Self is always Transcendental
நான், தன், சுயம் எனும் மிகச் சிறிய வார்த்தைகள் மிக மிகப் புதிரானது, புரிதலுக்கு அப்பாற்பட்டது, அனைத்தையும் விஞ்சி நிற்பது.
தன்னிலிருந்து எழுதல் ஆன்மீகம், தன்னைக் கைவிடுதல் லௌகீகம். இரண்டுமே சமூகத்தில் மிகப் பெரிய அதிர்வுகளை உண்டாக்குகின்றன. முன்னது பிரமிப்பை, பரவசத்தை, நேர்மறையைத் தருகிறது என்றால் பின்னது பதட்டத்தை, ஒரு நிலையின்மையை ஏற்படுத்துகிறது.
அதனால் தான் தற்கொலை என்கிற செயல் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எனப் பாகுபாடின்றி அனைவரையும் புரட்டிப் போடுகிறது. ஏன், எதனால், எப்படி என ஆய்வு செய்யும் வேட்கையை அனைவரிடமும் உண்டாக்குகிறது. அது இறந்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அல்ல மாறாக இருப்பவர்களை, நமது இருப்பைப் பற்றிப் புரிந்துகொள்வதற்காக.
ஒரு செயல், ஒரு நகர்வு, ஒரு முடிவு எதுவும் சட்டென்று, உடனடியாக நடந்துவிடுவதில்லை. அப்படியான உடனடிகளுக்கு முன் பின், நம் அறிதலுக்கு வராத பல்லாயிர விசைகள் இருக்கும்.
உச்சி முனை வரை ஒருவனைக் கொண்டு சென்ற, அழுத்திச் சென்ற விசைகள், நகர்வுகள் என்னென்ன எனக் கூறு போடுகிறது “பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்”.
வாழ்க்கையில் ஒருவர் எடுக்கும் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் அதுவரையிலான அவர்களின் அறிதலும், புரிதலும், வாழ்க்கைச் சூழலும், வாழ்க்கை முறைகளும் காரணமாகிறது. தனிமனிதனாகப் பார்க்கும்போது அது அவரவர் வாழ்க்கை.
ஆனால், ஒரு சமூகமாக ஒரு கூட்டு வாழ்க்கை முறையில் நம் செயல்களோ, முடிவுகளோ அடுத்தவரைப் பாதிக்குமெனில் அங்குத் தான் சில சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.
நாவலில் வரும் மருத்துவர் மயில்சாமி போன்றவர்கள் பொதுவாக எல்லாத் துறைகளிலும் இருப்பவர்கள். அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு உழைத்து வந்திருந்தாலும் தாங்கள் அடைந்த அவமானங்களை, கஷ்டங்களை, வன்முறைகளை அடுத்தவர்கள் மீதும் பிரயோகிப்பார்கள். Skillful, ஆர்டிஸ்டிக் என்பது அவர்களின் திறமையேயன்றி குணத்தை வரையறுப்பதில்லை.
அவர்கள் எத்துறையினராய் இருந்தாலும், அடிப்படை பண்புகள் மாறுவதில்லை… பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கூட (Even though they are victim).
இந்தக் கதையில் வரும் சதாசிவம் தொடங்கி அன்வர் வரை அவர்களின் நடவடிக்கைகளுக்கும் செயல்களுக்கும் தனிமனிதர்கள் என்கிற சலுகையை அளித்து விட முடியாது. சட்டப்படியும் அவர்களுக்குத் தண்டனைகள் கிடையாது. ஆனால், அவர்களின் மனசாட்சியை இந்தச் சமூகம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும்.
இந்த நாவல் பதிவு செய்திருக்கும் மனக்கூறு ஆய்வுகள் நம்முள் எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது. நாம் யார், பிரபாகரனா, சதாசிவமா, அன்வரா, மணியா, லீமாவா இல்லை கதைசொல்லியா… அல்லது பிரபாகரனின் பெற்றோரா?
ஒருவரின் பால்யகாலம் என்பது இந்த உலகத்தில் அவர்கள் வாழும் ஒட்டுமொத்த வாழ்க்கையை அவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் காலகட்டம்.
அந்தப் பால்யகாலத்திற்கான பொறுப்பாளி பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான். இவை ஆரோக்கியமாக அமைந்தவர்களுக்கு மயில்சாமிகள் ஒரு பொருட்டே அல்ல.
அஸ்திவாரம் பலமாக இல்லாத கட்டிடங்கள் சாதாரணக் காற்றுக்கே சரிந்து தான் போகும்.
தம் ஆசைக்காக, கௌரவத்திற்காக, சமூகத்திற்காகக் குழந்தை பெற்றுக்கொள்பவர்களும் சரி வளர்ப்புப் பிராணி வளர்ப்பவர்களும் சரி அதன் பொறுப்புகளையும் அந்தப் பொறுப்புகளின் முக்கியத்துவத்தையும் உணர்வதில்லை… தம் ஆசைக்காகக் கதை எழுதுபவர்களும் கூட.
மருந்துகளின் பாதகங்களையும் மீறி அதன் சாதகங்களே அதன் தேவையை முடிவு செய்கிறது. ஆனால், அந்த மருந்துகள் தேவைப்படுபவர்களின் உடல் கூறுகளைப் படித்து வரும் மருத்துவர்களுக்குத் தான் அதைத் தீர்மானிக்கும் பொறுப்புகள் உண்டு.
இது துறை சார்ந்த பிரச்சனையல்ல தினசரி வாழ்க்கையில் ஒழுங்கியலை கைக்கொள்வது அவரவர் குணம், மனம் சார்ந்தவை.
நம் இக்கட்டுகளுக்கான தீர்வுகளை நாம் வாழ்ந்த வாழ்க்கையின் தரமே நிர்ணயிக்கிறது.
ஒரு கூராய்வின் கூறு முறையோடும் மர்ம புனைவின் சுவாரசியத்தோடும் வேகமாக நகரும் கதையில் சொன்னதையே திரும்பச் சொல்லி ஆங்காங்கே தொய்வும் ஏற்படுகிறது.
ஒன்றின் மீது வைக்கும் விமர்சனங்கள் அந்த ஒன்றை மட்டுமல்ல அதை விமர்சிப்பவரையும் யார் என்று சுட்டுகிறது. அப்படியே பிரபாகரனை விமர்சிக்கும் கதைசொல்லியும்.
ஆரம்பத்திலிருந்து கதைசொல்லி பிரபாகரனைப் பற்றிய தன்னுடைய எதிர்மறை பார்வைகளைச் சொல்லும்போது அவை வலிந்து திணித்தவையாகவே உணர முடிகிறது.
அதிலொரு இயல்போட்டம் இல்லாமல் போவதற்குக் காரணம் கதைசொல்லியின் மனதில் ஏற்கனவே தொகுக்கப்பட்ட கதாபாத்திரம் பிரபாகரன் என்பதால் தான் என்பதைப் பின்னர் பகுதி இரண்டில் கதைசொல்லியே அதை விவரிக்கும்போது புரிகிறது.
பிரபாகரனின் திறமை மேலிருக்கும் மதிப்பை, அவனது ஆளுமை மேலிருக்கும் ஈர்ப்பை கதைசொல்லியின் எதிர்மறை வார்த்தைகள் மறைக்கவில்லை. மாறாக அது படிப்பவரின் மனதிலும் பிரபாகரனை ஒரு நாயகன் அந்தஸ்திற்கு உயர்த்துகிறது.
இந்த நாவல் ஒரு பார்வை மாற்றத்தை அல்லது நாம் உணர்ந்த ஒன்றின் மீது ஒரு அழுத்தத்தை நிச்சயமாக ஏற்படுத்துகிறது.