இப்பொழுதுதான் ப.திருமாவேலன் எழுதிய 'பெரியோர்களே தாய்மார்களே' நூலைப் படித்து முடித்தேன். தமிழக அரசியல் பற்றி அழகிய தமிழில் அவர் தீட்டிய காவியம் அது. கிட்டத்தட்ட 400 வருட கால தமிழ்நாட்டு வரலாற்றை ,அரசியல் பின்புலத்தை தெளிவாக ஆராய்ந்துள்ளார். சென்னை பட்டணம் உருவாக்கப்பட்ட கதைகளில் இருந்து சென்னை கோட்டை உருவானது உட்பட நிகழ்கால அரசியலில் நிலவரம்வரை விளக்கியுள்ளார்.
திராவிட இயக்கம் பிறந்து வளர்ந்த வரலாற்றை அயோத்திதாச பண்டிதர் , ரெட்டைமலை சீனிவாசன் ஆரம்பித்து ஜெயலலிதா வரை படம் பிடித்து காட்டியுள்ளார். சென்னை மாகாணம் முதல் இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் என ஒவ்வொருவரின் செயல் திறன்களையும் விளக்கியுள்ளார். இதுவரை பெரிதும் பேசப்படாத ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பற்றி விவரித்துள்ளார். பல இடங்களில் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார். இவர் எழுத்தில் அழகு தமிழ் மென்மேலும் அழகு பெறுகிறது. இப்புத்தகத்தை யூடியூபில் ஆடியோ புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதைக் கேட்டுவிட்டு இப்புத்தகத்தைப் படித்த எனக்கு இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது அவருடைய குரல் கணீர் கணீரென்று என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
சாமானிய மக்களுக்கு அரசியல் மீது உள்ள வெறுப்பு, குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் மீது உள்ள கசப்பு இப்புத்தகத்தைப் படித்தால் நிச்சயம் பறந்துபோகும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இவர் எழுதிய குறிப்புகள் கண்களில் கண்ணீர் மல்க வைப்பன. தமிழ் நாட்டின் நலனுக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த எண்ணற்ற மனிதர்களுக்கு இப்புத்தகம் அஞ்சலி செலுத்தியுள்ளது. சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனார் ஐ பற்றியும், சென்னையை தமிழ்நாட்டோடு இணைக்க அரும் பாடுபட்ட தலைவர்களின் பங்களிப்பையும், கன்னியாகுமரி மாவட்டத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்ட தியாகிகளின் தியாகத்தையும் போற்றி உள்ளது.
சிறு சிறு ஊர்களாக இருந்த பகுதிகளை இணைத்து சென்னப்பிரதேசமாக, மதராஸ் மாகாணமாக உருவாக்கிய ஆங்கிலேயே தொழிலதிபர்கள் பற்றி விளக்கியுள்ளார். இந்தியாவின் பற்பல போராட்டங்களில் தனித்துவம் வாய்ந்ததாக தமிழகம் விளங்கியதையும் பல்வேறு முன்னேற்ற முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னணியில் நின்றதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏன் அரசியலில் நாட்டம் செலுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து தமிழகத்தின் மொத்த வரலாற்றையும் அங்குலம் அங்குலமாக விவரித்து தமிழர்களின் தியாகங்களை பதிவு செய்து, மற்றவர்கள் போற்ற மறந்த தமிழர்களின் தலைவர்களை, மாமனிதர்களை நயம்பட நினைவு கூர்ந்துள்ளார்.
தலைவர்கள் செய்த நல்லனவற்றை புகழ்ந்ததோடு நின்றுவிடாமல் செய்த தவறுகளை தக்க இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்;அப்போது கொதித்தெழுந்துள்ளார். எந்த கட்சிக்கும் இயக்கத்துக்கும் சார்பு இல்லாமல் நடுநிலையோடு அனைத்தையும் அலசியுள்ளார்.
விடுதலை போராட்டத்தை சிப்பாய் கலகத்தில் இருந்து ஆரம்பிக்கும் பல ஆசிரியர்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பித்துள்ளார்.மருது சகோதரர்களையும் கட்டபொம்மனையும் திப்பு சுல்தானையும் வைத்து வீர வரலாற்றைத் தொடங்கியுள்ளார்.
பூலித்தேவனும் மாவீரன் சுந்தரலிங்கமும் தீரன் சின்னமலையும் சுதந்திர போராட்ட வீரர்களே என நினைவுப்படுத்தியுள்ளார்.
அரசியலில் உள்ள ஆணாதிக்கத்தையும் , இருட்டடிப்பு செய்யப்பட்ட தலைவர்களின் தியாகங்களையும் , மறைக்கப்பட்ட அரசியல் நிகழ்வுகளையும், மிகவும் விமர்சிக்கப்படும் தலைவர்களின் நற்செயல்களையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
சென்னை மாநகரத்தின் வரலாற்றை அவ்வளவு அழகாக அடுக்கியுள்ளார். தமிழ்நாட்டு அரசியலோடு நின்று விடாமல் உலக அரசியலிலும் எட்டிப்பார்த்துள்ளார். கம்யூனிசத்தை, பொதுவுடைமையை அது இந்தியாவில் பரவிய வரலாற்றை அழகுற தொகுத்துள்ளார் . இந்திய விடுதலை வரலாற்றை பாகிஸ்தான் பிரிவினை வரை சாவர்க்கர் வரை பேசியுள்ளார்.
சர் பிட்டி தியாகராயர், டி எம் நாயர், நடேசனார் , எம்.சி. ராஜா ,ரெட்டைமலை சீனிவாசன் ,ஓமந்தூர் பி ராமசாமி ரெட்டியார், பி எஸ் குமாரசாமி ராஜா, கக்கன் ,ஜீவா, காமராஜர், பக்தவத்சலம், ராஜாஜி, காந்தி ,நேரு, பெரியார் ,அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலிய பல தலைவர்களைப் பற்றி அழகுற பேசுகிறார். அந்நிய ஏகாதிபத்தியத்தில் ஆரம்பித்து ,சுதந்திரப் போராட்டம் என விரிவடைந்து, தற்கால தமிழ்நாடு அரசியலில் முடிவு பெறுகிறது இந்நூல்.
அடுத்த வருடம் தேர்தல் வரும் நிலையில் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
வெளியீடு : விகடன் பிரசுரம்
புத்தகத்தைப் பரிந்துரைத்த அன்பு அண்ணன் பூ.கொ. சரவணன் -க்கு 🖤🖤