Suneel Krishnan [சுனில் கிருஷ்ணன்] (Born: April 6, 1986) is a writer, ayurvedic physician, and neo-Gandhian who writes short stories and novels in Tamil. He is a recipient of the Yuvapuraskar award for literature given by the Kendriya Sahitya Akademi.
முதல் வாசிப்பில், மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தின் உச்ச தருணங்களும், மரணத்தின் பின்னரான உள்ளக விசாரணைகளும் நிறைந்து , மரணமே முதன்மை சரடாக சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதை தொகுதியின் கதைகளை கோர்த்தது போல தோன்றியது. மரணக் குறிகளை முன்னறிவித்தபடி, குத்தீட்டிகளையும் பச்சை நிறக் கொடியையும் ஏந்தியபடி அரூபமாக நெருங்கும் மரணம், இடைநில்லா துயரப் புனலில் விழுந்த சருகிலை போல அலைகழிக்கப்படும் மனிதர்களின் ஒரு தொகுதியை வாரி எடுத்துக் கொண்டு சுழித்த படி மறைவதும், உதிரிகளை பழிப்பு மட்டும் காட்டிவிட்டு உதறிச் செல்வதும் சுனில் கிருஷ்ணனின் கதைகளில் வேறு வேறு களங்களில் நிகழ்கின்றன. வாசக கவனத்தை அழுத்தமாக கோரிய, வாசித்த அந்த கணம் வரை நான் அறிந்திடாத தகவல்களான ஆயுர்வேதத்தின் வஸ்தி, பிழிச்சல், மூக்கு வழி தங்க பஸ்பம், சுதர்சன குளிகை, இறப்பிற்கு முன்னதான காட்டுப்பீ, குண்டலினி குறியீடான பாம்பு தன் வாலைக் கடித்து சுழித்தல், மரணக் குறிகளான, சக்கர வட்டம், கடலாமை, தாமரை சிற்றலைகள், தண்டுவட டி.பி, ஏரழிஞ்சில் மரம், முனிவர் பதஞ்சலி சிலைக்கு எதிராக செதுக்கப்பட்ட தலைக்கோலி சிலை என ஆங்காங்கே கொட்டப்பட்டு குவிந்திருக்கின்றன.இந்த நுண் தகவல்கள், வலுவான சித்தரிப்பு, குறியீட்டு படிமங்களுடன் இணைந்து வாசிப்பனுவத்தை மேலும் தீவிரமாக்கி கதைகளை உளத்திற்கு அணுக்கமாக்கின.
‘எலும்புகளுக்கு மேல் தோலை யாரோ உருக்கி ஊற்றியது போல படுக்கையில் கிடந்தான்’, ‘மூங்கில் கழிகளுக்கு தடவிவிடுவது போல’ என முதன்மை பாத்திரமான வாசுதேவனின் உடல் சித்தரிப்பாகட்டும். கால் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சிதறும் எறும்பு கூட்டம் போல மனம் சிதறியது, என வாசுதேவன் நிலை கண்டு மனம் பாதிக்கப்படும் கதைசொல்லியின் மனவோட்டமாகட்டும், திறமையாக இந்த கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதையின் முடிவில், வாசுதேவனின் அப்பா, அம்மா, அக்கா, அவள் குழந்தை என இவர்களில் எவரோ ஒருவர் ‘சக்சன் போடுவதை’ தாமதப்படுத்தி வாசுதேவன் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என வாசக ஊகம் விடப்படுகிறது. இவர்களில் எவர் என்று அறிவது எனக்கு முக்கியமாக படவில்லை. ஏன்? எப்படி? என்ற கேள்விகளே முதன்மையாகப் பட்டது. வாசுதேவனின் படுக்கைப் புண்ணை கதைசொல்லி காணும் தருணம், முன்பு தீவிரமான பாசத்தால் சிரத்தையுடன் பராமரிக்கப்பட்ட வாசுதேவன், அந்த தீவிரம் குறைந்து அந்த குடும்பத்தால் சுமையாக கருதப்படும் நிலையின் துவக்கத்தைக் காட்டியது. குற்ற உணர்வு இல்லாமல் மரணத்தை நிகழ்த்த இவர்கள் யாவரும் வேறு ஒருவரின் தூண்டலுக்காக காத்திருக்கிறார்கள். அந்த தூண்டல், இவர்களின் குடும்பத்திற்கு வெளியே இருந்து வரும் மருத்துவனான கதைசொல்லியிடமிருந்து வருகிறது. ஆயுர்வேத அபியங்க சிகிச்சையின் போது, வாசுதேவன் கதைசொல்லியின் கைகளை தொடும் கணம்தான், மரணத்தை வேண்டி அரற்றிய அவன் உள்மனக் குரலை கதைசொல்லி சரியாக உள்ளுணர்ந்து இவர்களுக்கு கடத்தி வாசுதேவன் மரணம் நிகழ காரணமாகிறது. இந்த கதையில், துருத்தியபடி குறையாக தெரிந்தது, தமிழ் திரைப்படங்களில் நாயகனின் அணுக்க சிரிப்பு நடிகர்களை நினைவுபடுத்திய இளங்கோ பாத்திரமும் உரையாடலும்தான். காளிங்க நர்த்தனம் கதையில், அரியக்குடி கோவிலுக்கு தினமும் வருகை தந்து, சிற்பங்களை பார்வையிடும் மாணிக்கத்திற்கு, முன்பு குடும்பஸ்தராக இருந்து இப்போது சாமியாராக பிச்சையெடுக்கும் முறுக்கு சாமியுடனான நட்பும் உரையாடலும் கதையை நகர்த்துகிறது. உருண்ட முலையும், புடைத்த காம்பும் கொண்ட தலைகோலி சிலை மாணிக்கத்தை ஈர்க்கவில்லை. தொந்தியும், குறுவாளும் கொண்டு முன்பு உயிரோடு இருந்து இப்போது சிலையாக மாறிய சாதாரணர்களின் சிலைகளில் ஒருவனாகவே நிற்க விரும்புகிறான் மாணிக்கம். முன்பொருமுறை குண்டலினி யோகத்தை தவறாக சோதனை செய்து, குணமான மாணிக்கத்தின் பின்புலம் நாக தோஷம் கொண்ட அவரின் சித்தப்பாவின் கதை மூலம் விளக்கப்படுகிறது. முன்பு விஷத்திற்காக பாம்பு பிடித்த முறுக்குசாமியின் பின்புலமோ விடுபட்ட கோட்டு சித்திரமாக கொடுக்கப்பட்டு வாசக ஊகத்திற்கு விடப்படுகிறது. மழையில் ஒடும் ஓடை கூட நீர் சர்ப்பம் என சித்தரிக்கப்பட்டு கதை முழுக்க நாகம் குறியீடு வேறு வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறது.காலையிலும் மாலையிலும் ஈரமாக இருக்கும் சிலையை இருவரும் சேர்ந்து தரிசிக்கும் போது இந்த கதை ஆணின் காம ஒறுப்பை அல்லது புலனை ஆள்தல் பற்றி குறியீட்டு ரீதியாக அமைக்கப்பட்டிருக்கிறதோ என சிந்திக்க தூண்டியது. ஆனால் கதையின் முடிவில் காளிங்க நர்த்தனமாடும் சிற்பத்தினை விளங்கிக் கொண்ட பின் நேராக கழிவறைக்கு செல்லும் மாணிக்கத்தின், கனவு மனம் பிரம்மாண்டமான பாம்பின் மேல் தோல் மீது சறுக்கு மரம் போல வழுக்கி விளையாடும் போது, ஒரு வாசிப்பிற்காக அங்கு விளையாடும் தடி வைத்த கிழவராக காந்தியையும், முள் முடி கொண்ட கோட்டு்போட்ட கனவானாக இத்தாலிய பாலியல் திரை இயக்குனர் டின்டோ பிராஸ் அல்லது விளாடிமிர் நோகோபாவ் எனக் கொண்டால், இந்தக் கதை , ஐந்து தலை நாகத்தை குழந்தை கண்ணன் அடக்கி, அதன் தலையின் மீதேறி, வாலை பிடித்துக் கொண்டு, புலனடக்கி பெறும் இன்பத்தை அல்ல, புலனை சுமத்தல் பற்றி பேசுகிறது எனத் தெளிவாகிறது. வழக்கில் இருக்கும் தொன்மத்தின்படி, நெடுநாள் பயன்படுத்தாமல் திரண்டிருக்கும் விஷத்தை நாகம் வெளியிடும் போது உருவாகும் கல்லின் பெயரை கொண்ட மாணிக்கம், தன் குன்றிமணி தலையின் மீது அந்த பிரம்மாண்டமான நாகத்தின் கனத்தை கணந்தோறும் சுமக்குமாறு வாழ்நாள் முழுவதும் சபிக்கப்பட்டிருக்கிறான் எனத் தோன்றுகிறது. என் வாசிப்பில், இந்த சிறுகதை தொகுப்பின் மாமேன்மையான கதை ‘குருதிச் சோறு’. பால்வற்றி வெடித்த மார்பு கொண்டு, ஊழித் தாண்டவத்தில் தன் பிள்ளைகளை இழக்க நேர்ந்தாலும், தன் ஆற்றலின் கடைக்கோடி அணுக்கள் ஒவ்வொன்றையும் திரட்டி சோறு படைத்து பசியென்று வருபவர்களுக்கு ஐயமின்றி சோறிடும் பாலாயியின் பாத்திர படைப்பு, அவளின் பிழைத்த மகனாக இருக்க வாய்ப்பிருக்கும் சன்னதம் கொண்டு ஆடும் மருலாளியின் சபரி பார்வை வழியாக விரிவான அழுத்தமான பாத்திர சித்தரிப்பு, சிறு பாத்திரமாக வரும் ஒற்றை பசு பாக்கியத்தின் இறப்பின் இறுதிக் கணத்தை கூட சிரத்தையுடன் சித்தரித்தது, தாது வருட பஞ்ச கால உக்கிர பட்டினி சூழலை கண்பார்க்காமல் கடந்து செல்லும் நெல் மூட்டை வண்டிகளின் இரக்கமில்லாமையின் சித்தரிப்பு, மெய் நிகழ்வுகள் காலங்கடந்து உருமாறி தொன்மாக நிலைப்பது, மூன்றடுக்கு கதைகளையும் ஒரே நூலிழையில் இணைத்த இரத்த அன்னம் என்ற படிமம், என இந்த கதை என் மனதின் ஒரு பாகத்தை தாக்கி இழக்க வைத்து என்னுள் வெறுமையை உண்டாக்கியது. அந்த வாசிக்கும் தருணம் வரை உணர்ந்திடாத மேலான உணர்வுகளால் அந்த வெறுமையை ஈடிட்டு நிரப்பியது. கதையின் முடிவில் அந்த மீதமுள்ள குங்குமமிட்ட பச்சை நிற பத்து கற்கள் எவர் எவரென இருக்கலாம் என விதிர் விதிர்த்தபடி பக்கங்களை திருப்பிய போது, புதிய தமிழ் படைப்பாளிகளின் கதைகளில், இந்த அளவிற்கான கொதிநிலை உணர்வை நான் வேறெந்த கதையிலும் பெறவில்லை என உணர்ந்தேன்.
‘பேசும் பூனை’ கணையாழி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை. தொகுப்பிற்கு வெளியே அதிகமாக பேசப்பட்ட கதைய���ம் இதுவாகத்தான் இருக்கும். கத்தாரில் கணவன் பணியிலிருக்க, தனிமையில் தன் மகள் ஹர்சிதாவுடன் வாழும் தேன்மொழியின் வாழ்க்கை சூழல் விரிகையில் ‘வீட்டின் மேல்மாடியில் அமைந்திருந்த டி வி ஆண்டனாவை ஒயிலான கொண்டை’ என்றபோது, அந்த வர்ணனைகள் பெண்மனதையோ, உடலையோ வர்ணிக்கிறது என்ற எண்ணம் சட்டென்று தோன்றி கதைக்குள் இழுத்தது.அந்த பேசும் பூனையை தேன்மொழிக்கு அறிமுகப்படுத்தும் குழந்தை ஹர்ஷிதாவோ, சிரமமில்லாமல் அதனுடனான உறவினை முறித்துக்கொண்டு கோபக்கார புள், ஒடும் இளைஞன் என அடுத்தடுத்த ஆட்டங்களுக்குள் தாவி விடுகிறாள். வாழ்வின் போக்கினை அழுத்தமாக தீர்மானிக்கும் எந்த ஒரு விலக்க விருப்ப உறவின் அறிமுகத்தைப் போல, கண் சிமிட்டியபடி தேன்மோழியின் கவனத்தை கவருகிறது பேசும் பூனை. அதுவரை அலைபேசியில் பாம்பு விளையாட்டு விளையாடிய தேன்மொழியிடம், பூனை அவளின் முதலாம் குழந்தையின் இறப்பினை நினைவு கூறி, சலிப்பான தனிமையிலிருக்கும் அவள் எப்போதும் ஏங்கும் மாற்றத்திற்கு பதிலியாக தன் உடை மாற்றம், பேச்சு மாற்றம், மறைந்து தோன்றுவது, விருப்ப பாடலை பாடுவது என தேன்மொழியின் வாழ்க்கையை சுவாரஸ்யபடுத்திக் கொண்டே மனதிற்குள் ஆழமாக ஊடுறுவுகிறது. கணவனுடனான உறவில் விரிசல் வருகிறது. அணுக்க தோழியான அனீஸ் அக்காவிடமிருந்தும் தொடர்பு அறுகிறது. தன் மகள் ஹர்ஷிதாவிடமிருந்தும் விலகுகிறாள். முழு முற்றான உறவாக மாறும் பேசும் பூனை அவளை ஆக்கிரமித்து, படிப் படியாக சுரண்டி, வீடு முழுக்க தேவைக்கு மேலதிக பொருட்களை நிரப்புகிறது. அவள் மனதிலோ எவராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்குகிறது. சுரண்டுவதற்கு ஏதுமில்லை என்ற நிலையில், ஆம், அதே காலனின் உடையான பச்சை நிற ராணுவ உடையை அணிந்து வந்து, இறப்பே தீர்வு என அவளைத் தள்ளுகிறது. இந்த கதை வாசித்தபோது ‘தட்ஸதமிழ்’ இணையதளம்தான் உடனடியாக நினைவிற்கு வந்தது. சினிமா, அரசியல், பிக் பாஸ் என அந்தந்த காலத்தின் பரபரப்பான செய்திகள், நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள், லேட்டஸ்ட் கார் , பைக் , என மெல்லுணர்வுகளைத் தூண்டும் செய்திகளை மட்டும் கிசு கிசுப்பாக உரையாடும் தொனியில் தரும் இந்த தளம், முதற் பார்வைக்கு தெரியாமல் ஆனால் அதற்கு இணையாக விளம்பரங்களால் வியாபித்து வாசிக்கும் ஒவ்வொரு கணமும் இவற்றை வாங்கத் தூண்டுகிறது. இன்பாக்ஸில் வந்த ஏதோ ஒரு நடிகை தொடர்பான செய்தியை தொட்டபோது, இந்த தளத்திற்கு வந்து சேர்ந்ததாக நினைவு. பணிக்களைப்பால் ஓய்வெடுக்கிறேன் என்கிற சாக்கில், அன்று முதல் குறைந்தது 3 வருடங்களுக்கு என் பணி நேரத்தில் பாதியை விழுங்கியது இந்த தளம். அந்த பொருள் தன் இருப்பில் இல்லாவிட்டால் , நான் ஒரு முட்டாள் என்றும், என் வாழ்வு நிறைவு பெறாது என எண்ணி, நான் வாங்கி குவித்த பொருட்கள் அலைபேசி,வெற்று உடற்பயிற்சி சாதனங்கள், மின்ஆற்றல் வங்கி பெட்டி, தலைகவர் ஒலி கேட்பான் என ஏராளம். ஏதோ ஒரு நாளில், ஹர்ஷிதா வேறு விளையாட்டிற்கு மாறியதைப்போல சலிப்புற்று விலகி விட்டேன். பேசும் பூனை என்கிற இந்த புனைக்கதை மேல்தளத்தில் அலைபேசி செயலிகளுடன், விளையாட்டுகளுடன் விலக்க முடியாத போதை தரும் உறவினைப் பற்றி பேசுவது போல தோன்றினாலும், இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் பகிரும் ஒவ்வொரு தகவல்களிலிருந்தும் நம் அந்தரங்கம் நொடிதோறும் கண்காணிக்கப்பட்டு தகவல்களாவதும், அந்த மொத்த தகவல் திரட்டும் ஒரு மாபெரும் பூதத்திடம் கொடுக்கப்பட்டு, அதனால் நாள்தோறும் சுரண்டப்பட்டு, அடையாளமிழக்கிறோம் என அடித்தளத்தில் சுட்டிக்காட்டியதாகத் தோன்றியது. ‘பொன் முகத்தை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ கதை எனக்கு மதுரை மங்கையர்கரசி பள்ளியின் தெய்வ வாழ்த்துப் பாடலாக நான் மீள மீள கேட்ட ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்’ பாடலை நினைவூட்டியது. நானா லேனாவிற்கும், அவரின் மறைந்த மனைவி வள்ளியாட்சியின் பெயரைக் கொண்ட குழந்தை ஷ்ரத்தா என்கிற வள்ளியுடனான உறவே கதையின் மையம். முதல் வாசிப்பில் சுராவின் ‘விகாசம்’ சிறுகதையின் பாதிப்பு இருப்பதாகத் தோன்றினாலும், விகாசம் கதை முடியும் இடத்தில் இந்த கதை துவங்கி தொடர்ச்சியான வேறொரு உணர்வின் தளத்திற்கு சென்றதாகத் தோன்றியது. விகாசத்தில் அய்யர் வாங்கிய ‘கணித்து விடை அளிப்பான்’ உடனான போட்டியில் இராவுத்தர் தோற்றாலும், தன் நினைவாற்றலை வெளிக்கொணர்ந்து அய்யரின் அந்த வாணிபத் தளத்தில் தன் இருப்பை தக்க வைக்கிறார். இவரிருவரின் உறவின் அடியில் ஒரு சீண்டலும், சமத்காரமும் இருக்கும். இந்த கதையிலோ லேனா வானா வள்ளி உறவில் ஒற்றை உணர்வு கொண்ட நெகிழ்ச்சியான உறவு மட்டும்தான் உண்டு. அவர் முன்பு பணிபுரிந்த இடத்தில் கணிணியுடனான போட்டியில் வீழ்த்தப்பட்டு வீட்டிற்குள் முடக்கப்படுகிறார் லேனா வானா. அவரின் முன்னாள் முதலாளி பக்கவாதம் வந்து அனுமதிக்கப்பட்ட மருத்தவமனையின் பெயர் மீனாட்சி ( இவளின் நிறமும் பச்சைதான்). அவரை சந்திக்க லெட்சுமண செட்டியார் சென்ற இரண்டே நாளில் உள்நுழையும் இயந்திரமான அலைபேசியால் அவரின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கதையின் முடிவிலோ உறங்கிய குட்டி வள்ளி ஆச்சியின் உள்மனதில் தன் குரலின் நினைவை அழிக்க இயலாததை அறிந்து உளம் குளிர்ந்த லேனா வானா வேறு வேறு குரலில் பாடி நெகிழ்ந்து களிக்கிறார். கு. அழகிரி சாமி கதைகளில் காணக்கிடைக்கும் குழந்தைமையிலிருந்து பீறிரும் ஒளி இந்த கதையில் ஒரு கீற்றாக நான் பெற்ற தருணம் அது. வைத்தியர் தாத்தாவிற்கும் , ஆனா ரூனா செட்டிக்கும் இடையேயான உறவினை பேசும் கதை ‘அம்பு படுக்கை’. சுதர்சனத்திற்கு ஆனா ரூனா செட்டியாரின் இறுதிப் படுக்கை நிலையை கூற வரும் தம்பு ஓட்டி வந்த துறுவேறிய சைக்கிளும், ஆம் ஆதே பச்சை நிறம்தான். வாழ்நாளெல்லாம் ஆயிரம் அம்புகள் அவரை நோக்கி எய்யப்பட்டாலும் இறுதி அம்பை மட்டும் எதிர் கொண்டு வாங்கி வலியில்லாமல் இறக்கிறார் செட்டியார். தண்டுவடத்தில் டி பி நோய் தாக்கிய வைத்தியர் தாத்தாவோ, இறுதியாக ஒரே நேரத்தில் எய்யப்பட்ட ஆயிரம் அம்புகளில் ஒன்றைக்கூட இழக்காமல் அனைத்தையும் தண்டுவடத்தில் வாங்கி, உலகின் வலியனைத்தையும் பெற்று இறக்கிறார். இந்த இறப்புகளின் வேற்றுமை காலனின் குரூரமான பகடி போலத் தோன்றியது. ‘கூண்டு’ கதை சமகால அரசியல் சூழலை நோக்கிய விமர்சன கதை. கொல்லன் கோரும் யானைகளின் முதுகெலும்பு 336 என்பது என்ன என்பது அறிந்தபோது பொருத்தமாக அமைந்திருப்பதாக தோன்றியது. அதோடு சேர்த்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 336 எண் என்பது, ‘கவனமற்ற அவசரத்தாலும், அலட்சியத்தாலும், தனிமனித உடமைகளுக்கோ உயிருக்கோ சேதம் விளைவித்தால் மூன்று மாதம் வரை சிறைதண்டனையும்,250 ரூபாய் அபராதமும், அல்லது இரண்டுமே தண்டனையாக கிடைக்கும்’ என்பதும் ஒரு பகடியாக கதைக்கு பொருத்தமாகத் தோன்றியது. பெட்டி பெட்டியாக கொடுக்கப்பட்ட திமிங்கல நெய்யினைக் கொண்டு தன் மெழுகு பொம்மையை தானே செய்து தன்னை தானே கொல்லன் ரசிக்கிறான் எனவும், கொடுத்த கடலாமை ஒடுகளைக் கொண்டு கேடயம் அமைத்து வெற்று சவடாலில் கோமாளி வாய் சண்டை இடுகிறான் எனவும் தோன்றியது. ’ அறிவியல் புனைவான ‘திமிங்கலம்’ கதையில் பெருநிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து அழிந்து பின் தழைக்கு முயலும் சூழல் விவரிப்பினை விட, கதை முதன்மை பாத்திரம் திமிங்கலத்திற்கும், அவன் முதல் மனைவி ஜெமீமாவிற்கும் இடையேயான மானுடம் தழைத்தல�� , மானுடம் வாழ்தல் என்கிற கருத்து மோதல் உரையாடல்கள் ஆர்வமூட்டும் வாசிப்பினைத் தூண்டின. இயந்திரங்களை பல்கி பெருக்கும், நிரூபணத்தை கோரும் அறிவியல், அந்த நிரூபண சோதனைக்காக, இயந்திர பெருக்கத்திற்காக இழக்கப்படும் எண்ணிடலங்கா உயிர்களை மானுடம் தழைக்க பலிகொடுக்கப்பட வேண்டியவர்கள் எனவும், அதன் மறுப்பாக, மனித நினைவாற்றலை பெருக்கி இயந்திரத்தின் பங்கினை குறைக்கும் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட ஜெமீமாவின் எதி்ர்வாதமும் கொண்ட உரையாடல்களை சிறப்பாக அமைந்தது. நாய் தன் வாலை கடித்தபடி சூழல்வது போல, திமிங்கலம் இரு முனைக்கும் அலைந்து மணல் காலடிகளை அழிக்க எத்தனித்து முடியாமல் போவது, அறிவியலை ஒற்றைக் கோணத்தில் குற்றம் சாட்டுவது போலத் தோன்றியது. ‘ஆரோகணம்’ இந்த சிறுகதை தொகுப்பின் நிறைவுக் கதை. ஒரு கிழவனின் பனிசிகரத்தை நோக்கிய பயணத்தின் மனவோட்ட விவரிப்புதானே என வாசித்தபோது, அந்த கிழவன் ‘காந்தி’ என்று அறிந்த கணம், இந்த கதையே இந்த ஒட்டுமொத்த தொகுப்பிற்குமான தெளிவுரை எனத் துலங்கியது. நோயுற்று மரணத்தை வேண்டிய பசுவின் அகத்தை அறிந்து அதை உயிருடனிருந்து வதைபடுவதை விட கொல்வதே மேல் என்ற காந்தியும், காமத்தை அடக்குகிறேன் என கனமிக்க பிரம்மாண்டமான நாகத்தை தன் தலை மீது வாழ்வின் இறுதி கணம் வரை சுமந்த காந்தியும், இயந்திரங்களின் மீது ஐயம் கொண்டு மனிதனின் உழைப்பும் சிந்தனையையும் மட்டும் கரையேற்றும் என நம்பி அதன் உச்சபட்ட சான்றாதாரமாக தன்னையே முன்வைத்த காந்தியும், ஆட்கொல்லி பல்லியை கப்பலேற்றி அனுப்பிய கொல்லனின் மூதாதையனான காந்தியும் என் கண்முன் நின்றனர். மரணம் அல்ல, காந்தியே இந்த சிறுகதை தொகுப்பின் கதைகளை குவித்து சேர்த்து அள்ளி இணைத்த கண்ணி எனத் தோன்றியது. தமிழ் படைப்புலக சொற்களனில் அழுத்தமாக தன் தடத்தை பதிக்க அத்தனை தகுதியும் கொண்ட, எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் தடங்கலின்றி தீவிரமாக இயங்க என் வாழ்த்துக்கள்.
மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்பு. அத்தனை கதைளுமே அருமையானவை. கூண்டு, ஆரோகணம், திமிங்கலம், வாசுதேவன், (குறிப்பாக) பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் ஆகிய கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
இயல்பு, மிபுனைவு, அறிவியல் புனைவு , வரலாற்று புனைவு என கலவையான சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. அனைத்துமே வாசிக்க வேண்டியவை. மீண்டும் மீண்டும் அதனுள்ளே உழன்று கொண்டிருக்க தகுந்தவை. கட்டாயம் வாசித்து பாருங்கள்
ஆசிரியர் - சுனில் கிருஷ்ணன் சிறுகதை தொகுப்பு 151 பக்கங்கள் யாவரும் பதிப்பகம் யுவ புரஸ்கர் விருது 2018
நவீன சிறுகதைகள் எந்த ஒரு கோட்பாடுகளுக்குள்ளும் தன்னை இருத்திக்கொள்ளாது. அது ஒரு சுதந்திர பறவை போலவும் , அருவியிலிருந்து விழுந்து எழும் நீரோட்டம் போலவும் தன் எழுத்தாளனின் எண்ண ஓட்டம் பொருட்டு அது தனக்கான பாதையை தானே அமைத்து தன் கதையையும், தன் கதை மாந்தர்களையும் அழைத்து செல்லும். ஒரு வாசகனாக நாம் அதனை விலகி நின்றும் ரசிக்கலாம், அருகில் சென்றும் அணுகலாம், தொட்டு பார்த்தும் உணரலாம், சில சமயங்களில் நம் எண்ண ஒடங்களை கொண்டு அந்த பாதையிலே பயணித்து அதன் முழு பயணத்தையும் நாம் ஒரு வாழ்வாக வாழ்ந்தும் பார்க்கலாம். சில சமயம் அந்த பயணம் ஒரு கற்பனை என்று உணர்ந்து நம் பயணத்தை முடித்துக்கொள்ளலாம். ஆனால் சில சமயம் கற்பனைக்கும், நிதர்சனத்திற்கும் வேறுபாடு மறைந்து, மறந்து நாம் பயணிப்பது ஒரு கதையின் பயணமா அல்ல நம் வாழ்வின் பயணமா என்று வினவும் சூழ்நிலையும் வரும். அப்படி நம்மை கட்டி இழுத்து செல்லும் எழுத்தாளன் ஒரு கண் கட்டி வித்தைகாரனே. அப்படி ஒரு வித்தைக்காரன் தான் சுனில் கிருஷ்ணன்.
ஒரு மருத்துவனான என்னை இத்தொகுப்பின் முதல் கதையான "வாசுதேவன் " என்ற கதையிலேயே என்னை அவர் நெருங்கி விட்டார். ஒரு நோயாளியின் கட்டிலில் இருந்து விலகி நின்று பார்க்க கற்று தந்த மருத்துவம், ஏனோ அந்த படுக்கையின் உள் சென்று பார்க்க கற்றுக்கொடுப்பதில்லை, ஆனால் இலக்கியம் அதனை தவறாமல் செய்துகொண்டே வருகிறது. இதற்கு முன் நான் அப்படி உணர்ந்த தருணம் சு ராமசாமியின் "சன்னல் " கதையிலும், காஃப்கா வின் " உருமாற்றம் " கதையிலும். அதே உணர்வை இந்த கதையிலும் நான் அடைந்தேன்.
அல்ல அல்ல குறையாத, நமக்குள் நிரப்பவும் முடியாத கடற்கரை மணல் போலதான் பெண்களின் மனமும். அந்த மணலை இவரும் தன்னால் இயன்ற வரை அல்லி நிரப்ப பார்க்கிறார் தன்" பேசும் பூனை "என்ற கதை மூலம்.ஆனால் அவர் அல்ல அல்ல அந்த தேன்மொழி என்ற அயல்நாட்டில் வசிக்கும் கணவனை பிரிந்து வாழும் பெண் மனதின் வெற்றிடம் பெறுகிக்கொண்டே சென்று இறுதியில் அது பெரும் சுமையாக மாறுகிறது.
இலக்கிய கடலில் பயணிக்க நினைக்கும் எழுத்தாளனுக்கு சரி, வாசகனுக்கும் சரி அவர்களுடைய கற்பனை தான் அவர்களின் துடுப்பு. அந்த வகையில் இவர் பலம் வாய்ந்த துடுப்புகளை கொண்டுள்ளார். "2016", " திமிங்கலம் " என்ற கதைகளின் மூலம் தன் கற்பனையை வேறு தளத்திற்கு கொண்டு சென்று, தன் வாசகனின் கற்பனையையும் உயர்த்தி விடுகிறார். இவரின் கற்பனையின் தனித்துவம் என்னவென்றால் அது நிஜமா நிழலா என்றே ஒரு கட்டத்தில் நமக்கு ஐயம் வந்துவிடும்.
எழுத்துலகில் மிக கடினமான ஒரு இடம் நம் வயதை கடந்து சென்றோ அல்லது பின்னோக்கி சென்றோ அதன் உணர்ச்சிகளை அந்த வயதில் நின்று எழுதுவது. அப்படி இவர் சற்று முன்னே சென்று வயது முதிர்ந்தவர்களின் உணர்வுகளை, எண்ண ஓட்டத்தை அவர்களுக்குள் ஒரு ஆவியாக புகுந்து அப்பழுக்கில்லாமல் அப்படியே வெட்ட வெளிச்சமாக படம் போட்டு காட்டுகிறார் தன் "அம்புப்படுக்கை ", "பொன் முகத்தை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் " என்ற கதைகளின் வழியே.
சுனில் கிருஷ்ணன் ஒரு காந்தியவாதி என்று கேள்விப்பட்டேன். அதனால் தன் "ஆரோகணம் " கதையில் அவரையும் இழுத்து ஒரு கதை மாந்தர் ஆக்கிவிடுகிறார். காந்திகளால் நிறைந்த ஒரு உலகம் எப்படி இருக்கும்? நிச்சயம் அது சொர்க்கமாக தான் இருக்க முடியும். ஆனால் இவரோ தன் கற்பனையின் உச்சத்தில் ஒரு நரகம் முழுக்க காந்தியை நிரப்புகிறார். ஒரு வேலை அந்த கதையின் கடைசி வரியில் காந்தியின் ஆசைப்படி அவரை நரகத்தில் விட்டு கிளம்பும் தருணம் நகைக்கும் காலன் மக்களாகிய நாம் தானோ என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் நாம் தான் அவரின் இறுதி மூச்சு வரை அவரை புரிந்து கொள்ளவே இல்லையே! முடிந்தால் தன் அடுத்த தொகுப்பில் இந்த கதைக்கு பின் நரகத்தில் காந்தி என்ன ஆனார்? காந்தியால் நரகம் என்ன ஆனது? என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு உள்ளேன்!
" இத்தனை காலம் மனிதர்கள் வெறும் வீம்புக்கும் வெறுப்புக்கும் தானே மண்ணிற்குள் சென்றார்கள் " - சுனில் கிருஷ்ணன் ஆம் உண்மை தான் இன்றைக்கும் மரிக்கும் தருணமும் ஏதேனும் ஒன்றை மறைத்து கொண்டு தானே மனிதன் மரிக்கின்றான்.
நூல் : அம்புப�� படுக்கை ஆசிரியர் : சுனில் கிருஷ்ணன் பக்கம் : 152 வெளியீடு : யாவரும் பதிப்பகம்
2018 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருதைப் பெற்ற பத்து சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
வார்னிங் : டிஷ்யூ பேப்பர் இருந்தால் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு புத்தகத்தை வாசிக்க ஆரம்பியுங்கள். ஏனென்றால் முதல் சிறுகதையான வாசுதேவனை கண்ணீர் சிந்தாமல் கடந்து செல்ல முடியாது. மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களை அருகில் இருந்து பார்த்துக் கொள்பவர்களின் உணர்ச்சிப் போராட்டமே கதை.
மரணத்தை வென்றவர்கள் என்று இதுவரை யாரும் இவ்வுலகில் இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை என நான் சொல்ல மாட்டேன் (அறிவியல் மீதும் இயற்கை மீதும் நூறு வயதைக் கடந்தும் வாழும் ஜப்பானிய தாத்தா பாட்டிகளின் மீதும் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு!). எவரும் முக்தி அடைய விரும்புவதாகவும் தெரியவில்லை. ஒருவேளை கடவுள் பக்தியில் திளைத்தவர்கள் அப்படி நினைக்கலாம் (அதிலும் எனக்கு ஐயம் உண்டு). நூலின் பெயருக்கு ஏற்றார் போலவே பெரும்பாலான கதைகளில் மரணமே பேசுபொருள்.
சில வசனங்கள் எண்ணங்களை, கருத்துக்களை நேரடியாக முன்வைக்காமல் குறியீடுகளாக மறைமுகமாக எழுதப்பட்டுள்ளன. அதனால் இரண்டு முறை படித்துப் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் சில இடங்களில் உருவாயின. பொருள் புரியாமல் போன சில இடங்களில் கதையும் நானும் அந்நியப்பட்டு நின்றோம்.
யாரெல்லாம் தவிர்க்கலாம்?
அண்மையில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி இருப்பவர்கள் மனதை லேசாக்க, அமைதிக்காக, பொழுதுபோக்கிற்காக ஒரு புத்தகத்தை வாசிக்க நினைத்திருப்பவர்கள் மென்மையான இதயம் படைத்தவர்கள் மற்றும் பிரக்னன்ட் லேடீஸ் (பர்சனல் ஒப்பீனியன்)
யாரெல்லாம் படிக்கலாம்?
வாழ்க்கையின் நோக்கம் குறித்த தேடல்கள்/சந்தேகங்கள் பற்றியும், மரணம் குறித்த புரிதல்கள்/கேள்விகள் பற்றியும் எப்போதும் ஓயாமல் சிந்தித்துக் கொண்டே இருக்கும் மூளைக்கு சொந்தக்காரராக நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகத்தை படிக்கலாம். கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். சந்தேகங்களை இன்னும் விரிவடையவும் செய்யலாம். தெளிவில்லாத நிலையிலேயே விட்டும் செல்லலாம். ஆனால் பெரும்பாலான வரிகளை உங்கள் எண்ண அலைகளுடன் பொருத்திப் பார்க்க முடியும். உணர முடியும்.
இந்த உணர்வுகளைச் சிறைப்பிடித்து உயிர்ப்புடன் வைத்திருந்து விடை கண்டுபிடிக்க ஆசைப்பட்டால் அமர்க்களம் படத்தில் வரும் “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடலை லூப்பில் போட்டுக் கேட்டுக் கொண்டே இரவு முழுவதும் விழித்து இருக்கலாம். இல்லையேல் பலமான விருந்து சாப்பாடு சாப்பிட்டுவிட்டு ஜீரணத்திற்கு வெற்றிலை போடுவது போல புத்தகத்தைப் படித்து முடித்த பின் “டோரா புஜ்ஜியோ, சோட்டா பீமோ” பார்த்துவிட்டு பின்பு உறங்கச் செல்லலாம். இதுவே உசிதமும் கூட.
புத்தகங்களின் நோக்கம் எல்லா நேரங்களிலும் விடைகளைச் சொல்லிச் செல்வதில் இல்லை. சில நேரங்களில் கேள்விகளை விட்டுச் செல்வதும்தான்.
2018-ஆம் ஆண்டின் யுவ புரஸ்கார் விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு.
வாழ்வும் மரணமும் நம்மை பயப்படுத்தும். வாழ்வை இறுகப்பற்றி இருக்கும் நம் கைவிரல்களை ஒவ்வொன்றாக நழுவச் செய்து நம்மின் மரணத்தின் வழி செல்லும் கணங்கள் எத்தகையது? இயன்றவரை சாவை ஒத்திபோட்ட பீஷ்மர், இறுதியில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் போது, அவரின் மனவோட்டம் எவ்வாறாயிருந்திருக்கும்..?
மரணம், தனிமை, வாழ்வின் மீதான வாஞ்சையை போக்க வைக்கும் ஏதோ ஒன்று என இத்தொகுப்பின் கதைகள் இவ்வுணர்வுகளையே பேசுகின்றன.
மொத்தம் பத்து கதைகள். எல்லாவற்றின் மறைபொருள், உட்குறிப்புகள் ஒன்றாகவே இருப்பினும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத கதைகள்.
தொகுப்பின் முதல் கதையான வாசுதேவனை வாசித்து விட்டு கொஞ்சநேரம் வேறெதுவும் யோசிக்கவோ வாசிக்கவோ இயலாமல் வைத்துவிட்டேன். இம்முதல் கதை கொடுத்த தாக்கமே அடுத்தடுத்த கதைகளின் தாக்கத்தை "Soft blow" ஆக்கிவிட்டது.
ஜார்ஜ் ஆர்வெல்லின் '1984' வாசித்தவர்கள், வின்ஸ்டன் ஸ்மித்தை '2016' எனும் சிறுகதையில் சந்திக்கலாம்.
குருதி சோறு, 2016, பேசும் பூனை, திமிங்கிலம் கதைகளின் கற்பனை அபாரம்!😳
இத்தொகுப்பில் எனக்கு பிடித்தவை, 'வாசுதேவன்', 'குருதி சோறு', '2016', 'பேசும் பூனை', 'கூண்டு' மற்றும் 'திமிங்கிலம்'.
பல்வேறு வகையிலான கதைகள் இந்தத் தொகுப்பு முழுவதும் விரிந்து கிடைக்கின்றன. வாசுதேவன் என்கிற முதல் கதை உலுக்காத மனிதனே இருக்க முடியாது. இந்த உலகத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பது தொட்டு இந்தக் கதை எழுப்பும் கேள்விகள் அதிதூய்மானவை. பேசும் பூனை இன்னொரு ஆழமான கதை. புராண, நவீன, அறிவியல் புனைவுகள் என கதைகள் பயணித்தாலும் இவற்றின் அடிப்படையில் தங்கி நிற்கும் மனிதமே பிரதானம் என நினைக்கிறேன். குருதிச் சோறு கதை மற்றுமொரு எல்லைக்கு நம்மை அழைத்து செல்லும். கூண்டு ரொம்பவே சுவாரசியமான புனைவு கதை. ஒவ்வொரு கதையையும் தனிப்பட்டு குறிப்பிட்டு சொல்ல முடியக் கூடிய தொகுப்பு.