"CIA - அடாவடிக் கோட்டை" - என். சொக்கன்
ஓவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பார்த்துவிட்டு பிறகு வாங்கி கொள்ளலாம் என கடந்த புத்தகம். ஆனால் தவறவிடக்கூடாத புத்தகம் என நினைத்துக் கொண்டிருந்த ஒன்று.
இரண்டாம் உலகப்போரில் Pearl Harbourல் வாங்கிய அடிக்கு பின்னர், அமெரிக்கா விழித்துகொண்டு, ஒரு உளவு அமைப்பை உருவாக்க முற்படுகிறது. Donovan என்பவரால் தொடங்கப்படுகிறது சிஐஏ எனும் Central Intelligence Agency. அது பிறந்த விதம் முதல் அதன் ஏற்ற இறக்கம், உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை, கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு விண்ணகம் பாதாளம் என அனைத்திலும் அவர்களின் உளவுகள், தகவல் சேகரிப்புகள், அரசியல் தந்திர காய்நகர்த்தல்களில் பங்கு என அவர்களின் அனைத்து அராத்து வேலைகளையும் பட்டவர்த்தனமான தகவல்களாக விறுவிறுப்பான தோரணையில் காட்சிப்படுத்துகிறது இப்புத்தகம்.
அமெரிக்கர்கள் எந்த விஷயத்தையும் சர்வ ஜாக்கிரதையுடனேயே அணுகுவார்கள் என்பதனை அவர்களின் உளவு அமைப்பின் செயல்பாடுகளை காண்கையில் ஊகிக்கலாம். உதாரணமாக, ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொள்வதில் எல்லா காலத்திலும், அவ்வளவு ஆர்வம் உள்ளவர்களாக சிஐஏ இருப்பதனை காணமுடிகின்றது.
தமது நட்டின் பாதுகாப்பு-பாதுகாப்பு-பாதுகாப்பு மட்டுமே பிரதானம் என்பதை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அமைப்பு, அடுத்த நாடுகளை உளவு பார்த்து, அங்கு குழப்பம் விளைவித்து, அமெரிக்காவிற்கு தோதான அரசை அமைக்கிறது., அதாவது பலநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு, அந்நாடுகளை, அமெரிக்கா, தனக்கு வால் பிடிக்கும் நாடுகளாக்கி, உலகப் பெரியண்ணனாக வலம்வர சிஐஏ'வின் கரங்களை கண்டங்கள் கடந்து நீளச்செய்திருக்கிறது.
"ஆயிரம் சூரியப் பேரொளி" எனும் ஆப்கனிஸ்தானின் 1970-90 காலகட்ட பின்னனியில் எழுதப்பட்ட பெருநாவல் வாசிப்பிற்கு நடுவில், சிஐஏ பற்றி படித்தது, பல புள்ளிக் காரணிகளை தொடர்பு படுத்தி கொள்ள உதவியாக இருந்தது. உதாரணமாக, ஆப்கனில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் முஜாஹுதின் மற்றும் இன்னபிற புரட்சிபடைகளுக்கு அமெரிக்கா உதவி புரிவதும், அதன்பின்பு அந்த புரட்சிபடையில் இருந்த ஒருவர் அமெரிக்காவையே பதம் பார்த்த கதையையும் தொடர்பு படுத்தி கொள்ள ஏதுவாக உள்ளது.
இவர்களது இந்த பெரும் அரசியல் ஆட்டத்தில், பெரும்பாலும் பாழும் மக்களே பலிவாங்கப்படுகின்றனர் என்பதுதான் சோகமே. ரஷ்ய KGB, இஸ்ரேலிய MOSSAD, இந்திய NIA போன்ற உளவு அமைப்புகள் தத்தம் தகவல்களை பிரிதொருவர் பாதுகாப்புக்கு பரிமாறி கொண்டாலும், உலகப் பெரியவன் என்பதை முன்னிறுத்த, அனைத்து நாடுகளின் மூலை-முடுக்குகள் வரை கண்காணிக்கும் CIA, அமெரிக்காவிற்கு இன்றிமையாததாகவே மாறிவிட்டது.
ஆங்காங்கே நையாண்டித்தனமான கேலிகளுடன் மிக சுவாரசியமான வகையில் எழுதப்பட்டருக்கிறது இப்புத்தகம். சிஐஏ பற்றி (தமிழில்) நன்கு அறிந்து கொள்ள ஏற்ற நூல்.