே சொல்கிறான்
அவளைப் பார்த்து சிரிக்கிறான்
இல்ல வெறும் இருள்தான் சிக்னே சொல்கிறாள்
வெறும் இருள் ஆமாம் அஸ்லே சொல்கிறான்
ஆனா நீ அந்த ஜன்னல் முன்ன நின்னுகிட்டு இருக்க சிக்னே சொல்கிறாள்
ஆமாம் அஸ்லே சொல்கிறான்
ஆனா நீ எதையும் பார்க்கல சிக்னே சொல்கிறாள்
இல்ல அஸ்லே சொல்கிறான்
அப்புறம் ஏன் அங்க நிக்கிற சிக்னே சொல்கிறாள்
ஆமாம் அதாவது அவள் சொல்கிறாள்
ஆமாம் நீ எதையோ யோசிச்சுகிட்டு இருக்க அவள் சொல்கிறாள்
நான் எதையும் யோசிக்கல அவன் சொல்கிறான்
ஆனா நீ எதைப் பார்த்துகிட்டு இருந்த சிக்னே சொல்கிறாள்
நான் எதையும் பார்க்கல அஸ்லே சொல்கிறான்
உனக்குத் தெரியாதா சிக்னே சொல்கிறாள்
இல்ல அஸ்லே சொல்கிறான்
நீ சும்மா நின்னுகிட்டு இருந்த சிக்னே சொல்கிறாள்
ஆமா சும்மா இங்க நின்னுகிட்டு இருக்கேன் அஸ்லே சொல்கிறான்
நின்னுக்கிட்டு இருக்க சிக்னே சொல்கிறாள்
நான் நிக்கிறது உன்ன தொந்தரவு பண்ணுதா அஸ்லே சொல்கிறான்
இல்ல அதில்ல சிக்னே சொல்கிறாள்
ஆனா நீ ஏன் கேட்ட அஸ்லே சொல்கிறான்
நான் சும்மா கேட்டேன் சிக்னே சொல்கிறாள்
அப்படியா அஸ்லே சொல்கிறான்
நான் எதையும் நினைச்சு கேட்கல, சும்மா கேட்டேன் சிக்னே சொல்கிறாள்
சரி அஸ்லே சொல்கிறான்
நான் சும்மாதான் இங்க நிக்கிறேன், ஆமா அவன் சொல்கிறான்
பல சமயம் யாராவது எதையாவது சொல்லும்போது அவங்க எந்த அர்த்தமும் இல்லாம சும்மாதான் சொல்வாங்களா இருக்கலாம் அவன் சொல்கிறான்
இருக்காது, அப்படி எப்பவும் இருக்காது அவன் சொல்கிறான்
அவங்க எதையாவது சொல்லும்போது, சும்மா எதையோ சொல்லத்தான் சொல்வாங்க, உண்மைதான் சிக்னே சொல்கிறாள்
அப்படித்தான் ஆமாம் அஸ்லே சொல்கிறான்
அவங்க எதையாவது சொல்லனுமே சிக்னே சொல்கிறாள்
ஆமா சொல்லணும் அஸ்லே சொல்கிறான்
அப்படித்தான் அவன் சொல்கிறான்
October 4, 2023
நீரில் நடப்பவர்கள்
நீர்ப் பூச்சிகள் ஏ. கே. ராமானுஜன்
ஓரம் வை, இந்தக் கனவை ஓரமாக வை.
தேடு
ஒல்லிக் காலும்,
முட்டைக் கண்ணும் கொண்ட அந்த நீர்ப் பூச்சிகளை.
பார், அவை
நீர் படியா குழாய்க் கால்களும்
எடையற்ற உடலுமாய்
நீரோட்டத்தின்
அலைப் பரப்பில் உட்கார்ந்திருப்பதை.
இல்லை, நீரில் நடப்பவர்கள்
இறைதூதர்கள் மட்டுமல்ல. இந்தப் பூச்சி
ஒளிச் சரிவொன்றில் உட்கார்ந்தபடி
கண் முங்க மூழ்குகிறது
தன் சிறிய வானத் துண்டில்.
August 4, 2023
மின்
நன்றி: வனம் இதழ்
அவள் அந்தரத்தில் மிதப்பது போல உணர்கிறாள். மெல்லிய கம்பி வலைகளால் வடிகட்டப்பட்ட மின்சாரம் குறுகுறுப்பாக உடல் முழுக்க ஊர்கிறது. எந்தக் காதலரும் தொட முடியாத ஆழங்களைத் தொட்டெழுப்புகிறது. அவள் உடல் மெல்ல மிதப்பது போலிருக்கிறது. அவள் ஒரு நாற்காலியில்தான் அமர்ந்திருக்கிறாள். அவளது அறைக்குள்ளிருக்கும் ஒரு கூண்டுக்குள்ளிருக்கும் நாற்காலி. ஆனால் அவளுக்கு சிறைப்பட்டிருக்கும் உணர்வில்லை. அவள் உடல் நாற்காலியை உணரவில்லை, அறையை, கட்டிடத்தை, எதையும்! மின்சாரம் ஒரு கடலைப் போல அவளை ஏந்திக்கொண்டிருக்கிறது.
கடல் மாதிரி, கடல்ல மிதக்குற மாதிரி
அவள் தன் நண்பனிடம் விளக்க முயல்கிறாள். இருவரும் ஒரு பாரில் அமர்ந்திருக்கிறார்கள். அவன் அப்போதுதான் ஜிம்மில் இருந்து வந்திருந்தான். அவன் உடல் வியர்வையில் நனைந்திருக்கிறது. அவள் சருமம் மின்னுகிறது. அப்போது பூத்த மலரின் மென்மையைக் கொண்டிருக்கிறது.
பைத்தியம் மாதிரிப் பேசாத. கடல்லயும் கட்டுப்பாடில்லாமப் போனா மூழ்கிடுவோம். அதுமாதிரிதான் இந்த மின்சாரமும். உன்னத் தின்னுடும். ஏற்கனவே உன்னத் தின்னுகிட்டுதான் இருக்கு.
நீதான் பைத்தியம் மாதிரி பேசுற. ஏன் நீ ஜிம்முக்குப் போலயா? தினம் எவ்வளவு வெயிட் தூக்குற? சொல்லப்போனா இதையெல்லாம் ஏன் செய்யுற? நாலு பசங்க உன் உடம்ப பாக்கணும். அய்யோ எவ்வளவு அழகுன்னு ஆசைப்படணும். ஆனா எனக்கு அது எதுவுமே இல்ல. நா நேரடியா என் உடலோட எல்லா சாத்தியத்தையும் தொட்டுப் பாக்குறேன். கடந்து கடந்து இன்னும் இன்னும் ஆழமா போறேன்.
நா ஜிம்முக்குப் போறது வெறுமனே ஆம்பளைங்கள கவரத்தான்? அவ்வளவுதான் நீ என்னைப் பத்தி புரிஞ்சு வைச்சிருக்க இல்லையா?
அத நான் குறையா, தப்பா சொல்லல. ஆனா நீ நான் செய்யுறத குறைய, தப்பா சொல்லுறியே.
ஏன்னா நா உன் ஃப்ரண்ட்? அது ஞாபகம் இருக்கா? அதாவது தேவைப்படுதா, இல்ல அதுவும் தேவையில்லையா?
நான் உன்கிட்ட இருந்து விலகிப் போறேன், மாறிட்டேன்னு உனக்குத் தோணுதா?
இல்ல, ஆனா…
ஆனா, என்ன சொல்லு?
எனக்கு சரியா சொல்லத் தெரியல.
உனக்குப் புரியல பேபி. இது போதையில்ல. இது அடிக்ஷன் இல்ல. நான் என்ன செய்யுறேன்னு தெரிஞ்சுதான் செய்யுறேன். நாம வேற ஏதாவது பேசலாம்.
•
தெருவில் இரு தெர்மகோல் அட்டைகளை எடுத்துச்செல்லும் பெண்ணிடமிருந்து அட்டைகளைப் பிடுங்கிச் செல்ல காற்று முயல்கிறது. பெரியவர்களுக்கு தெர்மகோலோடு என்ன வேலை என்பது போல இரு சிறுவர்கள் அவளை முறைத்துப் பார்க்கிறார்கள். மதிய வேலையில் காற்றோடு போராடியபடி செல்லும் அவளைக் கண்டு பயப்படுவதா வேண்டாமா என்று தெருநாய்கள் யோசித்துப் பின் தூக்கத்திடமே தங்களை ஒப்படைத்துக் கொள்கின்றன. அவள் முகத்தில் புன்னகை நிரம்பியிருக்கிறது. அவ்வப்போது அவள் ஏதோ முணுமுணுக்கிறாள். அவள் காதில் பொறுத்தியிருக்கும் ஹெட்ஃபோன்களை இசைக்கும் பாடலின் வரிகள்தானென நாம் நினைத்துக்கொள்ளலாம். அவள் நேற்று தன் நண்பனுடன் நிகழ்ந்த உரையாடலை மனதில் மீண்டும் ஓட்டிப்பார்த்தபடி நடக்கிறாள்.
அவளது நண்பர்கள், காதலர்கள், தோழர்கள், சைக்கியாட்ரிஸ்ட்டுகள் எல்லோருக்கும் காரணம் தேவையாயிருக்கிறது. மின்சாரம் உடலைச் சிதைப்பது. அதனோடு உனக்கென்ன விளையாட்டு. நீ உன்னை வெறுக்கிறாயா? உன் உடலை? மரணத்தை விரும்புகிறாயா? இந்த சமூகத்தைப் பழிவாங்க முயல்கிறாயா? நீ உன் மீது செலுத்தப்படும் அன்புக்கும் காதலுக்கும் தகுதியானவள் இல்லையென்று நினைக்கிறாயா? ஆம், இது அவ்வளவு வினோதமானது இல்லைதான். ஆம், உன்னைப்போல பலர் இருக்கிறார்கள்தான். ஆனாலும்… சிறுவயதில் உனக்கெதுவும் பெரிய பாதிப்பு நிகழ்ந்ததா? யாரும் உனதுடலை உன் அனுமதியின்றி பயன்படுத்திக் கொண்டார்களா?
சிறுவயதில்? ம்ம்ம்ம். அவளை ஒருமுறை பள்ளியிலிருந்து தலைநகரத்துக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தார்கள். அப்போது ஒரு அறிவியல் மியூஸியத்துக்கும் சென்றிருந்தார்கள். அங்கிருந்த பலவும் அவளுக்கும் அவள் நண்பர்களுக்கும் ஆச்சரியமூட்டின. அவற்றோடு அவர்கள் விளையாடினார்கள். தங்கள் ஆசிரியர்களின் கற்பிக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட அவள் மனதில் இருப்பது ஐந்தாவது மாடியில் இருந்த ஒன்றுதான். அது எதற்காக எதைக்கற்றுக்கொடுக்க என்பதெல்லாம் அவளுக்கு இப்போது நினைவில் இல்லை. அது ஒரு சிறிய இயந்திரம். ஒரு சிறிய வட்ட மேசையில் மேல் ஓரடி உயரமுடைய கம்பி. அந்தக் கம்பியின் முனையில் சிறிய இரும்பு உருண்டை, அதில் விரலை வைத்தால் சிறிய அளவில் மின்சாரம் பாயும். மெல்ல ஷாக் அடிக்கும். அவள் ஒரிருமுறை அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு உற்சாகமானாள். தன் நண்பர்களை அழைத்து அதைத் தொட்டுப் பார்க்கச் சொன்னாள். சிலர் தயங்க, சிலர் தயங்கித் தயங்கி ஒருமுறை தொட்டு வலிக்கிறதென்று பின்வாங்கினார்கள். ஆனால் அவளது ஆர்வம் அவர்களை பயமுறுத்தியது. ஒருத்தி மின்சாரத்தை இவ்வளவு இரசிக்க முடியுமா? இல்லை, வலியை? அவளுக்குப் புரியவில்லை. அவளது உடலில் ஏற்படும் அதே உணர்வுதானே அவர்கள் உடலிலும் ஏற்படவேண்டும்? இல்லை அவள் வித்தியாசமானவளா? அவளுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும்விட அந்தக் குறுகுறுப்பு அவளை ஈர்த்தது. அவளது டீச்சர்கள் வந்து சற்றே பயத்துடன் அதிலிருந்து பிரித்து அழைத்துச் செல்லும்வரை அவள் அதையே செய்துகொண்டிருந்தாள்.
ஆனால் அதனோடு ஒப்புநோக்கக் கூடிய எந்த உணர்வும் அவள் வாழ்வில் மின்சாரம் தவிர வேறெதனாலும் எப்போதும் ஏற்பட்டதில்லை. அந்நிகழ்வும், ஒவ்வொரு முறையும் மின்சாரத்தில் மிதக்கும்போது ஏற்படும் உணர்வையும் அவளால் எதனோடும் ஒப்பிடவே முடியாது.
•
அவளுக்கும் மின்சாரத்துக்குமான முதல் அறிமுகம் அதைவிட சிறுவயதில் நடந்தது. ஆனால் அது அவளுக்கு நேரடி நினைவாக இருக்கவில்லை. அவளது பெற்றோருக்கு நினைவிலுண்டு, அவர்கள் அதைப் பலவிதமாகச் சொல்லி ஒரு கதையாக்கியிருக்கிறார்கள். ஒரு மாலையில் அவர்களது சிறுநகரம் முழுக்க மின்சாரம் இல்லை. அப்போது அவர்களது தெருவில் இருந்த ஒரு பணக்காரரின் வீட்டில் மட்டும் ஜெனரேட்டர் வைத்து மின்விளக்குகள் எரிந்திருக்கின்றன. அதைப் பார்த்த இவள் அவர்கள் வீட்டில் மட்டும் எப்படி கரண்ட் இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறாள். அன்றிரவு முழுக்க, மின்சாரம் என்றால் என்ன? அது எல்லோருக்கும் எப்படிக் கிடைக்கிறது? ஏன் சிலசமயம் சிலருக்கு இல்லை? என்பதுபோல பல கேள்விகளைக் கேட்டுத் துளைத்திருக்கிறாள். அதைத் தொடர்ந்த சில நாட்களுக்கு வீட்டில் கரண்ட் செல்லும் இடங்களை எல்லாம் பார்த்தபடி இருந்திருக்கிறாள். மூன்றாவது நாள், அவள் அப்பா வேலைக்குப் போயிருக்க, அம்மா வாசலில் நின்று யாரோடோ பேசிக்கொண்டிருக்க தன் அப்பாவிடமிருந்து புதிதாக கற்றுக்கொண்ட டெஸ்டர் வைத்து கரண்ட் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் வித்தையைப் பரிசோதித்தாள். ஆனால், இன்னதென்று சுட்டமுடியாத ஒரு ஆர்வத்தால் தூண்டப்பட்டு டெஸ்டரின் தலையில் மட்டும் கைவைக்காமல். அது மின்சாரத்தைத் தொடும் அடிப்பகுதியையும் தொட முயன்றிருக்கிறாள். ஒரு படாலென்ற சத்தத்துடன் அவள் வீட்டில் மின்சாரம் போய், அவளும் தூக்கி எறியப்பட்டாளாம். நல்வாய்ப்பாக அவளுக்கு எதுவுமாகவில்லை. ஓரிரு மணிநேரங்கள் க்ளுகோஸ் ஏற்றிவிட்டு மருத்துவர் அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டாராம்.
ஒரு அனுபவமாகக் கூட இல்லாமல், ஒரு கதையாக மட்டுமே அவள் அறிந்திருக்கும் இதற்கும் அவளது இப்போதைய ஆர்வத்துக்கும் எந்தத் தொடர்புமிருக்கும் என்று அவளால் நம்பமுடியாததில் எந்தத் தவறுமில்லை.
•
இந்த ஆர்வம், அல்லது மின்சாரம் மீதான இச்சையை அவள் முதல் முதலாக உணர்ந்துகொண்டது கொசு பேட் என்னும் சாதனத்தைக் கண்டடைந்தபோதுதான். என்னவொரு அற்புதமான சாதனம். அவள் கல்லூரியில் படிக்கும்போதுதான் அது முதல்முறையாக அறிமுகமாகியது. பின்னாளில் அவள் காதலிகள் வைப்ரேட்டர் போன்ற சாதனங்கள் தங்கள் உடலிச்சையின் எல்லைகளைக் காட்டித்தந்த அனுபவங்களைக் கூறும்போதெல்லாம் அவளுக்கு இதுதான் ஞாபகம் வரும்.
கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த அவள் அப்பா அம்மாவிடம் எதையும் பேச இயலாதபடி சுற்றிவரும் வயதிலிருந்தாள். நூலகக் கடன் புத்தகங்களில் தன்னை மறைத்தபடி வீட்டில் நடப்பவற்றைக் கவனிக்க மறுத்தாள். வீட்டு வேலைகளைச் செய்வதில்லை, இப்படியிருந்தால் போகிற வீட்டிலெப்படி என்பதே அம்மாவின் ஒவ்வொரு பேச்சுக்கும் தொடக்கமாக இருந்தது. அப்பா அவளை முகம்பார்த்து பேசுவதைப் பெரும்பாலும் தவிர்த்திருந்தார். அப்படிப் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் பட் பட்டென்ற அந்த சத்தம் அவளை ஈர்த்தது. வாசலில் பக்கத்து வீட்டுப் பாட்டியுடன் பேசியபடியே அம்மா அதனை அப்படி இப்படி வீசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது அதில் கொசுக்கள் பட்டு வெடிக்க, சிறிய மத்தாப்பு கொளுத்தப்பட்டது போல பொறிகள் பறந்தன. கொசு பேட் என்று எங்கோ கேட்ட சொற்கள் அப்போது அவளுக்கு நினைவு வந்தன. அந்த வெளிச்சம் சுற்றி இருந்த எல்லாவற்றையும் இருளாக்கியது.
அம்மாவும் அப்பாவும் வீட்டிலில்லாமல் கொசு பேட்டுடன் தனித்திருக்க அவளுக்கு இன்னும் 22 மணிநேரங்கள் ஆகின. அந்த கொசுபேட் வலையில் ஓட்டைகள் சரியாக அவள் விரலுக்குப் பொருந்தின. அவளது விரல்களில் முதல்முறையாக அதனை உணர்ந்தபோதுதான் அவள் தன் உடலில் தானறியா பல பகுதிகள் உண்டென அறிந்தாள். ஒரு கரிய சமுத்திரத்தில் தனியே மிதந்தபடி, தன் தனிமையை வெறுக்கும் நிலையிலிருந்தவளுக்கு கடலில் ஒரு மின்னும் ஜெல்லி மீனைப் பார்த்ததுபோலிருந்தது. ஓரிரு ஜெல்லி மீன்கள். இன்னும் பலப்பல மின்னுமுயிரிகளைத் தேடி அவள் மிதக்கத் தொடங்கினாள்.
•
கடல் மிகப்பெரியது. யாராலும் அறிய இயலாதது. நாம் நமது அறிவைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியபோதே கடலையும் அறிந்துகொண்டோம். பகிர்ந்துகொள்ள ஆளில்லாத மனிதருக்கு கடல் இன்னமும் அறிய இயலாததே. அவர் மிதந்துகொண்டிருக்கிறார். மிதத்தலின் தனிமையில் அவர் இன்புகிறார். துயருறும் கணங்கள் குறித்துக் கவலையில்லை. துன்பம் அவரை உலகோடு இணைக்கிறது. இன்பம் எல்லா தளைகளையும் அவிழ்த்து அவரை தூரே தூரே மிதக்கச் செய்கிறது.
•
அவள் நீண்ட காலம் தனது இச்சைகளைப் புரிந்துகொள்ளும் பிறரைத் தேடினாள். ஆனால் அவளது இச்சைகளை வெறும் கொசு பேட் தாண்டி விரிவாக்க உதவும் எண்ணற்ற கருவிகளைக் கண்டடைந்தாளே தவிர பிற நபர்களோடு அவள் தொடர்புகொள்ள முடியவில்லை. அது ஏன் என்றும் அவளுக்கு ஒரு கட்டத்தில் புரியத் தொடங்கியது. ஆனால் அந்தப் புரிதலும், அதை சொற்களில் விளக்குவதற்கான திறன் அல்லது ஆர்வமும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. புரிதலை அடைந்ததும் அவள் மற்றதிலிருந்து விலகிக்கொண்டாள்.
சமூகத்தோடு தொடர்பிலிருக்க அவள் பிற எல்லா செயல்களிலும் ஈடுபட்டாள். அவளுக்கென்று பாலிச்சைகளும், விருப்புகளும் கூட இருந்தன. பாலியல் இச்சைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கண்டுகொண்டபோது தன் பதின்பருவத்தில் தொடங்கிய ஒரு பயணம் முடிவடைந்துவிட்டது போலவே உணர்ந்தாள். மிக எளிதாக விளங்கிக்கொள்ள முடிந்திருந்த ஒன்று மிகக் குழப்பமானதாக மாறியது.
•
கட்டுப்படுத்தப்பட்ட மின்சாரம். மிதந்துகொண்டிருக்கும். மிதவையுயிர்கள். மின்னுயிரிகள். சிறு வெளிச்சங்கள். கனவுகள். நட்சத்திரங்கள். நிலவு. கதிரியக்கம். உடல். சிதைதல். வளர்தல். உயிர். அசைவு.
•
நீண்ட நாட்கள் கழித்து அவள் தனியாக கஃபேவுக்கு வந்திருக்கிறாள். தனியாக கஃபேக்களுக்குச் செல்லும்போது அவளுக்கு சற்றே பரபரப்பு வந்துவிடும். அங்கே தான் யாருக்காகவோ காத்திருப்பதுபோல் காட்டிக்கொள்வாள். யாருமே அழைக்காவிட்டாலும் ஃபோனை எடுத்து காதில் வைத்து பேசத்தொடங்கிவிடுவாள். என்ன பேசுவது என்று அவளுக்கு எப்போதுமே குழப்பம் ஏற்பட்டத்திலை.
இல்ல அர்ஜூன். நான் நேத்திக்கே சொல்லிட்டேன். இன்னிக்கு என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. நான் என் ஃப்ரண்ட்ஸ பார்க்கப் போறேன்னு.
எனக்குப் புரியுதுங்க. ஆனா நான் சொன்னேன்ல.
சரி விடுங்க. நான் பார்க்குறேன். நான் பார்க்குறேன்.
இப்படி அவள் மனதுக்குள் ஏதோ கற்பனை உரையாடல்கள் ஓடிக்கொண்டே இருப்பதுபோலவும், அவற்றில் ஒரு நூலை சற்றே சத்தமாக பேசுவதுபோலவும் பேசி முடித்துவிடுவாள். அன்றும் அப்படியே பேசிவிட்டு, அந்த நான்காவது மாடி கஃபேயில் ஒரு காஃபி ஆர்டர் செய்துவிட்டு ஒரு மூலையில் அமர்ந்தாள். அவள் நரம்புகள் இன்னமும் மிதந்துகொண்டிருந்தன. நடக்கும்போது கால்கள் லேசாகத் தடுமாறக்கூடச் செய்தன.
அவள் அமர்ந்திருந்த மூங்கில் நாற்காலிக்கு சற்றருகே ரோட்டைப் பார்த்திருந்த விளிம்பை ஒட்டி நிறைய தொட்டிச் செடிகள் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குப் பின்னால் சுவரில் ஓடிக்கொண்டிருந்த ஒரு வயரில் சிறிய விரிசல் ஏற்பட்டிருந்தது. அதனை நேராகப் பார்க்கமுடியாவிட்டாலும் அவளால் உணரமுடிந்தது. கைகளை லேசாக நீட்டி அதன் பக்கமாக காற்றில் அளைந்தாள். மெல்ல உணரமுடிந்த மின்சாரத்தில் பச்சையம் படர்ந்திருந்தது. சட்டென தான் காற்றில் கைகளால் அளைந்து கொண்டிருப்பதை வேறு யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றிமுற்றி பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டாள். அவர்கள்…
ஹலோ. சொல்லுங்க அர்ஜுன்.
முடிஞ்சிடுச்சு. நீங்க சொன்னதெல்லாம் செக் பண்ணிட்டேன். குட் டூ கோ.
ஆமா. இந்த கஃபேலதான் இருக்கும். க்ளீவன்ஸ் ரோட் பக்கத்தில. ஒண்ணும் பெருசா இல்ல.
இன்னும் ஃப்ரண்ட்ஸ் வரல. வெயிட் பண்ணிகிட்டு பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன்.
நாளைக்கா? நாளைக்கு ஆஃபீஸ் வருவேன்னுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.
ஓகே. பை அர்ஜூன்.
•
அவள் நண்பன் இன்னமும் அவள் மனதை மாற்ற முயன்று கொண்டிருந்தான். அதற்குள் அவனது தொலைபேசி பலமுறை சிணுங்கியதால் அவளை விட்டுவிட்டு அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சற்றே உற்சாகமாகிறான், சிறிய ஏமாற்றம் அவளுக்கு இதெல்லாம் சிரிப்பூட்டுகின்றன. தன் விரல்களில் இதையெல்லாம் உணரமுடிவது அவளுக்கு குறுகுறுப்பாக இருக்கிறது. அந்தப் பெருநகரம் மின்சாரத்தில் இயங்குவது. அதன் ஒவ்வொரு மனிதரும் மின்சாரத்திலேயே இயங்குகிறார்கள். அவர்கள் உணர்வுகளை மின்சாரத்தில் நிரப்புகிறார்கள். எல்லாம் அவள் விரல் நுனியில்… ஒரு கையில் கிளாஸைப் பிடித்தபடி அதன் பின்னால் இன்னொரு கையை காற்றில் அளைந்து பார்க்கிறாள். அவள் விரல் நுனிகளில் தெரிக்கும் சிறிய மின்னலைகளை அந்த விஸ்கியினூடாக அவளால் பார்க்க முடிகிறது. நீலமும், சிகப்பும், பச்சையும் சிறிய மத்தாப்புகளைப் போல அவள் விரல்களைச் சுற்றித் தெரிக்கின்றன. அவள் நண்பனின் மேல் வழக்கமான ஒரு அக்கறையின்மையின் கனம் படிகிறது. அங்கே தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் பலரின் மேலும். அவள் விரல் நுனிகளின் மின்னலைகள் கருஞ்சிவப்பாகின்றன. அவள் தன் மேலும் கனமாக ஏதோ படிவதைப் போல உணர்கிறாள்.
அப்புறம்.
சட்டென அவள் நண்பனின் குரல் மீட்டெடுக்கிறது.
என்ன அப்புறம். நீதான் கதை சொல்லிக்கிட்டு இருந்த.
கதையாடி அதெல்லாம். அடிப்பாவி.
அவர்கள் கொஞ்சமாக சிரித்துக்கொள்கிறார்கள்.
•
அவளது கடல் இப்போது வெளிச்சமாக இருந்தது. அவளது மகிழ்ச்சி மிகுந்த தனிமையில் பல்வேறு குரல்கள் நெளிந்தன. அதில் எங்கும் இருள் இல்லை. நட்சத்திரங்கள் கூட பளீரென்று ஒளிவீசின. அவளுக்கு இப்போதும் மிதக்கும் உணர்விருக்கிறது. அவள் அதை இன்னமும் விரும்புகிறாளும் கூட. அதற்கென அவளுக்கு எந்தக் கருவிகளும் தேவைப்படுவதில்லை. ஆனாலும் சமயங்களில் வீட்டில் மெயினை ஆஃப் செய்துவிட்டு படுத்துக்கொள்கிறாள். அவளால் தனியாகவோ இருட்டிலோ இருக்கமுடியவில்லை. அவள் மிதந்துகொண்டே இருக்கிறாள். அவள் மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ இல்லை, செயல்படவோ செயலின்மையிலோ இல்லை. அவள் இருக்கிறாள்.
வயலட்'s Blog
- வயலட்'s profile
- 6 followers

