கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு ஈசல் கொடுக்கும் இறகு போதும், பறந்து போய்விடும். அத்தகைய ஈசல்களைத் தன் பெர்முடாசின் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார் கவிஞர் இசை.
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.