இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது.ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள் புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடி கொண்டு விட்டது என்ட்ரி நம்பிவிட்டனர் என்று பாராட்டியிருக்கிறார் சுந்தர ராமசாமி. 1951இல் முதலில் வெளியான இந்நூலுக்கு விரிவான முன்னுரை, ஆய்வுக் குறிப்புகள், படங்களுடன் மறுப்பதிப்பைத் தயாரித்திருக்கிறார் புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்புகளை உருவாக்கியுள்ள ஆ இரா வேங்கடலசலபதி
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.
ஓரளவிற்கு எழுத்தும் இலக்கிய துறையும் வளர்ச்சி கண்டிருக்கும் இக்காலகட்டத்திலேயே ஒருவர் முழுநேர எழுத்தாளராக வாழ்வை நடத்துவது என்பது முடியாத காரியம் ஆனால் புதுமைப்பித்தன் 1940 ல் எழுத்தை நம்பி தன் மொத்த வாழ்வையும் அதற்காக பலி கொடுத்துக் கொண்டார். தமிழை மரபிலிருந்து நவீனதிற்கு மடைமாற்றி விட்டவர்கள் பாரதியும் புதுமைப்பித்தனும். இன்று அவர்கள் இருவரையும் தமிழ் உலகம் அடையாளம் கண்டு இருக்கிறது ஆனால் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் பசியில் கிடந்து இலக்கியத்தை வளர்த்தார்கள்.
இன்று ஒரு எழுத்தாளன் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் போதும் அல்லது உடல்நலக் குறைவின் போது இலக்கியத்தில் செயல்படுபவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நிதியை திரட்டி அந்த எழுத்தாளருக்கு அளிக்கிறார்கள் ஆனால் பாரதியும் புதுமைப்பித்தனும் வாழ்ந்த காலகட்டத்தில் அவ்வாறு அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை அவர்கள் பொருளாதார நெருக்கடியால் தங்கள் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டு இறந்து போனார்கள்.
''தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ் நாட்டாரைப் பார்த்து நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்' என்று கேட்க எனக்கு உரிமை உண்டு. நீ மற்ற எழுத்தாளர்களோடு கலந்து கொண்டு என் நிலையைப் பற்றிப் பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு எனக்கு உதவி தேடு. என் நிலையைப் பற்றி நானே வேண்டுமானாலும் எழுதித் தருகிறேன்....' --பு.பி
அந்த குற்ற உணர்ச்சியை போக்கிக் கொள்வதற்காக இன்று தமிழர்கள் ஓடிஓடி எழுத்தாளர்களுக்கு உதவி செய்வதை காண முடிகிறது இது ஒரு நல்ல ஆரோக்கியமான தொடக்கம் .
புதுமைப்பித்தனை சமூகமும் நிராகரித்தது அவரின் குடும்பமும் நிராகரித்தது ஒரு பைசா கூட கொடுக்க முடியாது என்று அவரின் அப்பா அவரை வீட்டை விட்டு துரத்தினார் நீதிமன்ற வழக்குகள் மூலம் புதுமைப்பித்தன் கணிசமான சொத்துக்களை அவரின் தந்தையிடமிருந்து பெற்றாலும் எல்லா இலக்கிய நபருக்கும் உள்ள குணம்தான் அவரிடமும் இருந்தது பொருளாதார ரீதியாக பணத்தை ஈட்டுவது அதை தக்க வைத்துக் கொள்வதிலும் எந்த அக்கறையும் இல்லாமல் அவரும் தன் வாழ் நாட்களை கடத்தினார். ஒரு கட்டத்தில் வழியே இல்லை என்றானபோது திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத சென்றார் அங்கேயும் தோல்வி ,
"நானும் பத்து வருஷமாய்ப் பத்திரிகைத் தொழிலில் செத்தேன். ஒன்றும் மிச்சத்தைக் காணோம். எனக்கு ஒரு பெண்டாட்டி இருக்கிறாள்; பிள்ளை இருக்கிறது. சினிமாத் துறையில் இறங்கினால் ஏதாவது மிச்சம் பார்க்கலாம் என்று விலகினேன்” -பு.பி
தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் அது அவர் வாழ்வையே முடித்து வைத்தது.வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களையும் தோல்வியை மட்டுமே புதுமைப்பித்தன் சந்தித்தார் ஆனால் இலக்கியத்தில் அவர் ஒரு ஜாம்பவான் அன்று ஓரளவுக்கு அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் அது போதுமான அளவுக்கு இல்லை.
தன் நண்பனுக்கு புதுமைப்பித்தன் சொல்லும் அறிவுரை...
'சிதம்பரம், இலக்கிய ஆசை உனக்கு உண்டு. இருக்கட்டும். உன் முழுநேர உழைப்பையும் அதற்காகச் செலவழித்து விடாதே. இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு விடாதே. அது உன்னைக் கொன்றுவிடும். இலக்கியம் வறுமையைத்தான் கொடுக்கும். அதைப் பொழுது போக்காகவே வைத்துக்கொள் '' - பு .பி
டி எஸ் . சொக்கலிங்கம் உதைவியால் புதுமைப்பித்தன் "தினமணி"யில் உதவி ஆசிரியராக சேர்ந்தார் அந்த காலகட்டம் மட்டுமே அவர் சற்று பணம் சிக்கல் இல்லாமல் இருந்தார் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சொக்கலிங்கம் தினமணி விட்டு வெளியேறும்போது புதுமைப்பித்தனும் அவர் ஆசானை பின்பற்றி வெளியேறினார்.
பர்வதகுமிரி என்ற புருலெக்ஷன் கம்பனி தொடங்கினார் புனா சென்றார் . காந்தியைக் கொன்று அழியா கரையை பூசிக்கொண்ட அந்த நகரம் புதுமைப்பித்தனுக்கு ஜயரோகம் (TB ) தந்தது. நடக்க தடியை ஊனிகொண்டு ரயிலில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார் .
இறப்பதற்கு முந்தைய நாள் கூட இலக்கியம் எவ்வாறு இருக்கிறது என்று நண்பன் இடம் கேட்பார் நான் ஒருவன் செத்துப் போய்விட்டால் இலக்கியம் செத்துப் போய் விடப் போகிறதா என்ன என்று புலம்புவார்...
யாரார்இடமோ உதவி கேட்டார் , நிரைய எழுதினார் எந்த விதமான முன்னேற்றமும் அவர் வாழ்வில் இல்லை தமிழும் தமிழர்களும் அவரை கைவிட்டார்கள் கடைசியில் தமிழின் மகத்தான கலைஞன் அனாதையாக செத்தான். (30-6-1948).
"..வயிற்றுப்பசியும் வாழ்க்கை லட்சியமும், எந்த இடத்திலிருந்தாலும் முரண்பட்ட தத்துவங்களாகதான் இன்றைய சமுதாயத்தில் இருக்க முடியும்."
வறுமையே வாழ்க்கை என இருந்தும் தான் யார் என என்றும் மறக்கவில்லை புதுமைப்பித்தன். அவருடைய வாழ்நாளில் அவரை தவிர எவருக்கும் தெரியவில்லை அவரது எழுத்தின் அருமை. இப்படி எவ்வித சன்மானமும் பெறாமல் திளைத்த மனிதனை பற்றி படிக்க பல விதங்களில் நம்பிக்கை பிறக்கிறது. விநோதமானவர் மற்றும் அலாதியானவர்!
புதுமைப்பித்தன் வரலாறு காலச்சுவடு பதிப்பகம் தொ.மு.சி. ரகுநாதன் பதிப்பாசிரியர்: ஆ. இரா. வேங்கடாசலபதி
' புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ' இப்படியான இரண்டு வரிகள் கொண்டு தொடங்குகிறார் ரகுநாதன்.
கிட்டதட்ட இருபத்திமூன்று பகுதிகளாக பிரித்து எழுதியிருப்பதில், ஒரு நாவலை படிப்பது போன்ற உயிரோட்டத்தை உணர முடிந்தது. சில அத்தியாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நம்மோடு பொருத்தி கொள்ள முடிகிறது. எழுத முயலும், எழுதிக் கொண்டிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டாயமான புத்தகமாக இதனை கூறுவேன்.
புதுமைப்பித்தன் என்ற பிம்பத்தை விட்டு கூட ஒருவர் அக்காலத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளன் ஒருவனாக எண்ணி இதனை முழுவீச்சில் படிக்கமுடியும். ஏனெனில், புதுமைப்பித்தன் யதார்த்தத்தை கண்ணாடி துகள்கள் சிதறிய போதும் எப்படி பிம்பங்களை காட்டுமோ அப்படியே தான் இவரும் இருந்து வந்திருக்கிறார். இதோடு, புதுமைப்பித்தனின் பிறப்பு முதல் இறப்பு வரை மிக தெளிவாக பதிவாகியிருப்பதை விட ' இலக்கியம் நயம் ' என்பது இங்கே பூத்துக் குலுங்குகிறது. குறிப்பாக, காந்தியை கோட்ஷே புனாவில் சுட்ட சம்பவம் புதுமைப்பித்தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில், காந்தியை சுட்ட சம்பவம் உளவியல் ரீதியாக அனைத்து மக்களையும் பாதித்திருக்கும், புதுமைப்பித்தனுக்கும். இதுவே, உடலளவிலும் புதுமைப்பித்தனுக்கு பெரிய சோகம் என ஒன்று ஆரம்பித்த காலம்.
ஏனென்று தெரியவில்லை, காலங்காலமாக எழுத்தாளர்களுக்கும் காசநோய்க்கும்(TB) அப்படி ஒரு காதல், அப்படி ஒரு பிணைப்பு இருந்து கொண்டே தான் வருகிறது. ஆல்பட் காம்யூ, செகாவ், பக்கோவ்ஸ்கி என நிறை எழுத்தாளர்கள் இதனால் பாதிப்பை அமைந்திருக்கிறார்கள். முக்கிய காரணமாக, புகைப் பழக்கத்தை சொல்ல வேண்டும். புதுமைப்பித்தனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. புதுமைப்பித்தனும் புகை பழக்கத்திற்கு நண்பர் போல தான. கூடவே புகையை விட இவருக்கு வெற்றிலை போடுவது ஒரு தொடரும் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. காலையில் எழுந்ததும் காலை வேலைகளை முடித்த பின்னர் ஒரு வெற்றிலை போட்ட பிறகு தான் அன்றைய தினத்திற்கான சாப்பட்டையே நெருங்குவாராம். இப்படி சின்னச் சின்ன குறித்து கூறியிருப்பதற்கு முக்கிய காரணமாக நான் கூறுவதி இவை அனைத்தும் இவருடைய கதையில் வரும் கதாபாத்திரங்களின் வழியே உணரமுடிகிறது. ரகுநாதன், இவரின் நிறைய சிறுகதைகளுக்கு பின்னர் நிகழ்ந்த்தாக இப்படி சின்ன விஷயங்கள் மற்றும் நீண்ட நிகழ்வுகளை முன் வைப்பது படிக்கும் நம்க்கு ஒரு Shape கிடைப்பதாக சொல்லத் தோன்றுகிறது.
' புதுமைப்பித்தனும், அக்கால பத்திரிக்கைகளும் ' என்ற ஒரு ஆய்வு நூல் எழுதலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு பத்திரிகைக்கு தன்னுடைய முழு பலத்தை கொடுத்திருக்கிறார். இவருக்கு " சோதனை " என ஒரு பத்திரிகை ஆரம்பிக்க ஆசை ஆனால் அதுவும் நிகழாமல் சோதனையில் தான் முடிந்திருக்கிறது. இவர் தினமணி, மணிக்கொடி என நிறைய பத்திரிகையில் வேலை செய்திருக்கிறார், ஆனால் எதிலும் நிலைத்து நிற்கவில்லை. இதற்கு காரணம், பத்திரிகை சுதந்திரத்திற்காக அல்ல, தன்னுடைய சுதந்திரத்திற்காக விலகி விட்டார்.
' பட்டால் தான் தெரியும், பட்டு கெட்டால் தான் புரியும் ' என்பவை புதுமைப்பித்தனின் சினிமா பயணத்தின் மூலம் நன்கு தெளிவுபடும். புதுமைப்பித்தனுக்கு எழுத்துக்கள் மட்டுமே ஆகாரம், வாழ்க்கை என சொன்னாலும் கூட பணவசதி என்பது இவருக்கு கைக்கு எட்டா கனியாகத் வாழ்நாள் முழுதும் இருந்து வந்திருக்கிறது. இவர் பணம் கொஞ்சம் தேவைக் கருதி சினிமாவில் வசனம், கதை எழுத போகிறேன் என சினிமாப் பயணத்தை தொடர்ந்தார். அங்கும், விதியா இல்லை சதியா எதுவென தெரியவில்லை ஆனால் இவரை விட்டபாடில்லை. இதிலும் வீழ்ச்சியை காண, சொந்தமாக படநிறுவனம் ஆரம்பித்தார். அதுவும், சோகத்தில் தான் முடிந்தது. அப்போது தான், நமக்கு வருவதை மட்டும் செய்தால் போதுமானதே என புரிந்துக் கொண்டார். புதுமைப்பித்தனுக்கு பணப் பற்றாக்குறை இருந்தாலும் இவர் மற்றவர்களை உபசரிப்பதில் வல்லவர். வீடு தேடி வரும் எழுத்தாளர்களை, வாசகர்களை சாப்பிட வைத்து விட்டு தான் அனுப்புவாராம். நிறைய தருணங்களில், இவர் பட்டினி கிடந்து தெரியாதவர்களுக்கு கூட ஓடிச்சென்று உதவியிருக்கிறார்.
புதுமைப்பித்தனை பற்றி சுந்தர ராமசாமி தனது கட்டுரை ஒன்றில் ' எந்த அரசியல் நிலைப்பாடு, கோட்பாடு என எதற்குள்ளும் தன்னை இவர் அடையாளப்படுத்தாமல் தீவிர இலக்கியத்தில் திளைத்து வாழ்ந்தார் ' என கூறியுள்ளார். இது ஏனோ உண்மை தான், ரகுநாதன் இவரின் சிறுகதைகளை ஆராய்ந்து புதுமைப்பித்தனின் மனநிலை மாற்றங்களை பற்றி இவரின் சிறுகதையை வைத்தே பேசியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில், ஒரு தத்துவவாதி, இலக்கியவாதி என நிறைய மனிதர்கள் கடைசி காலகட்டத்தில் மாறுதல்களை சந்தித்து இருப்பதால் மாறியிருப்பார்கள். இவரின் சிறுகதைகளை வைத்து, ' Socialism அரம்பித்து இறுதி காலத்தில் Existentialism ' என தனியுடைமை கோட்பாட்டை நோக்கி வந்திருப்பது ஒரு எழுத்தாளனுக்கு நிகழ்ந்த அவலம் என கூறினாலும், சமூகத்துக்கு அது கேடு என ரகுநாதன் குறிப்பிடுகிறார்.
இவரை நாம் சிறுகதை ஆசிரியராக தான் தெரிந்திருப்போம். இதிலே, இவரின் பல திறன்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். புதுமைப்பித்தன் கடிதங்கள், பாடல் வரிகள், கவிதைகள் என நிறைய நமக்கு முன்னால் வைக்கப் பட்டிருக்கிறது. இவரின் வரிகள்,
வட்ட முலை பின்னர் வசமிழந்த காமத்தால் நீலமணி மாடத்து நெடியதொரு சாளரத்தைத் தொட்டு தடவி வந்து தோயம் நிலாப் பிழம்பை எட்டி, எடுத்து இடை சுற்றி, சேலையென ஒல்கி நடப்பதாய் உவமை சொல்.,
இது, புதுமைப்பித்தன் ' புதுக்கவிதை முறை ' என அன்றைய காலத்தில் இவரின் கவிதைகள் பெயர் வாங்கியிருந்தது.
தனிப்பட்ட முறையில் இன்னும் அதிகமாய் இருந்திருக்கலாம் என நினைப்பது புதுமைப்பித்தன் அவரது மனைவிக்கு தான் நோய்வாய்ப்பட்ட காலத்திலும், மற்ற நேரங்களில் எழுதிய கடிதங்களே. ஆஹா!! அடடா!! என சொல்லத் தோன்றுகிறது. கடிதங்களில் குழந்தை தனம், சிறு சேட்டைகள், சொஞ்சுவது போலிருக்கும் வசை வார்த்தைகள் என படிக்கும் போதே மனம் காதல் பாஷைகளை உணர்ந்து எழுத தூண்டி விடுகிறது.
புதுமைப்பித்தன் என்ற ஒரு ஆளுமையை பற்றி படிக்க நேர்ந்தது, அதுவும் இச்சமயத்தில் படித்தது ஆழ்மனதை தொட்டுப் பார்த்தது.
" எழுத்துக்கள் பிறப்பது அவலங்களில் தானே என முடிக்க நேர்ந்தாலும், இப்படி ஒருவர் எழுத்துக்கள் வைத்து போரிட்டு, பட்டினியில் சமூக திண்டாட்டங்களை முன் வைத்திருப்பது ' உந்துதல் ' கொடுக்கிறது !! "
ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கையை வரலாற்றுப் புத்தகம் என்று நான் இதுவரை எதையும் படித்ததில்லை, தொ.மு.சி ரகுநாதன் எழுதிய "புதுமைப்பித்தன் வரலாறு" நூல் தான் இந்த வகைமையில்(Genre) நான் வாசித்த முதல் நூல். திரு.ஆ இரா வேங்கடாசலபதியின் “In those days there was no Coffee” என்ற நூலின் மூலம் புதுமைப்பித்தன் ஒரு இலக்கிய ஆளுமையாக எனக்கு அறிமுகமானார், அதற்கு முன்பு வரை 12வகுப்பு துணைப்பாடத்தின் ஆசிரியராக தான் தெரியும்.
சலிப்புத்தட்டும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் போல் அல்லாமல், வழக்கத்திற்கு மாறான சுவாரஸ்யத்தையும், இலக்கிய சுவையையும் இந்நூல் கொண்டுள்ளது. புத்தகத்தை கிழே வைக்க முடியாமல் 100 பக்கங்களை தூக்கம் தொலைத்து ஒரு இரவில் படித்து முடித்தேன் என்றால் இதன் எழுத்து நடையை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இந்நூலில் "அவனுக்கே பிச்சனானேன்" என்ற தலைப்புடன் முன்னுரை ஒன்றை திரு.சலபதி எழுதி இருக்கிறார், இருபது பக்க கட்டுரையில் இத்தனை தகவலை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இந்நூலை விரைந்து படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்திய கட்டுரை இது. கல்கியின் வாழ்க்கை வரலாறும் புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறும் எழுதப்பட்ட வரலாற்று பின்னணியை வைத்தே அந்த காலத்து தமிழ் இலக்கிய சூழல் பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது.
1951இல் வெளிவந்த இந்த புத்தகத்தை, 2022இல் இலக்கியத்தை மீது பெரிய அளவில் பற்று கொள்ளாத ஒரு தமிழ் வாசகன் படித்து, புதுமைப்பித்தன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்கிறான் என்றால் இந்நூலின் சமகால பொருத்தப்பாட்டை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
"புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ளள எழுத்தாளருக்கு ஒரு எச்சரிக்கை." என்ற அபாய எச்சரிக்கையுடன் தான் நூலை தொடங்குகிறார், தொ.மு.சி. ரகுநாதன். புதுமைப்பித்தனோடு நெருங்கி பழகியவர் என்பதால் இயல்பாகவே புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறு அவரது நினைவில் பதிந்துள்ளது, தரவுகளை திரட்டி,அதில் இலக்கிய சுவை கலந்து, தமிழ் வாசகர்களுக்கு இந்நூலை படைத்துள்ளார் ரகுநாதன்.
"புதுமைப்பித்தன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு தனி ஜாதி: தனி ஜோதி... " என்ற வரியை வைத்து தமிழ் எழுத்துலகில் அவரின் முன்னோடி நடவடிக்கைகளையும் தனித்தன்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. பல இடங்களில் புதுமைப்பித்தனின் சிறுக்கதைகளை மேற்கோள்காட்டிக்கொண்டே செல்கிறார் ரகுநாதன், அவரின் வாழ்க்கை நிகழ்வுகள் எல்லாம் அவர்படைத்த சிறுகதைகளில் பிரதிபலித்திருப்பதை நுணுக்கமாக பதிவுசெய்துள்ளார். இந்நூலோடு சேர்த்து அவ்வப்போது அந்தச் சிறுகதைகளையும் படித்துக்கொண்டேன். பேரின்பம் .
புதுமைப்பித்தனின் இறுதிநாட்களைப் பற்றி படிக்கும்போது ஒரு பக்கம் வருத்தமும் மறுபக்கம் பிரமிப்பும் உண்டாகிறது. "சோதனை" என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கவேண்டும் என்ற அவரின் ஆசை கூட நிராசையாகி போனது, சோதனை நிறைந்த சோக நிகழ்வு. புதுமைப்பித்தனின் தைரியம் கலந்த அசட்டுத்தனங்கள் அவர் வாழ்க்கையின் அர்த்தமாக மாறிப்போனாலும் அவை எல்லாம் சாகசங்கள் என்ற பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு வீரியமுடையவை.
அவரை இறப்பு கூட சோதனையான ஒன்று தான், ஆனால் அவர் அதை எதிகொண்ட விதம் தான் புதுமைப்பித்தனின் குணம். புதுமைப்பித்தனின் மறைவை ரகுநாதன் "30 . 06 .1948 அன்றிரவுக்கு பின் உலகுக்கெல்லாம் விடிந்தது ஆனால் புதுமைப்பித்தனுக்கு விடியவே இல்லை" என்று பதிவு செய்கிறார். புதுமைப்பித்தனது மனைவி கமலாம்பாள் " எழுதிஎழுதிக் கையும் வீங்கிற்றே உயிரும் கொடுத்தாயே" என்று ஆதங்கம் கலந்த வருத்தத்துடனே பதிவுசெய்கிறார்.
விருத்தாச்சலம், என்ற ஊர் பெயரை இயற்பெயராக கொண்டவர் பின்னாட்களில் "புதுமைப்பித்த"னாகி, அப்பெயரை தமிழ் சிறுகதை உலகின் தனித்துவமிக்க அடையாளமாக மாற்றி கொண்டதில் தெரிகிறது அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுவடு.
புதுமைப்பித்தன் பற்றிய ஆழ அகலங்களை இந்நூல் பதிவுசெய்துள்ளது என்றால் அது மிகையல்ல. இது தவிர்த்து நூலின் பின்னிணைப்பாக “புதுமைப்பித்தன்: வாழ்வும் எழுதும்” என்ற தலைப்பில் சுந்தர ராமசாமிக்கு ரகுநாதன் அளித்த பேட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
ஒரு நிறைவான வாசிப்பனுபவத்தை கொடுப்பதில் அந்த பேட்டியும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. நூலின் இறுதியில் புதுமைப்பித்தனின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது, அவரின் குடும்பம், இறுதி நாட்களில் அவர் தங்கி இருந்த வீடு ஆகியவை எல்லாம் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
என்னை பொறுத்தவரை ஒரு படைப்பின் நோக்கம் என்பது அதன் கருப்பொருள் குறித்தான தேடலை வாசகருக்கு கடத்த வேண்டும், அதனடிப்படையில் பார்த்தால் இந்நூல் அதில் வெற்றி கண்டுள்ளது என்பேன்.
புதுமைப்பித்தன் படைப்புகள் மீதான ஆர்வத்தை உண்டாக்கியதால், “புதுமைப்பித்தன் வரலாறு” என்ற தலைப்புக்கு இந்நூல் நியாயம் செய்துள்ளது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசியுங்கள், புதுமைப்பித்தனின் உலகத்திற்கு தொ.மு.சி. ரகுநாதன் உங்களை கை பிடித்து அழைத்து செல்வார்.
Raghunathan's "Pudhumaipithan's Biography" attempts to capture the man behind the stories, whose literary brilliance and social relevance have both enchanted and haunted Tamil readers for generations together. In a simple language and quick-pace, it linearly takes us through different life phases of this uncanny genius - his school days, his stints with magazines like Manikkodi, Thinamani and Thinasari, his failed attempt at film writing, his health, his relations with his father, his wife and his literary world. While minute details about the man's personality makes it interesting, a broader account about the times and the world in which he lived in would have made it profound. The appendix section containing the interview of the author by Su. Ra. fills the gaps that a reader may find in the book. Yet, the mystery of how Pudhumaipithan's creative genius flowed out of his deeply troubled soul will always remain!
புதுமைப்பித்தன் கதைகளின் பிரம்மாண்டத்தை அறிந்தவர்கள், அவற்றை உருவாக்கிய புதுமைபித்தன் வரலாற்றை நிச்சயம் நேசிப்பர். சாகும் வரை வறுமையைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த ஒரு எழுத்தாளனின் வரலாறு. ஒரு நாவலை வாசிப்பது போன்ற விறுவிறுப்பு. தமிழில் ஒரு நல்ல புத்தகம் வாசித்த நிறைவு.