பொன்னியின் செல்வன் - கொலைவாள் - பாகம் 3 (குமரன் பதிப்பகம் )
பொன்னியின் செல்வன் ஆழிக்கடலின் சுழற்காற்றில் சிக்கி மாயமானார் என்ற செய்தியறிந்து, பழுவேட்டரையர், நந்தினி மற்றும் பரிவாரங்கள் கோடியக்கரைக்கு விரைந்து வந்ததில் தொடங்கி, பார்த்திபேந்திரன் நந்தினியின் மாயவலையில் மயங்கியது, சுரம் கண்ட அருள்மொழிவர்மரை பூங்குழலி, சேந்தன் அமுதன், வந்தியத்தேவன் என மூவரும் நாகைப்பட்டின சூடாமணி விகாரத்தில் ஒப்படைத்தது, பின் வந்தியத்தேவன் பழையாறை சென்றது, வந்தியத்தேவன்-நந்தினி-பாண்டிய இளவரசர்-ஆபத்துதவிகலுக்குள்ளான சந்திப்பும், அதன்பின் வந்தியத்தேவன் காஞ்சி நோக்கி பயணமானது, மதுராந்தகருக்கும் செம்பியன் மாதேவிக்கும் சோழ மணிமுடிக்கான உரையாடல், மதுராந்தகர் அநிருத்தர் மற்றும் வானதி அநிருத்தருக்கு இடையேயான சொற்போர்கள், புத்த விகாரத்தில் அருள்மொழிவர்மர் குணமடைந்தது, பூங்குழலி-வானதி இடையே அருள்மொழி வர்மர் பொருட்டு ஏற்படும் பொறாமை, அது தொடர்பாக சேந்தன் அமுதனிடம் பூங்குழலி வருந்தியது, கடைசியில் குந்தவை-அருள்மொழிவர்மன்-வானதி இம்மூவரும் நாகைப்பட்டினம் நந்தி மண்டபத்தில் சந்தித்து உரையாடியதுடன், இந்த மூன்றாம் பாகம் முற்று பெறுகிறது.
புத்தகத்திலிருந்து ...
\
எத்தனையோ மேதாவிகள் காலமெல்லாம் ஆராய்ச்சி செய்த பின்னரும், மனித உடம்பின் அமைப்பு இரகசியத்தை நம்மால் முழுதும் அறிந்துகொள்ள முடியவில்லை. மனித இதயத்தின் அமைப்பு இரகசியத்தை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? வாழ்நாளெல்லாம் பழி பாவங்களில் முழுகிக் கிடந்தவர்கள் திடீரென்று ஒருநாள் வைராக்கிய சீலர்களாகிறார்கள்; பக்தி பரவசமடைந்து ஆடிப்பாடுகிறார்கள்; இறைவன் கருணைக்குப் பாத்திரமாகிறார்கள்; மனித சமூகத்துக்கு ஒப்பற்ற தொண்டுகளும் புரிகிறார்கள்.
இதற்கு மாறாக, நெடுங்காலமாய்த் தூய்மையான களங்கமற்ற வாழ்க்கை நடத்தியவர்கள் திடீரென்று ஒருநாள் வழுக்கி விழுகிறார்கள்! அப்படி விழும்போது அதல பாதாளத்திலேயே விழுந்துவிடுகிறார்கள்.
பார்த்திபேந்திரனுடைய ஆவேச மொழிகளைக் கேட்டுவந்த நந்தினி, “போதும் ஐயா! போதும்! நிறுத்துங்கள்! அவ்வளவு பயங்கரமான காரியம் எதையும் செய்யும்படி தங்களை ஒருநாளும் நான் வற்புறுத்தப் போவதில்லை. தங்களுக்கும் எனக்கும் உகந்த சந்தோஷமான ஒரு காரியத்தைத் தான் சொல்லப் போகிறேன்” என்றாள்.
/
\
பொழுது புலர்ந்தது, கருநிற அழகியான இரவெனும் தேவி உலக நாயகனை விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்ல நேர்ந்தது. நாயகனைத் தழுவியிருந்த அவளுடைய கரங்கள் இலேசாகக் கழன்று விழுந்தன. வாழ்க்கையிலே கடைசி முத்தம் கொடுப்பவளைப் போல் கொடுத்து விட்டு இரவெனும் தேவி இன்னும் தயங்கி நின்றாள். “மாலையில் மறுபடியும் சந்திப்போம். நாலு ஜாம நேரந்தானே இந்தப் பிரிவு? சந்தோஷமாகப் போய்வா!” என்றது உலகம். இரவு தயங்கித் தயங்கி உலகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்றது.
உள்ளத்திலே அன்பில்லாத கள்ளக் காதலனைப் போல் இரவு பிரிந்து சென்றதும் உலகம் மகிழ்ச்சியினால் சிலிர்த்தது. “ஆகா; விடுதலை!” என்று ஆயிரமாயிரம் பறவை இனங்கள் பாடிக் களித்தன. மரங்களிலும், செடிகளிலும் மொட்டுக்கள் வெடித்து மலர்ந்தன. எங்கிருந்தோ வண்டுகள் மந்தை மந்தையாக வந்து இதழ் விரிந்த மலர்களைச் சூழ்ந்து கொண்டு இன்னிசை பாடிக் களித்தன. விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள தட்டாரப் பூச்சிகள் நாலா பக்கங்களிலும் ஆனந்தக் கூத்தாடின.
கீழ்வானத்தில் பொன்னிறம் கண்டது. வானச் சுடர்கள் ஒவ்வொன்றாக ஒளி மங்கி மறைந்தன. இதுவரையில் வானவீதியில் பவனி வந்து கொண்டிருந்த பிறைச் சந்திரன் “நிற்கட்டுமா? போகட்டுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
ஓடையில் படகு மெள்ள மெள்ளச் சென்று கொண்டிருந்தது. பட்சிகளின் கோஷ்டி கானத்தோடு துடுப்பு தண்ணீரைத் தள்ளும் சலசல சப்தமும் பூங்குழலியின் செவிகளில் விழுந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். ஒரு கிளையில் வெடித்த இரண்டு அழகிய நீலநிற மொட்டுக்கள் ஒருங்கே மலர்ந்தது போல் அவளுடைய கண்ணிமைகள் திறந்தன. எதிரே இளவரசரின் பொன்முகம் தோன்றியது. இன்னும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
/
\
பூம்புகார் என்னும் காவிரிப் பட்டினத்தைக் கடல் கொள்ளை கொண்டு போய்விட்டது அல்லவா? அதற்குப் பிறகு சோழ வளநாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினம் என்ற அந்தஸ்தை நாகைப்பட்டினம் நாளடைவில் அடைந்தது. பொன்னி நதி பாய்ந்த இயற்கை வளம் செறிந்திருந்த சோழ நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொள்ள எத்தனையோ அயல்நாட்டார் ஆவல் கொண்டிருந்தனர். பெரிய பெரிய மரக்கலங்களிலே வர்த்தகப் பண்டங்கள் வந்து இறங்கியபடி இருந்தன. முத்தும், மணியும், வைரமும், வாசனைத் திரவியங்களும் கப்பல்களில் வந்து இறங்கியதோடு அரபு நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்காக வந்து இறங்கின.
ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் காலத்தில் நாகைப்பட்டினம் சிறந்த மணிமாட நகரமாயிருந்தது. அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூரர்,
“காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே!”
என்று வர்ணித்தார். கடல் நாகைக் காரோணத்தில் மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம் ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா? மற்ற ஊர்களிலே போலப் பொன்னும், மணியும், ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு, நாகைப்பட்டினத்திலே ஓர் உயர்ந்த சாதிக் குதிரையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
“நம்பிதாமும் அந்நாட் போய்நாகைக் காரோணம்பாடி
அம்பொன்மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா”
ஆகியவை பெற்றுக்கொண்டு திருவாரூர் திரும்பிச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது.
நாகைப்பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய அரபு நாட்டுக் குதிரைகளைப் பார்த்ததும் நாயனாருக்கும் குதிரை ஏறிச் சவாரி செய்யவேண்டும் என்று தோன்றி விட்டது போலும்!
/
\
ஆனைமங்கலச் செப்பேடுகள், அந்நாளில் நாகைப்பட்டினத்தில் புகழ்பெற்று விளங்கிய சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் பற்றியும், அதன் வரலாற்றையும் கூறுகின்றன.
மலாய் நாடு என்று இந்நாளில் நாம் குறிப்பிடும் தீபகற்பம் அக்காலத்தில் ஸ்ரீ விஜய நாடு என்னும் பெயரால் பிரசித்தி பெற்றிருந்தது. அந்த நாட்டில் ஒரு முக்கிய நகரம் கடாரம். அந்த மாநகரைத் தலைநகராக வைத்துக்கொண்டு நாலா திசையிலும் பரவியிருந்த மாபெரும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை நெடுங்காலம் ஆண்டு வந்தவர்கள் சைலேந்திர வம்சத்தார். அந்த வம்சத்தில் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் என்னும் மன்னன் மிகவும் கீர்த்தி பெற்று விளங்கினான். அவ்வரசன் “இராஜ தந்திரங்களில் நிபுணன்; ஞானத்தில் ஸுரகுருவான பிரகஸ்பதியை ஒத்தவன்; அறிவாளிகளான தாமரை மலர்களுக்குச் சூரியன் போன்றவன்; இரவலருக்குக் கற்பகத் தருவாய் விளங்கினான்” என்று ஆணை மங்கலச் செப்பேடுகள் வியந்து புகழ்ந்து கூறுகின்றன.
அத்தகைய பேரரசனின் மகன் மாறவிஜயோத்துங்க வர்மன் என்பவன் தன் தந்தையின் திருநாமம் நின்று நிலவும் படியாக “மேரு மலையை யொத்த சூடாமணி விஹாரத்தை நாகைப்பட்டினத்தில் கட்டினான்” என்று அச்செப்பேடுகள் கூறுகின்றன.
கடாரத்து அரசனாகிய மற விஜயோத்துங்கன் நாகைப்பட்டினத்துக்கு வந்து புத்த விஹாரத்தைக் கட்டுவானேன் என்று வாசகர்கள் கேட்கலாம். சோழ வளநாட்டுடன் நீடித்த வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த அயல் நாடுகளில் ஒன்று ஸ்ரீ விஜய நாடு. அந்நாட்டுப் பிரஜைகள் பலர் நாகைப்பட்டினத்துக்கு வந்து நிரந்தரமாகவே குடியேறி இருந்தனர். வேறு பலர் அடிக்கடி வந்து திரும்பினர். கடாரத்து அரசனும், அவனுடைய குடிகளும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் புத்தரை வழிபடுவதற்கு வசதியாயிருக்கட்டும் என்று தான் அம்மன்னன் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தைக் கட்டினான். புத்த மதத்தின் தாயகம் பாரத தேசமாயிற்றே என்ற காரணமும் அவன் மனத்தில் இருந்திருக்கலாம். தமிழகத்து மன்னர்கள் எக்காலத்திலும் சமய சமரசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், ஆகையால் அவர்கள் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் கட்டுவதற்கு அநுமதி கொடுத்தார்கள். அநுமதி கொடுத்தது மட்டுமா? அவ்வப்போது அந்தப் புத்தர் கோயிலுக்கு நிவந்தங்களும், இறையிலி நிலங்களும் அளித்து உதவினார்கள். (இந்தக் கதை நடந்த காலத்திற்குப் பிற்காலத்தில் இராஜ ராஜ சோழன் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்கு ஆனைமங்கலம் கிராமத்தையும் அதைச் சார்ந்த பல ஊர்களையும் முற்றூட்டாக அதாவது எந்தவிதமான வரியும் விதிக்கப்படாத இறையிலி நிலமாகத் தானம் அளித்தான்; இந்த நில தானத்தை இராஜராஜனுடைய குமாரன், சரித்திரப் புகழ் பெற்ற இராஜேந்திர சோழன் – செப்பேடுகளில் எழுதுவித்து உறுதிப்படுத்தினான். இவை தாம் ஆனைமங்கலச் செப்பேடுகள் என்று கூறப்படுகின்றன. மொத்தம் இருபத்தொரு செப்பேட்டு இதழ்கள். ஒவ்வொன்றும் 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் உள்ளனவாய் ஒரு பெரிய செப்பு வளையத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இச்செப்பேடுகள் சமீப காலத்தில் கப்பல் ஏறிக் கடல் கடந்து ஐரோப்பாவில் ஹாலந்து தேசத்தில் உள்ள லெயிடன் என்னும் நகரத்தின் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையினால் இச்செப்பேடுகளை ‘லெயிடன் சாஸனம்’ என்றும் சில சரித்திர ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவதுண்டு.)
/
\
கிராமத்தைத் தாண்டியதும் சாலை ஓரத்தில் கொல்லுப் பட்டறை ஒன்று இருக்கக் கண்டான். அதைக் கடந்து மேலே செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. குதிரையை நிறுத்திவிட்டுப் பட்டறைக்குள் சென்றான்.
பட்டறைக்குள் கொல்லன் ஒருவன் வேலை செய்து கொண்டிருக்கக் கண்டான். ஒரு சிறுவன் துருத்து ஊதிக் கொண்டிருந்தான். வந்தியத்தேவன் உள்ளே பிரவேசித்த அதே சமயத்தில் இன்னொரு மனிதன் பின்பக்கமாக மறைந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இதிலெல்லாம் அவன் கவனம் சொல்லவில்லை. கொல்லன் கையில் வைத்துக் கொண்டிருந்த வாள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. அது ஓர் அபூர்வமான வாள். பட்டறையில் வைத்துக் கொல்லன் அதைச் செப்பனிட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அதன் ஒரு பகுதி பளபளவென்று வெள்ளியைப் போலப் பிரகாசித்தது. இன்னொரு பகுதி நெருப்பிலிருந்து அப்போது தான் எடுக்கப்பட்டிருந்த படியால் தங்க நிறச் செந்தழல் பிழம்பைப்போல் ஜொலித்தது.
“வாள் என்றால் இதுவல்லவா வாள்!” என்று வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் எண்ணி வியந்தான்.
/
\
வந்தியத்தேவன் சற்றுநேரம் கொல்லன் காய்ச்சிச் செப்பனிட்ட வாளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்த வாள் அபூர்வமான வேலைப்பாடு அமைந்ததாயிருக்கிறதே? இராஜகுலத்து வாள் மாதிரி அல்லவா இருக்கிறது? இது யாருடைய வாள்?” என்றான்.
“அப்பனே! இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் அரிச்சந்திர நதி என்று ஓர் ஆறு ஓடுகிறது.”
“நானும் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் என்ன?”
“நான் அரிச்சந்திர நதிக்குச் சென்று அடிக்கடி தலை முழுகி வருவது வழக்கம்.”
“மிக்க நல்ல காரியம். போகும் இடத்துக்குப் புண்ணியம்.”
“ஆகையால் கூடிய வரையில் மெய்யே சொல்லுவதென்றும், பொய் சொல்லுவதில்லையென்றும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.”
“அதற்கு என்ன ஆட்சேபம்? உம்மை யார் பொய் சொல்லச் சொன்னது? நான் சொல்லவில்லையே?”
“நீ என்னை இந்த வாளைப் பற்றி ஒன்றும் கேள்வி கேட்காமலிருந்தால், நானும் பொய் சொல்லாமலிருக்கலாம்!”
“ஓஹோ! அப்படியா சமாசாரம்?” என்று வந்தியத்தேவன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான்.
“நான் கேள்வியும் கேட்கவில்லை. நீர் விரத பங்கமும் செய்ய வேண்டாம். கைவேலையைச் சீக்கிரம் முடித்துவிட்டு, என் வேலையை எடுத்துக்கொண்டு செய்து கொடுத்தால் போதும்!”
/
\
வந்தியத்தேவன் வாளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் அடிப்பகுதியில், பிடியின் பக்கத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தான். மீன் உருவம் எதற்காக? அதற்கு ஏதேனும் பொருள் உண்டா? வெறும் அலங்காரத்துக்குத்தானா?
கொல்லன் அந்த மீன் உருவம் உள்ள இடத்தை மறுபடியும் தீயில் காட்டிக் காய்ச்சி அதன் பேரில் சுத்தியால் அடித்தான் மீன் உருவம் தெரியாமல் மறைப்பதுதான் அவனுடைய நோக்கம் என்று தோன்றியது.
/
\
“எப்படி ஆரம்பிப்பது? அவர்கள் கொண்டு வந்த செய்தியைக் கேட்ட பிறகு, யாருக்கு வேலை செய்ய மனம் வரும்? உனக்காக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு இதை நான் செய்கிறேன். எங்கிருந்து அப்பனே நீ வருகிறாய்?”
அவர்கள் கொண்டு வந்த செய்தி என்னவாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தியத்தேவன், “இலங்கையிலிருந்து வருகிறேன்” என்றான்.
கொல்லன் அவனுடைய முகத்தை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு குரலைத் தாழ்த்திக்கொண்டு, “இலங்கையில் இருந்தபோது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்த்தாயா?” என்றான்.
உண்மையே சொல்லுவதென்று சற்றுமுன் சங்கல்பம் செய்து ���ொண்டிருந்த வந்தியத்தேவன், “பார்த்தேன்” என்றான்.
“கடைசியாக அவரை நீ எப்போது பார்த்தாய்?”
“இன்று காலையில் பார்த்தேன்.”
கொல்லன் வந்தியத்தேவனைக் கோபமாய் நோக்கினான்.
“விளையாடுகிறாயா தம்பி?”
“இல்லை ஐயா! உண்மையைத்தான் சொன்னேன்.”
“இளவரசர் இப்போது எங்கேயிருக்கிறார் என்று கூடச் சொல்வாய் போலிருக்கிறதே?”
“ஓ! கேட்டால் சொல்லுவேன்!”
“இளவரசர் எங்கே இருக்கிறார், சொல் பார்க்கலாம்.”
“நாகைப்பட்டினம், சூடாமணி விஹாரத்தில் இருக்கிறார்!”
“அப்பனே நானும் எத்தனையோ பொய்யர்களைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் போல் கட்டுக்கதை புனைந்துரைக்கக் கூடியவர்களைப் பார்த்ததேயில்லை.”
வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். புனைந்து கூறும் பொய்யை நம்புவதற்கு எல்லாரும் ஆயத்தமாயிருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். இது நமது ஜாதக விசேஷம் போலும்!
“தம்பி! நீ இலங்கையிலிருந்து எப்போது புறப்பட்டாய்?”
“நாலு நாளைக்கு முன்னால்!”
“அதனாலே தான் உனக்குச் செய்தி தெரியவில்லை.”
“என்ன செய்தி ஐயா?”
“பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டு விட்டது என்ற செய்திதான்!”
வந்தியத்தேவன் கஷ்டப்பட்டுத் திடுக்கிடுவது போல் பாசாங்கு செய்தான்.
/
\
“ஆம், தெய்வம் எனக்கு அளித்திருக்கும் சூசகம் இந்த வாள். ஆனால், அந்தச் சூசகத்தின் பொருள் இன்னதென்பதை நான் இன்னும் அறியவில்லை. இந்த வாளை நான் அடிக்கடி கொல்லன் உலைக்கு அனுப்பித் துருநீக்கிப் பதப்படுத்திக் கூராக்கி வைத்துக் கொண்டு வருகிறேன். தாய்ப்புலி தான் பெற்ற குட்டிப் புலியைப் பாதுகாப்பதுபோல் இதை நான் பாதுகாத்து வருகிறேன். உரிய பிராயம் வருவதற்குள் புலிக்குட்டி நீண்ட கொம்புகள் படைத்த காட்டு மாடுகளிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது அல்லவா? அராபிய நாட்டார் தங்கள் குதிரையை எவ்வளவு அன்புடன் பேணுகிறார்களோ அப்படி இதை நான் பாதுகாத்து வருகிறேன். நோய்ப்பட்ட சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு வானமாதேவி பணிவிடை செய்வதுபோல் நானும் இந்த வாளுக்குச் செய்து வருகிறேன். இதைக் கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெய்வம் இன்னும் எனக்கு அறிவிக்கவில்லை. மலர்மாலை தொடுத்துப் பழகிய இந்தக் கைகளினால் இந்த வாளை எந்தக் கொடியவனுடைய விஷ நெஞ்சத்திலாவது செலுத்த வேண்டுமென்பது தெய்வத்தின் ஆக்ஞையோ அல்லது என்னுடைய மார்பில் என்னுடைய கையினாலேயே இதைச் செலுத்திக் குபுகுபுவென்று பெருகும் இரத்தத்தை ஆடை ஆபரணங்களால் அலங்கரித்த இந்த உடம்பில் பூசிக் கொண்டு நான் சாகவேண்டும் என்பது தெய்வத்தின் சித்தமோ, இன்னும் அது எனக்குத் தெரியவில்லை. இந்த வாளை எனக்கு அளித்திருக்கும் தெய்வம், சமயம் வரும்போது அதையும் எனக்குத் தெரியப்படுத்தும். அந்தச் சமயம் எப்போது வரும் என்று தெரியாத படியால் இரவும், பகலும் எந்த நேரத்திலும் ஆயத்தமாயிருக்கிறேன்.
/
\
“ஏன்? அந்தக் கிழவரைப் பார்ப்பதற்கு உமக்குப் பயமாயிருக்கிறதா?” என்றாள் நந்தினி.
“இல்லை, அம்மணி! தங்களைப் பார்க்கவே நான் பயப்படவில்லையே, பழுவேட்டரையரிடம் எனக்கு என்ன பயம்?” என்றான் வந்தியத்தேவன்.
“ஆகா! உம்மை எனக்குப் பிடித்திருப்பதின் காரணம் அதுதான். எதனாலோ, என்னைக் கண்டு எல்லோரும் பயப்படுகிறார்கள். வீராதி வீரரும் எத்தனையோ போர்க்களங்களில் போரிட்டு உடம்பில் அறுபத்துநாலு புண் சுமந்தவருமான பெரிய பழுவேட்டரையர் என்னைக் கண்டு பயப்படுகிறார். சின்னப் பழுவேட்டரையர் – காலனையும் கதிகலங்க அடிக்கக்கூடிய காலாந்தக கண்டர், – என்னிடம் வரும்போது பயந்து நடுங்குகிறார். இந்தச் சோழ ராஜ்யத்தை ஏகசக்கராதிபதியாக ஆளவிரும்பும் மதுராந்தகத் தேவர் என்னிடம் வரும்போதும் பயபக்தியுடன் வருகிறார். யம லோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தர சோழச் சக்கரவர்த்திகூட நான் அருகில் சென்றால் நடுங்குகிறார். ஒவ்வொரு தடவை அவர் என்னைக் கண்டு மூர்ச்சையே அடைந்து விடுகிறார். இன்றைக்கு வந்தானே பார்த்திபேந்திர பல்லவன்! அவனுடைய அஞ்சா நெஞ்சத்தையும், வீரத்தைப் பற்றியும் வெகுவாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆதித்தகரிகாலரின் உயிர்த்தோழன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் என் அருகில் வந்த அரை நாழிகைக்கெல்லாம் அவன் எப்படி அடங்கி ஒடுங்கிப் போய்விட்டான்! ஆதித்தகரிகாலரிடம் உடனே போக வேண்டிய கடமையையும் மறந்து, என்னைத் தொடர்ந்து வருகிறான். நான் காலால் இட்ட பணியைத் தலையால் நிறைவேற்றி வைக்க ஆயத்தமாயிருக்கிறான். அதே சமயத்தில் என்னருகில் நெருங்கும்போது அவன் நடுங்குகிறான். அதைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. சிறு குழந்தையாயிருந்த போது எரியும் நெருப்பைக் காண எனக்கு ஆசையாயிருக்கும். நெருப்பின் அருகில் செல்வேன். தீயின் கொழுந்தைத் தொடுவதற்கு ஆசையுடன் கை விரலை நீட்டுவேன். ஆனால் அதற்குத் தைரியம் வராது. சட்டென்று விரலை எடுத்துக்கொண்டு விடுவேன். இம்மாதிரி எத்தனையோ தடவை செய்திருக்கிறேன். பார்த்திபேந்திரன் என் பக்கத்தில் நெருங்கி வருவதையும், பயந்து விலகுவதையும் பார்க்கும்போது அந்தப் பழைய ஞாபகம் எனக்கு வந்தது. பல்லவன் மட்டும் என்ன? நீர் யாருடைய தூதராக ஓலை எடுத்துக்கொண்டு காஞ்சியை விட்டுக் கிளம்பினீரோ, அந்த ஆதித்தகரிகாலரும் அப்படித்தான். நாங்கள் குழந்தைகளாயிருந்த நாளிலிருந்து அவருக்கு என்பேரில் அளவில்லாத வாஞ்சை; கூடவே ஒரு பயம். அதனால் என் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறி விட்டது! ஐயா! உமது எஜமானரை நீர் மறுபடியும் சந்திக்கும் போது எனக்காக ஒரு செய்தி சொல்வீரா? ‘சென்றதையெல்லாம் நான் மறந்து விட்டேன். நான் இப்போது அவருக்குப் பாட்டி உறவு பூண்ட பழுவூர் ராணி. என்னைப் பார்ப்பதற்குச் சிறிதும் பயப்பட வேண்டாம். அவரை நான் கடித்துத்தின்று விழுங்கி விட மாட்டேன்!’ என்று சொல்லுவீரா?”
“தேவி! நான் உயிரோடு திரும்பிபோய் ஆதித்த கரிகாலரைப் பார்ப்பேன் என்பது நிச்சயமில்லை, அப்படிப் பார்த்தால் அவரிடம் நான் சொல்லுவதற்கு எத்தனையோ செய்திகள் இருக்கின்றன. தங்களுடைய செய்தியைச் சொல்லுவதாக என்னால் உறுதி கூற முடியாது. தயவு செய்து மன்னிக்க வேணும்!”
/
\
“அம்மணி! இதோ தாங்கள் அளித்த பனை முத்திரை மோதிரம். இலங்கையில் பூதிவிக்கிரம கேசரியின் ஆட்கள் இதை என்னிடமிருந்து பலவந்தமாகக் கவர்ந்து கொண்டது உண்மைதான். ஆனால் சேனாதிபதி திருப்பிக் கொடுத்து விட்டார். இதோ தங்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்; பெற்றுக் கொண்டு அருள் புரியவேணும்!” என்று கூறி முத்திரை மோதிரத்தை நீட்டினான்.
நந்தினி அதை உற்றுப்பார்த்துத் தான் கொடுத்த முத்திரை மோதிரம் அதுதான் என்று தெரிந்து கொண்டாள். “ஐயா! நான் கொடுத்ததை திரும்பி வாங்கிக்கொள்ளும் வழக்கமில்லை. உம்முடைய நேர்மையைச் சோதித்து அறிவதற்காகவே கேட்டேன். சோதனையில் நீர் தேறி விட்டீர். என்னுடைய ஆட்களைக் கொண்டு உம்மைச் சோதனை போடும் படியான அவசியத்தை எனக்கு ஏற்படுத்தவில்லை. மோதிரத்தை என்னுடைய ஞாபகத்துக்காக நீரே வைத்துக் கொள்ளலாம்!” என்றாள்.
“அம்மணி! யோசித்துச் சொல்லுங்கள். இது என்னிடமிருந்தால் மீண்டும் அவசியம் நேரும்போது உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்…”
/
\
“தேவி! இந்தக் கோட்டை? இந்தப் பாழடைந்த அரண்மனை?…”
“ஆம்; ஒரு காலத்தில் இந்தச் சோழநாடு பல்லவர் ஆட்சியில் வெகுகாலம் இருந்தது. அப்போத�� பல்லவ சக்கரவர்த்திகள் இங்கே கோட்டையும், அரண்மனையும் கட்டியிருந்தார்கள். பிறகு சோழநாடு பாண்டியர்கள் வசப்பட்டது. பாண்டிய மன்னர்கள் சில சமயம் இந்த அரண்மனையில் வசித்தார்கள். விஜயாலய சோழர் காலத்தில் இங்கே ஒரு பெரிய யுத்தம் நடந்தது. கோட்டை இடிந்து தகர்ந்தது. அரண்மனையிலும் பாதி அழிந்தது. மிச்சம் அழியாமலிருந்த பகுதியில் இப்போது நாம் இருக்கிறோம். இந்தக் கோட்டையைச் சிலர் பல்லவராயன் கோட்டை என்றும், இன்னும் சிலர் பாண்டியராயன் கோட்டை என்றும் சொல்வார்கள். இரண்டிலும் உண்மை உண்டு. ஆனால் நன்றாக வழி தெரிந்தவர்களாலேதான் இதற்குள்ளே வந்துவிட்டு வெளியேற முடியும்! என்ன சொல்கிறீர்? என் ஆட்களை அழைத்துக்கொண்டு போய்விடச் சொல்லட்டுமா? அல்லது நீரே வழி கண்டுபிடித்து…
/
\
முல்லையாற்றங்கரையோரமாகக் குதிரையை மெதுவாகவே செலுத்திக்கொண்டு வந்தியத்தேவன் இரவெல்லாம் பிரயாணம் செய்தான். மூன்றாம் ஜாமத்தில் வால் நட்சத்திரம் அதன் பூரண வளர்ச்சியை அடைந்து வானத்தில் ஒரு நெடிய பகுதியை அடைத்துக்கொண்டு காணப்பட்டது.
/
\
இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்குத் திசையில் வெள்ளி முளைத்தது. சுக்கிரனை எதிரிட்டுக் கொண்டு போகக்கூடாது என்று வந்தியத்தேவன் கேள்விப்பட்டிருந்தான். குதிரையை நிறுத்தி ஒரு மரத்தில் கட்டிவிட்டுத்தானும் தரையில் படுத்துச் சிறிது உறங்கினான்.
/
\
“சிவோஹம்! அவனவனுடைய தலையெழுத்து! நீ வா போகலாம்!” என்று ஒரு வீரசைவர் கூற, இருவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள்.
அவ��்கள் சற்றுத் தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்து விட்டு வந்தியத்தேவன் எழுந்தான். “சீக்கிரத்தில் இவனுக்கு பெரிய ஆபத்து வரப்போகிறது!” என்ற வார்த்தைகள் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.
பழைய காபாலிகர்களின் பரம்பரையில் வந்தவர்கள் காலாமுகர்கள். காபாலிகர்களைப் போல் அவர்கள் நரபலி கொடுப்பதில்லை. மற்றபடி காபாலிகர்களின் பழக்க வழக்கங்களை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் மயானத்தில் அமர்ந்து கோரமான தவங்களைச் செய்து வருங்கால நிகழ்ச்சிகளை அறியும் சக்தி பெற்றிருந்ததாகப் பலர் நம்பினார்கள். சாபங்கொடுக்கும் சக்தி அவர்களுக்கு உண்டு என்றும் பாமர ஜனங்கள் எண்ணினார்கள். ஆகையால் காலாமுக சைவர்களின் கோபத்துக்கு ஆளாகாத வண்ணம் அவர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய, பலர் ஆயத்தமாயிருந்தனர். சிற்றரசர்கள் பலர் ஆலயங்களில் காலாமுகர்களுக்கு வழக்கமாக அன்னமளிப்பதற்கு நிவந்தங்கள் விட்டிருந்தனர். இதுவரையில் சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் மட்டும் காலாமுகர்களுக்கு எவ்வித ஆதரவும் காட்டவில்லை.
இந்த விவரங்களையெல்லாம் அறிந்திருக்க வந்தியத்தேவன், “அவர்கள் ஏதாவது உளறிவிட்டுப் போகட்டும்; இதுவரையில் நேராத ஆபத்து நமக்குப் புதிதாக என்ன வந்துவிடப் போகிறது?” என்று எண்ணித் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். ஆயினும் வருங்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை அவன் மனத்தைவிட்டு அடியோடு அகன்று விடவில்லை.
/