Dr. Giriraj Kishore was born on 8th July, 1937 at Muzaffarnager in the Indian state of Uttar Pradesh. He is a well-known Indian novelist, apart from being an accomplished short story writer, playwright and critic.
He was awarded the Sahitya Academy award in 1992 for his novel ‘Dhai ghar’. His novel ‘Pahla Girmitiya (The First Indentured Labour)’ chronicles Gandhijee’s struggle in South Africa.
He was awarded the Padma Shree by the Indian Government on 23rd March 2007 for his contribution to literature and education.
Some of his published works are as follows: Story collection-neem ke phool, chaar moti beaab, paperweight, Saher-der-saher etc Plays-Narmegh, Praja hi rehne do Novels-Pehla girmitiya, Dhai ghar, Chidiyaghar etc
எதிரும் புதிருமான இருவேறுபட்ட நிறங்களாலானவை சதுரங்கத்தின் கட்டங்கள். அதன் காய்களும் அதே தன்மையிலானவை என்றாலும் கூட, அதன் கட்டங்களைப் போல, அவை ஒரே தன்மையுடையன அல்ல. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான விதிமுறைகளும் வழிமுறைகளும் உண்டு. அதன்படி சென்றால் தான் வெற்றியையோ தோல்வியையோ அவை சென்றடைய முடியும்.
அதே போலத்தான் இவ்வுலகின் மனிதர்களும் அவர்தம் வாழ்வும். மனிதகுலம் ஒன்று தான் என்றாலும், அவர்களுடைய வாழ்வு முறைகள் அனைத்தும் ஒன்று போல இருப்பதில்லை என்பது தான் என்றுமே நிதர்சனம்.
பலவிதமான வாழ்க்கை முறைகளில், நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறைக்கு என்று ஒரு பிரபலத்துவம் உண்டு. அரசர் காலத்தில் இராஜபுத்திரர்களாக இருந்து வீரத்தின் மூலம் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டவர்கள், அவர்களே பின்னாளில் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஜமீன் வம்சத்தினராக அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக நின்று, அவர்களைத் தூண்களாகத் தாங்கியவர்கள்… என்று எப்போதும் ஒருவகை செல்வாக்குடனேயே காலங்களைக் கடந்து வந்தனர். அவர்கள் வீழ்ச்சியடையும் காலத்தையும் கூட அப்படி ஒரு செல்வாக்குடனேயே தான் கடந்தனர். அதனால் தானோ என்னவோ, வாழ்க்கையெனும் சதுரங்கத்தில் இவர்களது நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறையை, சதுரங்க விளையாட்டின் குதிரைகளுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர்…
சதுரங்கக் குதிரைகளுக்கென்று(Knight) விதிமுறைகள் இருந்தாலும், அவை செல்ல வேண்டிய பாதைகளிலும் கோணங்களிலும் சிலக் கட்டுப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. நேராக, குறுக்காக, கிடைமட்டமாக என எத்திசையிலும் செல்லலாம். ஆனால், அதற்குரிய வடிவத்தில் மட்டுமே தான் அவைகள் செல்ல முடியும். அதே போல் தான், நிலப்பிரபுத்துவ வாழ்விற்கு ஆட்பட்ட அல்லது உட்பட்ட மனிதர்களும் என்பதை மிகவும் அழகாகவும், ஆழமாகவும், அழுத்தமாகவும், சில இடங்களில் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகவும், அன்றைய களநிலையை மிக யதார்த்தமாகக் காட்டுகிறது.. இப்புதினம்.
நிலப்பிரபுத்துவ வாழ்வின் மேன்மைகள், கட்டுப்பாடுகள், நெளிவு சுளிவுகள், தடுமாற்றங்கள், குற்றங்கள், குறைகள், இயலாமைகள், பெருமைகள் என எல்லாவற்றையும் எவ்வித சமரசங்களுமின்றி அப்படியப்படியே காட்சிப்படுத்துகிறது.
ஹரிராய் – பாஸ்கர் ராய் – ரகுவர் ராய்…. என்ற இந்த மூவரே இக்கதையின் மையமாக வருகின்றனர். உதாரணமாக, ஒரு ஆற்றின் மீது வீற்றிருக்கும் பாலமாக பாஸ்கர் ராய் இருக்கிறாரென்றால், அதன் ஒரு கரையாக ஹரி ராயும் மற்றொரு கரையாக ரகுவர் ராயும்… பாலத்தின் மேல் நடமாடும் ஏனையோர்கள் மற்ற கதாபாத்திரங்களுமாக கதை விரிகிறது.
கதை நிகழும் காலக்கட்டத்தின் படி… கடந்த கால நிலப்பிரபுத்துவ வாழ்வின் மொத்தமாக ஹரிராயும்… நிகழ்காலத்தின் வெற்று நிழலாக பாஸ்கர் ராயும்.. எதிர்வரும் சுதந்திர காலத்தின் நம்பிக்கையாக ரகுவர் ராயும்.. இக்கதையில் உலவுகின்றனர்.
பாஸ்கர் ராயின் பின் நோக்கிய நினைவுகளின் தடத்தில் கதை பயணிக்கிறது.. அவரது இறுதி காலத்திலிருந்து கதை ஆரம்பித்தாலும், அவருக்கு முன்னும் பின்னுமாக சேர்த்து மூன்று தலைமுறைக் கதைகளும் காலங்களும் உலா வருகிறது.
ஹரிராய்… ராய் வம்சத்தின் பெரியவர். அவருக்கு இளைய சகோதரர்கள் இருவர்.. மூவரும் திருமணம் முடித்து ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக இணைந்து வசிக்கின்றனர்.
முதல் சகோதரர், பல்வேறு குற்றங்களை எவ்வித உறுத்தலுமில்லாமல் அடுத்தடுத்து செய்து கொண்டேயிருக்கிறார்… அதற்காக அண்ணனையும் எதிர்த்து நிற்கிறார். அடுத்தவர், காந்திஜியின் அகிம்சையால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள துடிக்கிறார். இவர்களது இத்தகைய போக்குகள் ஹரிராய்க்கு சற்றும் பொறுக்க முடியாதது. ஏனெனில், ஹரிராய் ஆங்கிலேய அரசின் விசுவாசி. அவர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். நேர்மையானவர். உறவுகளுக்கு உண்மையானவர். சொல் தவறாதவர். தன்னுடைய ராய் வம்சத்தின் கௌரவத்திற்கு இழுக்கென்று நினைக்கும் எதையும் மனதால் கூட எண்ணத் தலைப்படாதவர். எனவே, தனது ஆளுமையான அரவணைப்பினால் அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.
அது பிடிக்காத முதலாமவர், ஆரம்பத்திலேயே அவரிடமிருந்து விலகி தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொள்கிறார். இளையவரோ, அண்ணனின் ஆளுமையின் முன்னால் தனித்து எந்த முடிவும் எடுக்க முடியாத இயலாமையால், குடும்ப வாழ்வில் புதையுண்டு போகிறார்… என்றாலும், ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு.. அதே அண்ணனின் ஆளுமையை எதிர்த்து அதன் பால் மூண்ட வெறுப்பால் இளையவரும் அவரை விட்டு விலகிச் செல்கிறார்…
இறுதியில், ஹரிராய்க்கு மிஞ்சுவது… தனது ஒரே நம்பிக்கையாக அவர் நினைக்கும் அவரது பேரன், ரகுவர் ராய் மட்டுமே. அவரது மகன் பாஸ்கர் ராய் பற்றிய எவ்வித பெரிய அபிப்ராயமும் அவருக்கு இல்லை. ஏனெனில், பாஸ்கர் ராய் அவ்வளவாக படிப்பறிவில்லாதவர். எதிலும் ஒரு பொறுப்பு கிடையாது. சேரக்கூடாத இடங்களுக்கெல்லாம் சென்று சீரழிந்தவர். பரம்பரை பெருமை என்னும் வெட்டி செருக்கு மட்டுமே உடையவர். மொத்தத்தில், ஒரு உதவாக்கரை பையனாகவே இருக்கிறார். ஆனால், அவரது மகன் ரகுவர் ராய் அப்படியல்ல. அவன் அவனது தாத்தாவைப் போலவே தனித்துவம் மிக்கவனாக வளர்கிறான்.
ரகுவர் ராயின் கொள்கைகளும் சிந்தனைகளும்… ஹரி ராயின் தனித்துவத்துடனும் அவரது குலப்பெருமையுடனும் எப்போதும் முரண்பட்டபடியே செல்கிறது. இருப்பினும் இருவரும் ஒருவரையொருவர் பற்றியபடியே அவர்களது போராட்டத்தை தொடர்கின்றனர். ராய் வம்சத்தின் அழிவும் ஹரி ராயின் இறப்பும் ஒருங்கே நிகழ்கிறது.
ஒருவகையில் பார்த்தால், ஹரிராயின் வீழ்ச்சி ஒரு காலக்கட்டத்தின் வீழ்ச்சிக்கான குறியீடாகக் காட்டப்படுகிறது. மெல்ல மெல்ல அவரது கௌரவம், செல்வாக்கு, குடும்பம் என ஒவ்வொன்றாக சிதையும் போது அவரது காலத்தின் வீழ்ச்சியும் அவ்வாறே நிகழ்கிறது..
ராய் குடும்பத்தின் வேலைக்காரனான பவானி, அவர்களுடைய விசுவாசியான ரஹமத்துல்லா, அழிவின் பாதையில் சென்றாலும் மானிட வாழ்வின் மகத்துவம் உணர்த்தும் கிஷன்பாபு…. என சிறு சிறு கதாபாத்திரங்கள் நாவலின் தன்மைக்கு மேலும் மெருகூட்டுவதோடு... நமது சிந்தனைகளையும் ஆக்ரமிக்கின்றன. இவர்களிடமெல்லாம் மிகுந்த தயவோடும் பண்போடும் நடந்து கொள்ளும் நிலையில் தான், ஹரி ராயின் பாத்திரம் மிகக் கச்சிதமாக நமக்குள் உருக்கொள்கிறது.
அவர் எல்லோரிடமும் நியாயமாக நடந்து கொள்கிறார்.. ஆனால், சமமாக நடந்து கொள்வதில்லை. அது தான் தன்னைப் பொறுத்த அளவில் சரியான நிலையெனக் கொள்கிறார். அவரவருக்குரிய பெருமைகளும் சிறுமைகளும் எல்லோரிடமும் உண்டு. அதற்காக மனிதர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் சமம் என்பதில் உடன்பாடில்லாதவர். அவர் எப்போதும் தன்னை ஒரு பெருந்தன்மையுள்ள மனிதனாகவே நிலை நிறுத்துகிறார். ஆனால், எவ்வளவு பெரிய பெருந்தன்மையானாலும் அவரது ஜாதிக்குள்ளாகவே அவர் நின்று கொள்கிறார்… என்பது உறுத்தினாலும் கூட, அவரது மேன்மையான குணங்களால் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்.
குடியானவனின் வாயில் சிறுநீர் கழிக்கும் தண்டனை.. நிலப்பிரபுத்துவத்தின் உச்சபட்ச அதிகாரத்தின் கொடூரம்.. அதற்கு அவர்கள் பழிவாங்கும் விதம்… நிலப்பிரபுத்துவத்தின் அதே அதிகார வீழ்ச்சிக்கான குறியீடு…
ராய் வம்சத்தின் பெண்களின் நிலையை கவனித்தோமானால், மிகவும் இருளடைந்த வாழ்க்கை அவர்களுடையது.. ஆலமரத்தின் நிழலின் வளரும் செடிகளின் நிலையே அவர்களது நிலையும். ராய் என்ற பெரும் வம்சத்தின் மகள்களும், மருமகள்களும், ஏன் பேத்திகளும் கூட எள்ளளவும் மகிழ்ச்சியின் வார்த்தையைக் கூட அறியாதவர்களாக வெற்று வாழ்க்கை வாழ்ந்து மடிந்து போகிறார்கள்.. என்பதைக் காணும் போது, பெண்களின் வாழ்க்கை எக்காலத்திலும் ஏதேனும் ஒரு வகையில் போராட்டத்திற்கென்றே உருவாக்கப்பட்டது போலும்.. என்னும் ஆயாசத்தை நம்முள் ஏற்படுத்துகிறது…
ஆண்டான் – அடிமை சமூகத்தை வெறுக்கும் ரகுவர் ராய்… சுதந்திர இந்தியாவின் சமதர்ம வாழ்வை மிகவும் விரும்புகிறான். அதற்கான காலம் கனிந்து வந்தாலும் கூட நடைமுறை வாழ்க்கை என்பது, அத்தனை விரைவாக மாறி விடாது என்பதை உணரும் போது, அவன் மனம் வாழ்வின் மீது மிகுந்த ஏமாற்றம் கொள்கிறது. தனது சிந்தனைகளையும் கொள்கைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறான்.
இரவு முடிந்து மறுநாள் காலை விடிவது போல.. எவ்வித உறுத்தலும் துருத்தலுமின்றி அவ்வளவு இயல்பாக ஒரு காலக்கட்டத்திலிருந்து மற்றொரு காலக்கட்டத்திற்கு கதை பயணிக்கிறது… என்னும் உணர்வை வாசகருக்குள் கடத்தி விடும் நேர்த்தியில் சிறக்கிறது, ஆசிரியரின் எளிமையான மொழியின் நடை..