பவாவின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதை தொகுப்பு நான் வாசிக்கும் நான்காவது சிறுகதை தொகுப்பு.
பவாவின் இரண்டு கட்டுரை தொகுப்புகளை வாசித்திருக்கிறேன் , அவை என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்புகள்.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுடைய முன்னுரை குறிப்பிடத்தக்கது, பவாவினுடைய இந்த கதை ஏன் தனித்துவமானது என்று வாசகர்களுக்கு விளக்கும் வண்ணம் அவர் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைகளின் பரிமாணத்தையும் பல்வேறு ஆளுமைகள் குறித்தும் சுருக்கமாக நம்மிடம் பகிர்கிறார். இதன் மூலம் என்னைப் போன்ற தொடக்க நிலை வாசகனுக்கு புதிய எழுத்தாளர்களின் அறிமுகமும் கிடைத்தது.
சம்பவங்களின் ஆதாரங்களைச் சுட்டி, அவை எழுப்பும் மணமூட்டத்தில் கதைகளை நடத்திச் செல்கின்ற, அதிகம் பேசாத, பேச்சில் நம்பிக்கை அற்ற, சொற்களை கஞ்சத்தனமாகச் செலவிடும் பொறுப்பு மிக்க கதையாளர் என்று பவாவை பற்றிய அவரது கணிப்பு மிக கச்சிதமாகப் பொருந்தும்.
முகம், வேறு வேறு மனிதர்கள், மண்டித்தெரு பரோட்டா சால்னா, சத்ரு, சிதைவு மற்றும் இந்தத் தொகுப்பின் தலைப்பான நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற கதைகள் என்னை மிகவும் ஈர்த்தது.
எனக்கு நிச்சய தார்த்தம் முடிந்தவுடன் அன்றைய நாட்களில் நானும் நான் மணமுடிக்க போகும் பெண்ணும் கைப்பேசியில் நிறைய விடயங்களைப் பற்றி கதைப்பதுண்டு, அப்போது பதிவுத் திருமணம் செய்வது பற்றி அவளது விருப்பத்தை என்னிடம் பகிர் ந்தது நினைவுக்கு வருகிறது. மண்டபத்தில் நடத்தும் திருமணச் செலவு மிச்சம், அதுமட்டுமல்லாது இதில் குறை அதில் குறை என்று குறை கூறும் நம்மவரிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால் அப்போதிருந்த சூழலில் நாங்கள் இதை முன்னெடுக்கவில்லை. முகம் என்ற கதை வாசிப்பு இந்த உரையாடலை நினைவுபடுத்தியது.
சொத்தின் பேரில் எங்கள் குடும்பத்திற்கு அலைச்சலைத் தந்த எங்கள் அம்மா வழி பெரியம்மா குடும்பத்தினரின் வீட்டிற்க்கு வெகு நாட்களுக்கு பின் நாங்கள் சென்றவுடன் ஐந்தே வயதுடைய பெரியம்மாவின் பேத்தி " இவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள் " என்று சொன்னது முகம் என்ற கதையை வாசிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தது. மழலை செல்வங்களுக்கே உரித்த பண்பு இது. மனிதனின் ஆற்றாமை, பண வேட்டையாடும் சூழலில் ஈரம் அற்று போவது என்ற கோர பற்கள் படாத தூய உள்ளம் கொண்ட ஆன்மாக்கள் மழலைகள் என்று பவா நுணுக்கமாக கண்டறிந்து நம்மிடம் அதை முகம் என்ற கதையின் வாயில் செலுத்துகிறார். புகைப்படத்துக்காக நாம் வெளிபடுத்தும் சிரிப்பு பெரும்பாலும் கள்ளச் சிரிப்பு தானே
என்னை ஒருவிதமான பயத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியது வேறு வேறு மனிதர்கள் என்ற கதை. அரசாங்க அதிகாரிகளின் ஒரு தவறு ஒரு குடும்பத்தை எந்த அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் என்று சொல்லும் கதை.
மண்டித் தெரு பரோட்டா சால்னா மீண்டுவரும் ஒரு தலைமுறையின் குமுறல்.
எல்லோருக்கும் பிடித்த சத்ரு, எனக்கும் பிடித்த கதை. வெக்கையின் தாக்கத்தினால் மனிதர்கள் கொலைவரை செய்யக்கூடும் என்று Evils: Inside Human Violence and cruelty என்னும் ஆங்கில புத்தகத்தில் வாசித்திருக்கிறேன், ஆனால் அதன் இன்னொரு முகமான ஈரத்தை நிறைத்து நம் மனது மகிழும் படி "சத்ரு" கதை அமைத்தது மகிழ்ச்சி அளித்தது.
நம்மை நாமாக ஏற்றுக்கொள்ளும் இடம் நம் வீடும் அதில் இருக்கும் நம் பெற்றோர்களே! திரும்பிப் பார்க்கையில் என்ற படைப்பில் தனது தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு போய் மிகுந்த பாலியல் துன்பத்துக்கு ஆளானதாக ஷாஜி பகிர்ந்துள்ளார். சிதைவு என்ற கதையில் பவா அது போல் எதிலும் சிக்காமலும் சிதையாமலும் வீட்டிற்க்கு சென்றது எனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது.
என் அப்பா " positive thinking" என்ற விழுமியத்தை நம்புபவர். இதற்கு சரியாக அர்த்தம் கற்பித்தது என் தமயன். ஒரு நேர்காணலுக்கு போகும் முன் நாம் இதில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் இருந்தால் தான் உரிய நேரத்திற்கு எழுந்து, நம்மை தயார் படுத்தி அதை எதிர் கொள்வோம் என்று அவன் சொன்னது நம்பும் படியாக இருந்தது.
நெய்வேலி டவுன்ஷிப் பில் 12ஆம் வகுப்பிற்கான முதல் பொதுத் தேர்வு எழுதுவதற்காக காலையில் நான் எனது மிதிவண்டியை கொட்டாரத்திலிருந்து எடுத்து செல்வதை கவனித்த எங்கள் வீட்டின் கீழ் குடியிருக்கும் அண்டை வீட்டுக்காரர் தனது வீட்டிலிருந்து வந்து என்னை நோக்கி " all the best" என்று எதிர்பார்க்காத நொடியில் சொன்னது எனக்கு உற்சாகத்தையும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஊட்டியது நினைவிருக்கிறது. இவர் இதை சொல்லவில்லை என்றால் நான் தேர்வை நன்றாக எதிர் கொள்ளமுடியாதா ? இதனால் தெரியாத கேள்விகளுக்கு கூட சட்டென பதில் தெரிந்து விடுமா? இதற்கு என்னிடம் அறிவியல் சார்ந்த எந்த விளக்கங்களும் இல்லை. ஆனால் என்னை அந்த சொற்கள் ஆசுவாசப் படுத்தியது. நம் சொற்களுக்கு இருக்கும் சக்தியை உணர்த்திய " நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" என்ற கதையை கடைசியாக தொகுத்தது சிறப்பு. Hope என்று வாழ்க்கையின் மேல் இருக்கும் நம்பிக்கையை உயிருடன் அடை காக்கச் செய்த பவா வின் இந்த கதை, தொகுப்பின் தலைப்பாக இருந்தது கச்சிதம்!
பெரும்பாலான வாசகர்களுக்கு பிடித்த வேட்டை மற்றும் பச்சை இருளனை உள்வாங்க எனக்கு மறு வாசிப்பு தேவை. காரணம் அந்த புறவெளியும் அதில் பிரயோக படுத்திய வார்த்தைகளும் எனக்கு புதிது.
இங்ஙனம்
அன்புக்குமரன்