இந்த காலத்தின் மிக பெரிய கலாச்சார flex என்பது தான் நடுநிலை என்பதை நிலைநிறுத்துவது முயல்வது தான் . வாழ்க்கையிலும் சரி , விவாதத்திலும் சரி நடுநிலை என்பதே கிடையாது என்பது தான் உண்மை . அப்படி நடுநிலையாக இருக்க முயற்சிப்போர் இரண்டிலும் தோல்வியை அல்லது வருத்தத்தையே பரிசாக பெறுவார்கள் என்பது என் தனிப்பட்ட அனுபவம் , மக்களின் பொதுவான அனுமானம் . எழுத்து ஒன்றில் மட்டும் தான் நாம் நம்முடைய நடுநிலைமையை தாராளமாக காட்டமுடியும் . ஏனென்றால் படைப்பில் காட்டும் நடுநிலைமட்டும் தான் பெரிதாக யாராலும் கேள்விகேட்க முடியாது . அப்படிப்பட்ட எழுத்துலகில் நடுநிலையை எளிதாக தேர்ந்தெடுத்திருக்க கூடிய ஒரு வசதி இருந்த போதும் அதை பா.ரா என் தவிர்த்திருக்கிறார் என்பது புரியவில்லை . கதாநாயகன் முத்துக்குமார் அரசியில் குடும்பத்திலிருந்து வந்து அரசியலில் தன் தடம் பாதிக்க செய்யும் வேலைகளும் , அதனால் அவன் சந்திக்கும் பிரெச்சனைகளே "கொசு " நாவலின் கதை சுருக்கம் . நாவலின் அட்டைப்பக்கத்தில் திராவிட அரசியல் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்னணியில் விரியும் நாவல் என்பது என்ன காரணத்திற்காக என்று தெரியவில்லை . அனுதாப அரசியல் , பொதுச்சேவை அரசியல் , துரோக அரசியல் , தந்திர அரசியல் எல்லாம் திராவிட இயக்கங்கள் தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தது போலொரு பிம்பத்தை இந்த நாவல் கட்டமைக்க முயல்கிறது . உலகில் உள்ள 99சதவீத காட்சிகள் செய்யும் ஒன்றை தான் திராவிட இயக்கங்கள் கட்சியின் வளர்ச்சியை காரணம் கட்டி செய்கிறது . இதற்காக அவர்கள் உத்தமர்கள் என்று நான் சொல்லவரவில்லை , ஆனால் எல்லா பழியையும் திராவிட இயக்கங்கள் மேல் போடுவது என்பது நியாயமான செயலாக இருக்காது . கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவது போல் " எல்லாத்தையும் என்னையவே பாத்துக்க சொல்லாதீங்க , கிழ ஒருத்தன் இருக்கான் அவனுக்கும் கொஞ்சம் கொடுங்க " என்பது போல் பிரித்து கொடுப்பது உசிதம் . நாவலை ஒரு இடத்தில் கூட தேங்கவிடாமல் எழுதுவது என்பது பா.ரா தூக்கத்தில் கூட செய்யும் விசயம் என்பது அனைவரும் அறிந்ததே . ஒருவேளை திராவிட இயக்கத்தினரையும் புத்தகத்தை படிக்க வைக்க பா.ரா வின் தந்திரமாக கூட அந்த முகவுரை இருக்கலாம் என்று நான் நினைக்கிறன் . அவர் தந்திரம் வெற்றியடைந்ததுக்கு நானும் என் விமர்சனமும் தான் சாட்சி .