ஆன்டன் செக்காவைக் கொண்டாடுவோம் புத்தக ஆர்வலரான நண்பருக்குப் பரிசளிக்கச் சிறுகதைத் தொகுப்பினைத் தேடுபவரா நீங்கள் ? எவ்விதத் தயக்கமுமின்றிச் செக்காவின் கதைகளை நான் பரிந்துரைப்பேன். சிறுகதை எழுதும் ஆர்வமுடைய இளம் எழுத்தாளரா நீங்கள் ? அப்பொழுதும் ஆன்டன் செக்காவின் கதைகள் உங்களுக்குச் சில ஆலோசனைகளைக் கூறக்கூடும். மன இறுக்கத்தைக் குறைக்கவும், சக மனிதர்களுடன் உரையாடும்போது குதூகலத்தை அதிகரிக்கவும் செக்காவின் கதைகள் உங்களுக்குத் துணை நிற்கும். இத்தகைய ஆற்றல் படைத்த ஆன்டன் செக்காவ், ரஷ்ய இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்தவராவார். பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்த அவருடைய
அருமையான மொழிப்பெயர்ப்பு... நான் படிக்கும் முதல் செக்காவ் புத்தகம்... கதைகள் அனைத்தும் எளிமையான நடையில், ஆழமான எதோவொரு உட்கருத்துடன் இருக்கிறது... செக்காவை தொடர்ந்து படிக்க வேண்டுமென ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது... (1800களிலேயே அந்நாட்டு மக்களின் தரம், வாழ்க்கை முறை மேம்பட்டிருப்பது இக்கதைகளின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது)
ஆன்டன் செகாவ் இந்தக் கதைகளை எழுதி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால், இன்றும் சில கதைகள் உயிர்ப்புடனே இருக்கின்றன.
முழுமையான அறிதல்கள் இல்லாமல் சூழலுக்கேற்ப வாழ்வாதாரத்தை முன்னிட்டு மட்டுமே தன்னை உருமாற்றிக் கொள்ளும் மனித மனம் தான் இந்தக் கதைகளை இன்னும் இளமையாக வைத்திருக்கின்றது… என்றும் வைத்திருக்கும்.
இத்தொகுப்பைப் படித்து முடித்ததும் அதிலிருக்கும் கதைகளை விட, தேய்மானம் இல்லாமல் அது கடந்து வந்த காலத்தையே மனம் அசை போடுகிறது.
காலம் சொட்டு சொட்டாக கரைந்து கொண்டிருக்கிறது என்றும் போல் இன்றும்.
என்றோ படித்த கவிதை ஞாபகம் வருகிறது. இதே பொருள் தர கூடிய வரியில் இத்தொகுப்பில் கூட ஒரு கதை துவங்குகிறது.
//பதினைந்தாம் நூற்றாண்டில், இப்பொழுது நடப்பது போலவே, ஒவ்வொரு நாளும் சூரியன் காலையில் எழுவதும் மாலையில் மறைவதுமாக இருந்தது.//
இப்படி ஆரம்பிக்கும் அந்தப் பத்தி... //சில சமயங்கள் மேகங்கள் திரண்டு இடி இடிக்கும். ஒரு துறவி பயந்து ஓடி வந்து புலியைப் பார்த்ததாகத் தன்னுடன் தங்கியிருக்கும் அருட்சகோதரர்களிடம் சொல்வார். அதற்குமேல் ஒன்றுமில்லை. பிறகு மீண்டும் அதே நாள், அதே இரவு…// என்று முடியும்.
பிடிவாதமாக ஞாபகம் வைத்துக் கொண்டாலன்றி காலம், சாராம்சத்தை மட்டும் மனதில் நிறுத்திவிட்டுப் பெயர்களை மறக்கச் செய்துவிடுகிறது. மேலே நான் சொல்லி இருக்கும் காலம் பற்றிய கவிதை கூட, அது எழுதியவரின் பெயர் ஞாபகம் இல்லை. ஏன், கவிதை கூட அச்சு அசலாக ஞாபகம் இல்லை.
இந்தப் பொருளில் ஒரு கதையும் இந்தத் தொகுப்பில் உண்டு.
“முதல் வகுப்புப் பயணிகள்” என்கிற அந்தக் கதை விவரிக்கும், நூற்று முப்பது வருடங்களாக மாறாத ஊடகங்களின் இயல்பு பிரமிப்பையே தருகின்றது.
அதுவும் இக்கதையில் வரும், சாதித்தவர்களின், சாதிப்பவர்களின் எதிர்பார்ப்பு, சோர்வு, மன உளைச்சல், இயலாமை, தன்னைப் போல் பிறரை மதிக்காத, நினைக்காத மனம் என அப்பட்டமாக வரி மாறாமல் இன்றும் நீடிக்கின்றன.
சொல் பேச்சு கேட்கவில்லையென்றால் அடி விழும் என்பது போன நூற்றாண்டின் பிள்ளை வளர்ப்பு. நீ இதைச் செய்தால் இதைத் தருவேன் என்கிற பேரம் காலாவாதியாகிவிட்டன.
இன்று பிள்ளைகளின் மனதில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காகச் செய்யும் கை தட்டல்கள் கூட மறுபரிசீலனை செய்யவேண்டியதாக இருக்கிறது. வளர வளர எல்லோரும் கைதட்டவில்லையே எல்லாவற்றிற்கும் புகழவில்லையே என்கிற எதிர்பார்ப்பு அவர்களை மன உளைச்சலில் கொண்டு விடுகின்றது.
அதனால், சிறுவயதிலிருந்தே நாசுக்காக அவர்களிடம் சுய மரியாதை, சுய திருப்தி, நல்லெண்ணம் போன்ற ஒழுங்கியல்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகின்றன. ஏன், நாசுக்காகச் சொல்லவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தத் தொகுப்பில் வரும் “வீட்டில்” என்கிற கதை.
பெற்றோர் பிள்ளைகளை எப்படி வழிநடத்துவது என்று விவாதிக்கும் இந்தக் கதையில் செகாவ் இப்படிச் சொல்கிறார்…
//ஏன் உண்மையையும் நீதியையும் அது உள்ள நிலையிலேயே அப்படியே தராமல், எதையாவது கலந்து, மாத்திரைகளைப் போல இனிப்பில் தோய்த்து முலாம் பூசித்தர வேண்டும்? அது முறை இல்லை. அப்படிச்செய்வது மோசடி, சூழ்ச்சி, ஏமாற்றும் வேலை.//
//மருந்து என்றால் இனிப்பாக இருக்கவேண்டும். உண்மை என்றால் அழகாக இருக்கவேண்டும் ஆதாம் காலத்திலிருந்தே இந்த முட்டாள் தனமான எண்ணம் மனிதனிடம் இருந்து வருகிறது. ஆனால், அவை இயற்கையாக இருக்கலாம். அப்படித்தான் இருக்கவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் சில அனுகூலங்களையும் ஏமாற்றங்களையும் இயற்கையே ஏற்பாடு செய்து வைத்துள்ளது.//
இயற்கையாகவே மனிதனுக்குப் பிடித்த சுவை இனிப்பு என்று இன்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படியே கேளிக்கைகளும் கலகங்களும் கிசுகிசுப்புகளும் போல.
மீறல்களை மனித மூளை சுறுசுறுப்பாகச் சேமித்துக்கொள்கிறது. சர்ச்சைகள் அதற்குச் சுவாரசியம் தருகிறது. அதனாலே ஒரு விஷயத்தை மனதில் பதிய வைக்க இதைப் போல் சில அணிகலன்கள் தேவையாகின்றன.
செகாவின் கதைகள் ஒரு சர்ச்சையை, மீறலை முன்னிறுத்தித் தான் தொடங்குகிறது. இந்தப் பாணி கதை சொல்லில் நிறைய எழுத்தாளர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
எல்லாச் சிறுகதைகளிலும் முதல் வரியிலேயே ஒரு அதிர்ச்சியையோ, வியப்பையோ, கேள்வியையோ கொடுத்துப் படிப்பவரின் கவனத்தை ஈர்த்து ஒரு சுவாரசியத்தை உருவாக்கிவிடுகிறார் செகாவ்.
இந்தத் தொகுப்பில் முதல் கதையான “பேச்சாளர்” இப்படி ஆரம்பிக்கின்றது…
//அன்று காலை, வருமானவரி ஆய்வாளர் கிரில் இவாநோவிச் வாவிலோநோவின் இறுதிச் சடங்குகள் நடக்க இருந்தன. நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் இரண்டு நோய்களால் அவர் இறந்துவிட்டார். ஒன்று குடிப்பழக்கம், மற்றொன்று சண்டை பிடிக்கும் மனைவி.//
இதை எழுதி ஒரு நூற்றாண்டு கடந்து இன்றும் இவை இரண்டையும் நாம் நோய் என்று ஏற்கவில்லை.
ஆனால், இந்தக் கதை இதைப் பற்றியதல்ல, இறந்தவருக்கு இரங்கல் உரையாற்ற வரும் பேச்சாளர் பற்றியது.
பேச்சாளர் இறந்தவரைத் தவறுதலாக ஆள் மாற்றி நினைத்து விடுகிறார். ஆனால், உரையை முடிப்பதற்கு முன்பே அவருக்குத் தெரிந்துவிடுகிறது தான் இறந்ததாக நினைத்தவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார், அவரது உரையையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று. இருந்தும் பெயரை மாற்றாமல் சாதுரியமாக உரையைத் தொடர்ந்து முடித்துவிடுகிறார்.
மக்களும் உயிரோடு இருப்பவனை எவ்வளவு திறமையாகச் சாகடித்துவிட்டான் என்று பேச்சாளரை மெச்சுகிறார்கள். சிலருக்கு நெகிழ்ச்சியான அந்த இரங்கல் உரையில் கண்ணீர் கூட வந்துவிடுகிறது.
உயிரோடு இருப்பவனை இறந்துவிட்டான் என்பது கூடத் துக்கமில்லை. ஆனால், இல்லாத பெருமைகளையும், குறைகளையும், குணாதிசயங்களையும் தனக்குச் சூடுவது அவமானமாக இருக்கிறது என்று உயிரோடு இருப்பவர் பேச்சாளாரிடம் சொல்வதாகக் கதை முடிகிறது.
இந்தக் கதை இன்று தலைவர்களுக்கும், பிரபலமானவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் வரும் இரங்கல் உரையை ஞாபகப்படுத்துகிறதல்லவா.
தேர்ந்த வார்த்தைகளின் கச்சிதத்தால், கதைக்குத் தேவையானவற்றை மட்டுமே முன்வைத்து எடுத்துரைத்த விதத்தால், கதைக்குள் இயல்பாகவே நம்மால் உள் நுழைந்து முன்னும் பின்னும் உலாவ முடிகிறது.
ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லப் போகிறார், ஒரு புதிரை விடுவிக்கப் போகிறார் என்பதான எழுத்து நடை, ஒவ்வொரு கதையிலும் தெறிக்கும் அங்கதங்கள் அடுத்தடுத்து கதைகளைப் படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
சில கதைகளை மொழிபெயர்ப்பின் பலவீனத்தால் முழுதாக உள்வாங்க முடியவில்லை.
2019 இல் வெளியிடப்பட்ட இந்த மொழிபெயர்ப்புத் தொகுப்புச் சிரத்தையாக மொழிபெயர்க்கப்பட்டதை உணர முடிந்தாலும் சில இடங்களில் மொழிபெயர்ப்பின் போதாமைகளால் கதைக்குள் உட்கார முடியவில்லை.
சிறப்பான கதைகள்... மெல்லிய பகடி கலந்த கதைகள் நல்ல வாசிப்பனுபவம் தருகின்றன... செக்காவ் எனும் தேர்ந்த சிறுகதை எழுத்தாளரின் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல்.
💫பொதுவாக புதினங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் போல சிறுகதைகள் எனக்குள் அவ்வளவு சீக்கிரம் நுழைந்து விடுவதில்லை. சில சிறுகதைகள் புரியாமலோ, பிடிக்காமலோ, பொருத்திப் பார்க்க முடியாமலோ போய் விடுகின்றன. சில சிறுகதைகள், சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த நபரைப் போன்றவை. அவற்றைப் பற்றி யோசிக்க எதுவுமே இருப்பதில்லை.
💫தனிமனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட சிறுகதைகள் எனக்கு இன்னும் நெருக்கமானவை. இதுவரை படித்ததில் சுந்தர ராமசாமி அவர்களின் ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள அதே தலைப்பிலான சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
💫ஆன்டன் செக்காவ் அவர்களின் சிறுகதைகள் யோசிக்கவும் வைத்து, ஏதோ ஒரு உணர்வையும் தந்து சென்று, சிரிக்கவும் வைத்து விடுகின்றன.
💫பயம் ஒரு மனிதனை எவ்விதமாக பேசவும், செயல்படவும் வைக்கிறது – அதிருப்தியும், பொறாமையும் கொண்ட மனிதன் எப்படிப் பேசுவான் – உலகம் தெரியாத, எதிர்த்துப் பேசாத பெண்ணின் நிலை என்ன – இரண்டு வெவ்வேறு பதவிகள் கொண்ட நண்பர்களின் நட்பு எவ்விதமாய் இருக்கும் – இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க நினைப்பவன் என்னவெல்லாம் செய்வான் – இப்படி ஒரு மனிதனின் பல்வேறு உணர்வுகளை அவரது சிறுகதைகள் பதிவு செய்கின்றன.
💫சிகரெட் பிடிக்கும் தனது சிறு வயது மகனை அவனது தந்தை எப்படித் திருத்துகிறார் என்பதைப் பற்றிய ‘வீட்டில்’ என்ற சிறுகதை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
💫மொழிபெயர்ப்பு வாசிப்பதற்கு எளிமையாக, சிறப்பாக இருந்தது. ஆங்காங்கே எழுத்துப் பிழைகளும், சந்திப் பிழைகளும் இருந்தன. அவை நிச்சயம் திருத்தப்பட வேண்டியவை.
மூல ஆக்கத்தின் காலத்தை கணக்கில் கொண்டால், இது ஒரு சிறந்த படைப்பு என்பதில் மறுப்பில்லை. மனிதர்களின் இயல்புகளையும் முரண்களையும் செக்காவ் அருமையாக அங்கத சுவையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
"வீட்டில்" என்ற கதையே இந்த தொகுப்பின் மகுடம் எனலாம். இந்த புத்தகத்தை முழுவதும் படிக்காமல் போனாலும், இக்கதையை தவற விடக்கூடாது என்பேன்! குழந்தைகளின் உளவியலையும், குழந்தை வளர்ப்பின் சிடுக்குகளும் இதில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
மொழியாக்கம் மட்டுமே சிறு நெருடல். இன்னும் எளிமையாக, சுவையாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். அதனாலாயே மூன்று ஸ்டார் ரேட்டிங்.
செக்காவ்/ இரஷ்ய இலக்கிய அறிமுகத்திற்காக வாசிக்கலாம்.
எனக்குப் பிடித்த மேற்கோள்கள் சில:
"பல நேரங்களில், குற்றத்தை விட தண்டனைதான் அதிகமாகத் தீங்கு விளைவிக்கிறது"
"எவ்வளவு குறைவாக ஒரு தீமை புரிந்து கொள்ளப்படுகிறதோ, அவ்வளவு மோசமாகவும் பயங்கரமாகவும் அது எதிர்க்கப்படும்."
"பிள்ளை வளர்ப்பதில், தாய்க்கு மாற்றாக யாரும் இருக்கமுடியாது. ஏனெனில், தன் குழந்தைகளோடு சேர்ந்து உணரவும், சிரிக்கவும், அழவும் அவளால் மட்டுமே முடியும்"
எனக்கு பொதுவாகவே மொழி பெயர்ப்பு நூல்கள் என்றாலே ஒரு ஒவ்வாமை. முதல் காரணம், புத்தகம் கூறும் சூழலை நம்மால் புரிந்து கொள்ளமுடியுமா என்று. இரண்டாவது காரணம், புத்தகத்தில் வரும் பெயர்கள் மிகவும் குழப்பமாக இருக்கும் என்ற ஐயப்பாடு.
ஒரு தயக்கத்துடன் தான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன். பெயர்கள் ஏகத்துக்கும் எனது மூளையை சோதித்தாலும், கதைகள் எல்லாம் ஒரு விதமான பரிகாசத்துடனும், மனிதர்களின் அனுபவங்களுடனும் இருக்கின்றன. ஒரு நல்ல அனுபவத்தையும் வாசிப்பையும் இந்த புத்தகம் தருகின்றது.
துறவு, வீட்டில், கலைப்பொருள் ஆகிய கதைகள் எனக்கு பபிடித்திருந்தது. ஆன்டன் செக்காவ் என்னும் ஒரு சிறந்த எழுத்தாளரின் வாசிப்புகளை இத்துடன் நிறுத்திவிடுவேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
I assume this is best anton short story, translation was at best. His humorous narrative is stunning. I can't believe it was written in 19th century its still looking pristine. Chekov describes human consciousness precisely. If u ever see anton short stories just buy it period
ஆன்டன் செக்காவ்வின் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகள் இன் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க இயலவில்லை. மேலும் கதைகளில் இழைந்தோடும் நகைச்சுவைகள் குறைவுதான். சில கதைகளில் கூறப்படும் கருத்துக்களை உணர பலமுறை அசைபோட வேண்டியிருக்கிறது
I recommend this book to you if you have time to read it. Pros: You can not predict the climax. Cons: You can not know what the author is trying to say. It needs discussion.