பொன்னியின் செல்வன் - சுழற்காற்று - பாகம் 2
(குமரன் பதிப்பகம் )
இந்த பாகத்தில், கோடிக்கையரையிலுள்ள 'பூங்குழலி'யை பினாகபாணியும்(அரண்மனை வைத்தியர் மகன்) வந்தியத்தேவனும் சந்தித்தது முதல் இலங்கைக்கு படகு பயணம், இளவரசர் அருள் மொழி வர்மரை கண்டது, அவரிடம் (ஆதித்த கரிகாலன்/குந்தவையின்) தகவல்களை தெரிவித்தது, இடையில் ஆழ்வார்கடியானும் தனது பங்குக்கு முதன் மந்திரி அநிருத்த பிரம்மராயரின் தகவலை தெரிவித்தது, இலங்கை மணிமுடியை இளவரசர் தவிர்த்தது, இலங்கையிலிருந்து கோடியக்கரை செல்லும் கடல்புரத்தில், பாண்டிய ஆபத்துதவிகளிடம் இருந்து அருள்மொழி வர்மரும் வந்தியத்தேவனும் தப்பி, சுழற்காற்றில் சிக்கியது என பரபரவென செல்கிறது.
திரைப்படத்தில் கோடியக்கரை குழகர் கோயில், சேற்று பள்ளத்தில் வந்தியத்தேவன் மாட்டிக்கொண்ட சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. போலவே, நடுக்கடலில் கப்பலிலிருந்த வந்தியத்தேவனை இளவரசர் பூங்குழலி உதவியினால் காப்பாற்றியதாக காட்டப்பட்ட காட்சி, சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல சிற்சில சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மாதோட்டம், பூதத்தீவு, நாகத்தீவு, தம்பளை, காங்கேசன் துறை, முல்லைத்தீவு, திரிகோணமலை, அநுராதபுரம், சிம்மகிரி குன்று, யானை இறவுத்துறை, தொண்டைமான் ஆறு என பல இடங்களுக்கு கதைமாந்தர்கள், வாசிப்பவரை அவர்களுடன் அழைத்து பயணப்படுகின்றனர்.
இப்பாகத்தின் கதை, பெரும்பாகம் இலங்கையில் நடந்திருந்தாதாலும், தஞ்சையில் குந்தவையும் நந்தினியும் பார்வை கணைகளாலும், இனிய சொல்லம்புகளாலும் தாக்குதல்களில் ஈடுபட்டதையும் விவரிக்கிறது.
நாவலில் பூங்குழலி அடிக்கடி பாடும், "அலைகடலும் ஓய்ந்திருக்க ..." எனும் பாடலை அவள் என்ன மனவோட்டத்தில் பாடுகிறாள் என்பதை திரு கல்கி அவர்கள் வர்ணித்திருப்பார். அதை அப்படியே ரஹ்மான் அவர்கள் "அலை கடல் ஆழம் நிலவு அறியாதோ ..." திரைப்பட பாடலில் கொண்டு வந்துள்ளார்.
இப்பாகத்தின் முடிவு, முதல் பாகம் போல் அல்லாது, சற்றே விறுவிறுப்புடன் சென்று முடிகிறது. காரணம், வங்ககடல் பகுதியில் சுழற்காற்றும், அதில் சிக்கி தவித்த வந்தியத்தேவனும் அருள்மொழி வர்மரும் எப்படி தப்பி பிழைக்கிறார்கள் என்பதும் தான்.
புத்தகத்திலிருந்து ...
\
“அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே
வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?
/
\
அங்கே பாதி மணலிலும் பாதி சேற்றுக் குழியிலும் கிடந்த படகு ஒன்று அவள்(பூங்குழலி) கவனத்தைக் கவர்ந்தது. அக்குழியில் தண்ணீர் நிறைந்து ஆழமான நீரோடையாக இருந்த காலத்தில் அப்படகு உபயோகப்பட்டிருக்க வேண்டும். அதில் இப்போது லாகவமாகக் குதித்து ஏறினாள். துடுப்பை எடுத்து இரண்டு தடவை வலித்தாள். அடாடா! இது என்ன அதிசயம்? அந்தப் படகு நீரில் அன்னப்பறவை செல்வது போல் அல்லவா சேற்றின் மேலே விரைவாக மிதந்து செல்கிறது? மிதந்து சென்று புதை சேற்றுக் குழியின் அக்கரையையும் அடைந்துவிட்டது. பூங்குழலி கெட்டித்தரையில் குதித்தாள். கரையில் கால்களை நன்றாய் ஊன்றிக் கொண்டு வந்தியத் தேவனுடைய கைகளைப் பற்றிக் கரையில் இழுத்து விட்டாள். அம்மம்மா! அந்த மெல்லியலாளின் கைகளிலே தான் எவ்வளவு வலிமை! தஞ்சைபுரிக்கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையருடைய இரும்புக் கைகளைவிட இவளுடைய கரங்கள் அதிக உறுதியாயிருக்கின்றனவே!
/
\
கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால், அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேயிருந்து கந்தகம் கலந்த வாயு வெளியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும். சில சமயம் நீடித்து நிற்கும். சில சமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள் பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்…
/
\
மேற்குக் கடலில் சூரியன் அஸ்தமித்தது. கோடிக்கரையில் இது ஓர் அற்புதமான காட்சி. அதுவரை தெற்கு நோக்கி வரும் கடற்கரை அந்த முனையில் நேர்கோணமாக மேற்கு நோக்கித் திரும்பிச் செல்கிறது. ஆதலின் கோடிக்கரையில் மேடான இடத்திலிருந்து பார்த்தால் கிழக்கு – மேற்கு – தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கடல் பரந்திருக்கக் காணலாம். சிற்சில மாதங்களில் சூரிய சந்திரர்கள் கிழக்குக் கடலில் ஜோதிமயமாக உதயமாவதையும் பார்க்கலாம். மேற்கே கடலைத் தங்கமயமாகச் செய்து கொண்டு முழுகி மறைவதையும் காணலாம். வந்தியத்தேவனுக்கு மண்டபத்தை மூடியிருந்த மணல்திட்டின் மேல் ஏறிச் சூரியன் கடலில் மறையும் காட்சியைப் பார்க்க ஆவல் உண்டாயிற்று. அதைப் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டான்.
/
\
“சுழிக்காற்று அடித்தால் பெரிய பெரிய மரக்கலங்கள் எல்லாம் சுக்கு நூறாகிவிடும். இந்தச் சிறிய படகு எம்மாத்திரம்?”
“சுழிக்காற்று என்றால் என்ன?”
“இதுகூடத் தெரியாதா? ஒரு பக்கமிருந்து அடிக்கும் காற்றும், இன்னொரு பக்கத்திலிருந்து அடிக்கும் காற்றும் மோதிக் கொண்டால் சுழிக்காற்று ஏற்படும். இங்கே தை, மாசி மாதங்களில் ‘கொண்டல் காற்று’ அடிக்கும். அப்போது அபாயமே இல்லை. சுலபமாகத் கோடிக்கரைக்கும் இலங்கைக்கும் போய் வரலாம். ‘இரவுக்கிரவே போய்விட்டுத் திரும்பலாம். வைகாசியிலிருந்து ‘சோழகக் காற்று’ அடிக்கும். சோழகக் காற்றில் இங்கிருந்து இலங்கை போவது கொஞ்சம் சிரமம். இப்போது சோழகக் காற்றுக்கும் வாடைக்காற்றுக்கும் இடையில் உள்ள காலம். கடலில் சில சமயம் காற்றும், காற்றும் மோதிக்கொள்ளும். மத்தினால் தயிர் கடைவது போல் காற்று கடலைக் கடையும். மலை போன்ற அலைகள் எழும்பி விழும். கடலில் பிரம்மாண்டமான பள்ளங்கள் தென்படும். அப்பள்ளங்களில் தண்ணீர் கரகரவென்று சுழலும். அந்தச் சுழலில் படகு அகப்பட்டுக் கொண்டால் அரோகராதான்.”
/
\
வானமாதேவியும் அத்தகைய புத்திசாலித்தனமான காரியத்தைத் தினந்தோறும் செய்கிறாள்! ஜோதிமயமான சூரிய பகவானைத் தன் வசத்திலிருந்து கடலில் நழுவ விட்டு விடுகிறாள். பிறகு தன் நாதனைக் காணவில்லையே என்ற கவலை அவளுக்கு உண்டாகிவிடுகிறது. லட்சதீபம் ஏற்றிச் சூரியனைத் தேடுகிறாள்! லட்ச தீபம் மட்டுமா ஏற்றுகிறாள்? கோடானு கோடி தூங்கா விளக்குகளை ஏற்றி இரவெல்லாம் அவளும் தூங்காமல் சூரியனைத் தேடிக் கொண்டிருக்கிறாள்!
/
\
“இப்போது நேரம் என்ன?”
“வானத்தைப் பார்த்துத் தெரிந்து கொள். சப்த ரிஷிமண்டலத்தைப் பார்!” என்றாள் பூங்குழலி.
வந்தியத்தேவன் வட திசையில் அடிவானத்தைப் பார்த்தான். அவன் படகு ஏறும்போது பார்த்ததற்கு இப்போது சப்த ரிஷிகள் இடம் மாறிப் பாதி வட்டம் வந்திருந்தார்கள். அந்த அருந்ததி நட்சத்திரம் வசிஷ்டருடன் எப்படி ஓட்டிக் கொண்டே வருகிறது! அதிசயந்தான்! துருவ நட்சத்திரம் மட்டும் இருந்த இடம் விட்டு அசையவில்லை. வானவெளியும் மூலைக் கடலும் சேரும் அந்த இடத்தில் துருவ நட்சத்திரம் யுக யுகமாக நிலைத்து நின்று வருகிறது! எத்தனை எத்தனையோ கப்பல் மாலுமிகளுக்கு வழியும் திசையும் காட்டிக்கொண்டு வருகிறது. துருவ நட்சத்திரம்!
/
\
“சூரியனை மேகங்கள் மறைத்திருக்கலாம்; அல்லது கடலுக்கடியில் சென்றிருக்கலாம்.”
“இந்தச் சூரியனை எந்த மேகமும், கடலும் மறைத்து விட முடியாது. பொன்னியின் செல்வரை மறைக்க முயலும் மேகமும் ஒளி பெறும்; கடலும் ஜொலிக்கும்!”
/
\
“நாகத் தீவுக்குப் பக்கத்தில் பூதத் தீவு என்று ஒன்றிருக்கிறது.”
“தீவின் பெயரே கேட்கப் பயங்கரமாயிருக்கிறதே!”
“பயப்படாதே! ஆதியில் அந்தத் தீவின் பெயர் போதத் தீவு. புத்த பகவான் ஆகாச மார்க்கமாக இலங்கைக்கு வந்த போது முதன் முதலில் அந்தத் தீவிலேதான் இறங்கினாராம். அங்கிருந்த அரசமரத்தினடியில் வீற்றிருந்து புத்த தர்மத்தைப் போதித்தாரம். அதனால் போதத் தீவு என்று பெயர் வந்தது.”
“பின்னால் அது ‘பூதத் தீவு’ என்று ஆகி விட்டதாக்கும்.”
“ஆமாம்! ‘பூதத் தீவு’ என்ற பெயரைக் கேட்டே உன்னைப்போல் பலர் பயங்கரமடைந்தார்கள். பிறகு அந்தத் தீவுக்குச் சாதாரணமாக யாரும் போவதில்லை. பூதத்துக்குப் பயப்படாதவர்கள்தான் போவார்கள்.”
“அதாவது உன்னைப் போன்ற தைரியசாலிகள். கொள்ளிவாய்ப் பிசாசுக்குப் பயப்படாதவள் அல்லவா நீ? சரி; பூதத் தீவைப்பற்றி என்ன சொல்ல வந்தாய்?”
“பூதத் தீவின் கரையில் ஒரு நாழிகை நேரம் நீ தாமதித்தால் பொன்னியின் செல்வர் இப்போது இலங்கையில் எங்கே இருக்கிறார் என்று விசாரித்துச் சொல்வேன்…”
/
\
இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய அமைச்சர் வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன.
/
\
ஐந்நூற்றுவர் சபையின் பிரதிநிதிகள் போன பிறகு ஒரு காவலன் வந்து, “தெரிஞ்ச கைக்கோளப் படைச் சேனாதிபதிகள் காத்திருக்கிறார்கள், பார்க்க விரும்புகிறார்கள்” என்று சொன்னான்.
“வரச் சொல்லு!” என்றார் முதல் அமைச்சர் அநிருத்தர்.
மூன்று கம்பீர புருஷர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது.
(இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர். அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் ‘அகப் பரிவாரப் படை’யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் ‘தெரிஞ்ச கைக்கோளர் படை’ என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.)
/
\
“இலங்கை யுத்தத்தோடு யுத்தம் முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கைப்போர் முடிந்த பிறகு நாலா திசைகளிலும் திக்விஜயம் செய்யப் புறப்படுவார். ஆயிரம் கப்பல்களில் வீரர்களை ஏற்றிக்கொண்டு கீழ்த்திசைக் கடல்களிலே செல்வார். மாநக்கவாரம், மாபப்பாளம், மாயிருடிங்கம், கடாரம், இலாமுரி தேசம், ஸ்ரீவிசயம், சாவகம், புட்பகம் ஆகிய நாடுகளை அந்த மகா வீரர் வெற்றி கொள்வார். தெற்கே முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும் கைப்பற்றுவார். மேற்கே, கேரளம், குடமலை, கொல்லம் ஆகிய நாடுகள் அவருடைய காலடியில் வந்து பணியும். பிறகு வடதிசை நோக்கிப் புறப்படுவார். வேங்கி, கலிங்கம், இரட்டபாடி, சக்கரக்கோட்டம், அங்கம், வங்கம், கோசலம், விதேகம், கூர்ஜரம், பாஞ்சாலம் என்னும் நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்வார். காவியப் புகழ் பெற்ற கரிகால வளவனைப் போல் இமயமலைக்கும் சென்று புலிக்கொடியை நாட்டுவார். வீர சேநாதிபதிகளே! இப்படியெல்லாம் நமது தென்திசை மாதண்டநாயகர் திட்டம் இட்டிருக்கிறார். தமிழகத்தில் வீர ரத்தமும், வயிர நெஞ்சமும் படைத்த அனைவருக்கும் வேண்டிய வேலை இருக்கும்; தத்தம் வீர பராக்கிரமங்களை நிலை நாட்டச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆகையால் நீங்களும் உங்கள் தெரிஞ்ச கைக்கோளப் படையும் பொறுமை இழக்க வேண்டாம்!”
/
\
இளைய பிராட்டி சில காலமாகத் தஞ்சைக்குப் போவதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தாள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. தஞ்சையில் அரண்மனைப் பெண்டிர் தனித்தனியாக வசிக்கும்படியாகப் போதிய அரண்மனைகள் இன்னும் உண்டாகவில்லை. சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனையிலேயே எல்லாப் பெண்டிரும் இருந்தாக வேண்டும். மற்ற அரண்மனைகளையெல்லாம் பழுவேட்டரையர்களும் மற்றும் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள். பழையாறையில் அரண்மனைப் பெண்டிர் சுயேச்சையாக இருக்க முடிந்தது. விருப்பம் போல் வெளியில் போகலாம்; வரலாம். ஆனால் தஞ்சையில் வசித்தால் பழுவேட்டரையர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தீரவேண்டும். கோட்டைக்குள்ளும், அரண்மனைக்குள்ளும் இஷ்டம்போல் வருவதும் போவதும் இயலாத காரியம். அம்மாதிரி கட்டுப்பாடுகளும், நிர்ப்பந்தங்களும் இளைய பிராட்டிக்குப் பிடிப்பதில்லை. அல்லாமலும் பழுவூர் இளையராணியின் செருக்கும், அவளுடைய அகம்பாவ நடத்தைகளும் குந்தவைப் பிராட்டிக்கு மிக்க வெறுப்பை அளித்தன. அரண்மனைப் பெண்டிர்கள் பழையாறையில் இருப்பதையே சக்கரவர்த்தியும் விரும்பினார். இந்தக் காரணங்களினால் குந்தவைப் பிராட்டி பழையாறையிலேயே வசித்து வந்தாள். உடம்பு குணமில்லாத தன் அருமைத் தந்தையைப் பார்க்கவேண்டும், அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
/
\சாதுவாகிய மதுராந்தகனை ஏன் இவர்கள் சிம்மாசனத்தில் ஏற்றப் பார்க்கிறார்கள்? தர்ம நியாய முறைக்காகவா? இல்லவே இல்லை. மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டினால் அவனைப் பொம்மையாக வைத்துக்கொண்டு தங்கள் இஷ்டம் போல் எல்லாக் காரியங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகத்தான். அப்புறம் நந்தினி வைத்ததுதான் சோழ சாம்ராஜ்யத்தில் சட்டமாகிவிடும்! அவளுடைய அதிகாரத்துக்குப் பயந்துதான் மற்றவர்கள் வாழ வேண்டும். அவளிடம் மற்ற அரண்மனை மாதர் கைகட்டி நிற்கவேண்டும். சீச்சீ! அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்க முடியுமா? நான் ஒருத்தி இருக்கும் வரையில் அது நடவாது. பார்க்கலாம் அவளுடைய சமார்த்தியத்தை!
/
\
சோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.
/
\
பழுவூர் இளையராணிக்கும், பழையாறை இளையபிராட்டிக்கும் ஓயாமல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சொல்லம்புகளைக் கொண்டும் விழிகளாகிற வேல்களைக் கொண்டும், அவ்விரு அழகிகளும் துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் இரு பக்கமும் கூருள்ள வாள்கள் ஒன்றோடொன்று உராய்ந்தபோது தீப்பொறிகள் பறந்தன. தீட்டிச் சாணை பிடித்த ஈட்டிகள் ஒன்றையொன்று தாக்கி ஜுவாலை வீசின. இருண்டவான வெளியில் இரண்டு மின்னல்கள் ஒன்றையொன்று வெட்ட, இரண்டும் சேர்ந்து துடி துடித்தன. கொடிய அழகு வாய்ந்த இரண்டு பெண் புலிகள் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கால் நகங்களினால் பிறாண்டி இரத்தம் கசியச் செய்தன. பயங்கரச் சௌந்தரியம் பொருந்திய இரண்டு நாகசர்ப்பங்கள் படம் எடுத்து ஆடி அவற்றின் கூரிய மெல்லிய சிவந்த நாக்குகளை நீட்டி ஒன்றையொன்று விழுங்கி விடப்பார்த்தன.
இந்த அதிசயமான போராட்டத்தில் அவர்கள் உற்சாக வெறியும் அடைந்தார்கள்; வேதனைப்பட்டு உள்ளம் புழுங்கியும் துடித்தார்கள்.
/
\
இப்போது அதிகாரம் செலுத்தி வந்த பழுவேட்டரையர்களின் பெரிய தந்தை பராந்தகருக்கு உதவி செய்தவர். அவர் பெயர் பழுவேட்டரையர் கண்டன் அமுதனார். ஈழத்தில் உயிர் துறந்த கொடும்பாளூர்ச் சிறிய வேளாளரின் தந்தைதான் (அதாவது வானதியின் பாட்டனார்) பராந்தக தேவருக்குத் துணை புரிந்த கொடும்பாளூர் சிற்றரசர்.
/
\சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் திரும்பி வந்தாள். தன்னுடன் ஒரு வயோதிகனான மனிதனையும் அழைத்து வந்தாள். வந்தவன் இலங்கைத் தீவில் கடற்கரையோரத்தில் வாழ்ந்து மீன் பிடித்துப் பிழைக்கும் ‘கரையர்’ என்னும் வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. அவன் மூலமாக அவ்வாலிபன் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொண்டான். அதாவது அந்தப் பெண் தக்க சமயத்தில் அவனுடைய உயிரைக் காப்பாற்றினாள் என்று அறிந்தான். அவன் மரக்கிளையின் மேல் உட்கார்ந்து கடலையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது கரடி ஒன்று அவன் பின் பக்கமாக வந்து அவனை உற்றுப் பார்த்தது. பிறகு மரத்தின் மேல் ஏற���் தொடங்கியது. இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். கரடியை வேறு திசையில் இழுப்பதற்கும் அந்த வாலிபனை எச்சரிக்கை செய்வதற்கும் அவள் அவ்விதம் கூச்சலிட்டாள். கரடி மரத்தின் மேலே ஏறுவதை விட்டு அவளைத் தொடர்ந்து ஓடத் தொடங்கியது.
இதைக் கேட்டதும் அந்த வாலிபனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்
....
அவனுடைய நாட்டில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்து விட்டன. அவனுடைய தந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவர் இறந்து போய்விட்டார்கள். இன்னொருவருக்குப் புத்திர சந்தானம் இல்லை. ஆகையால் ஒரு பெரிய சாம்ராஜ்யம் அவனுக்காகக் காத்திருக்கிறது என்று தெரிந்து கொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பூசல் ஏற்பட்டது. அந்த அழகிய தீவையும் அதைச் சொர்க்க பூமியாக்கிய ஊமைப் பெண்ணையும் விட்டுப்போக அவனுக்கு மனமில்லை.
/
\
" நீங்கள் எல்லாரும் காவேரியம்மன்தான் குழந்தையைக் காப்பாற்றியதாக முடிவு கட்டினீர்கள். ஆனால் என் கண்ணுக்கு என்ன தோன்றியது தெரியுமா? அந்த வலைஞர் குலமகள் – ஊமைச்சி தான் – குழந்தையை எடுத்துக் கொடுத்ததாகத் தோன்றியது."
/
\
“என்ன மாதிரி அதிசயமான செய்திகள்?”
“குந்தவைப் பிராட்டி கந்தன் மாறனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவோ, ஆதிக்க கரிகாலன் கந்தன் மாறனுடைய தங்கையை மணக்கப் போவதாகவோ கேள்விப்படலாம்…”
/
\
“தாயே! அவன் ஒற்றன் இல்லாவிட்டால் கூத்தாடிகளுடன் சேர்ந்து முகமூடி போட்டுக் கொண்டு ஏன் பழையாறையில் நுழைகிறான்? மாறுவேடம் போட்டுக்கொண்டு ஏன் கோடிக்கரை துறைமுகத்துக்குப் பிரயாணமாகிறான்? அவன் ஒற்றன் இல்லாவிட்டால் என் ஆட்களைக் கண்டதும் ஒருநாள் முழுதும் கோடிக்கரையில் ஒளிந்து திரிவானேன்? இரவானதும் படகில் ஏறி இலங்கைத் தீவுக்குப் போவானேன்?”
“ஓகோ! அவன் படகில் ஏறித் தப்பித்தும் போய் விட்டானா? உங்கள் ஆட்களால் அவனைப் பிடிக்க முடியவில்லையா?”
/
\
“இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதாவது பெருந்தீங்கு நேர்ந்தால், அது இரண்டு பெண்களினால்தான் வந்ததாகும்” என்றார் தஞ்சைக் கோட்டைத் தலைவர்.
“நான் ஒருத்தி; அந்த இன்னொரு பெண்யாரோ?”
“பழுவூர் இளைய ராணி நந்தினி தேவிதான்!”
குந்தவை புன்னகை புரிந்து “சோழ சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியுடன் என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறீர்களே? இது காதில் விழுந்தால் பெரிய பழுவேட்டரையர் தங்களைத் தேசப் பிரஷ்டம் செய்துவிடுவார்!” என்று சொன்னாள்.
“ரொம்ப நல்லதாய்ப் போய்விடும்! அதற்கு நான் காத்திருக்கிறேன்” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.
/
\
“தாயே! அப்படிச் செய்ய வேண்டாம்! அடுத்த அறையில் ஒரு மனிதன் இருக்கிறான். அவன் என்னிடம் தினம் நூறு தடவை ‘நீ எனக்கு ஒரு பாட்டுச் சொல்லிக் கொடு! சொல்லிக் கொடுத்தால் பாண்டிய குலத்து மணிமகுடத்தையும், மாலையையும் இலங்கையில் எங்கே ஒளித்து வைத்திருக்கிறேன், என்று தெரிவிக்கிறேன்’ என்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்த இரகசியத்தை நான் தெரிந்து கொள்ளும் வரையில் இங்கேயே விட்டு வைக்கச் சொல்லுங்கள்!” என்றான் சேந்தன் அமுத
/
\
“பழுவூர் ராணி கொடுத்த முத்திரை மோதிரத்தை என்னுடன் கொண்டுவந்தேன். இங்கேயும் அதற்குச் செல்வாக்கு இருக்கும் என்று எண்ணினேன். அதுதான் தவறாய்ப் போயிற்று?”
“அது தவறுதான், தம்பி, பெரிய தவறு! இங்கே சேநாதிபதி கொடும்பாளூர்ப் பெரிய வேளார் அல்லவா? பழுவூர் வம்சத்துக்கும் கொடும்பாளூர் வம்சத்துக்கும் பெரும்பகை என்பது உனக்குத் தெரியாதா?”
“தெரியாமல் வந்துதான் அகப்பட்டுக் கொண்டேன். என்ன செய்கிறதென்று தெரியவில்லை…”
/
\
“ஓஹாஹோ! வைஷ்ணவரே! கஜேந்திரனுக்கு மட்டும் மோட்சத்தை அளித்துவிட்டு நீர் திரிசங்கு சொர்க்கத்தில் தங்கிவிட்டீரே?” என்று சொல்லிக் கொண்டே, வீரர்களைக் கைதட்டி அழைத்தான்.
/
\
“இந்த இராஜபாட்டை எங்கிருந்து எங்கே போகிறது? நாம் எங்கே வந்திருக்கிறோம்? எங்கே போகிறோம்?” என்று கேட்டான்.
“அனுராதபுரத்திலிருந்து சிம்மகிரிக்குப் போகும் இராஜபாட்டையில் வந்து சேர்ந்திருக்கிறோம். தம்பள்ளை இன்னும் அரைக்காத தூரம் இருக்கிறது. இராத்திரி அங்கே போய்ச் சேர்ந்து விடலாம்” என்றான் ஆழ்வார்க்கடியான்.
/
\
“இந்தப் பகுதியெல்லாம் இப்போது யாருடைய வசத்தில் இருக்கிறது?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“சோழ சைன்யம் தம்பள்ளை வரையில் கைப்பற்றியிருக்கிறது. அப்பால் சிம்மகிரிக் குன்றும், கோட்டையும் மகிந்தன் வசம் இருக்கின்றன.”
/
\
“நந்தினியும் அபூர்வ சக்தி உடையவள்தான். ஆனால் அவளுடைய சக்தி வேறு விதமானது.”
“எப்படி? என்ன வித்தியாசம்?”
“ஒருவன் நரகத்தில் விழப் போகிறவனாயிருந்தால், அவனைத் தடுத்து நிறுத்திக் குந்தவை தேவி சொர்க்கத்துக்கு அவனைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்; அது ஒருவித சக்தி. நந்தினி என்ன செய்வாள் தெரியுமா? அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து, அதை நம்பும் படியும் செய்து, நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படி செய்துவிடுவாள்!”
/
\
இவையெல்லாம் வந்தியத்தேவனுக்கு மிக்க வியப்பை அளித்தன. ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “நாம் யுத்த கேந்திரத்துக்கு வருவதாக எண்ணினோம். இது புத்த க்ஷேத்திரமாக அல்லவா இருக்கிறது?” என்றான்.
/
\
“எனக்கு ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது! திருமலை! என் முன்னோர்களில் பெருங்கிள்ளி வளவன் என்று ஒரு மன்னர் இருந்தார். அவரிடம் ஓர் அதிசயமான யானை இருந்தது. அதன் ஒரு கால் காஞ்சியில் இருக்கும்; இன்னொரு காலினால் தஞ்சையை மிதிக்கும்; மற்றொரு கால் இந்த ஈழ நாட்டை மிதிக்கும் நாலாவது கால் உறையூரில் ஊன்றி நிலைத்திருக்கும்.
“கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்துநீர்த் தண்தஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம்
கோழியர் கோக் கிள்ளி களிறு!”
என்று அற்புதமான கற்பனையுடன் ஒரு புலவர் பாடியிருக்கிறார். இந்த இலங்கையில் மந்தை மந்தையாக ஆயிரம் ஆயிரம் யானைகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? புலவருடைய கற்பனை யானையைப்போல் ஒரு யானை இருந்தால் நானும் ஒரே சமயத்தில் காஞ்சியிலும், பழையாறையிலும், மதுரையிலும், இலங்கையிலும் இருக்கலாம் அல்லவா?
/