இந்திய வரலாற்றில் ஒப்பரும் மேதைகளில் சிறந்த அரசன் கிருஷ்ணதேவராயர். தோல்வி என்பதையே அறிந்திராத தீரன். சமயத்துக்கும், கலைக்கும், அரசியல் பண்புக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இம்மாமன்னன் செய்துள்ள பணி மகத்தானது. அவனது புகழைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் அவனது சிறப்பைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவனைப்பற்றி வெளிநாட்டார்கள் வியந்து எழுதிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவனது உருவச்சிலையும் அவனது தேவியர் திருமலாம்பா, சின்னாதேவி ஆகியோர் சிலைகளும் திருப்பதி கோயிலில் இன்றும் உள்ளன. ஹம்பி, காளத்தி, காஞ்சிபுரம், தில்லை ஆகிய இடங்களில் அவன் கட்டிய கோபுரங்கள் அவனது வானளாவும் புகழை இயம்பி இன்றும் நம்மிடையே திகழ்கின்றன. அம்மாமன்னனது வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை உருவாக்கியுள்ளார் ரா. கி. ர. அவர்கள்.
ரங்கராஜன் 5-10-1927-இல் கும்பகோணத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமசுகிருதப் பண்டிதர். ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-இல் ‘சக்தி’ மாத இதழிலும் ‘காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-இல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய ‘ஜிங்லி’ என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம்,வினோத் ஆகியவை அவற்றுள் சில. 'நான் கிருஷ்ணதேவராயன்' இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்); ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல் (டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள். கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுட கதைகளும் டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார். இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைத்தொடர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார். இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.
வெகு நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம். கிண்டில் புத்தகமாக கிடைத்த உடன் வாங்கி வாசிக்க தொடங்கினேன்.
வழக்கமான வரலாற்று புதினங்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட டெம்ப்ளேட் வகையில் விழுந்து விடும். கதையின் நாயகன் மிக முக்கியமான அரசியல் பிரதானியாக இருப்பார். உதாரணாமாக அரசன், இளவரசன், படைத்தலைவன் என்பவர்களுள் இருப்பர். கதை நாயகியும் அதே போல் அரசி, இளவரசி, சிற்றரசனின் புதல்வி ஆகியோரில் ஒருவராக இருப்பர்.
கதை பெரும்பாலும் ஒரு போரை ஒட்டியோ அல்லது இரு நாடுகளுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டத்தை பற்றியோ இருக்கும். காதல் ரசம் ஆங்காங்கே பன்னீர் துளிகள் போல தூவப்படும். நாயகனின் எதிராளி பெரும் அறிவாளி போல் சித்தரிக்கப்பட்டு, பின்பு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல் அலங்கரிக்கப்படுவார்.
ஒரு சில விதிவிலக்குகளை தவிர, ஒரு வரலாற்று புதினத்தின் நடைமுறை வழக்கம் இதுவே.
நிறைய சரித்திர புதினங்களை படிக்கும் சந்தர்ப்பங்களில், சிற்சில சமயங்களில் தோன்றுவதுண்டு. அரசன், இளவரசன், படைத்தலைவர் இவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்கள் தானே. இவர்களுக்கும் சராசரி மனிதனுக்கு தோன்றும் ஆசைகள், கோபங்கள், இச்சாதாபங்கள் இருக்காதா என்று.நம் ஆசிரியர்கள் வரலாற்று புத்தகங்களில் எதில் கவனமாக இருக்கிறார்களோ இல்லையோ கதை நாயகன் எந்தவிதத்திலும் தவறு செய்யாதவனாக, மிகவும் நல்லவனாக, அறிவில் சிறந்தவனாக, சிறந்த முடிவுகள் எடுப்பவனாக சித்தரித்து இருப்பார்கள்.
இந்த இடத்தில தான் இப்புத்தகம் சற்றே வேறுபடுகிறது. கிருஷ்ணதேவராயரின் பார்வையில் அவரே கூறுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அரசன் தன்னுடைய காதலை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டியதாகி இருக்கிறது, என்னென்ன பரிதவிப்புகளை அவன் மேற்கொள்கிறான், எதையெல்லாம் மக்களுக்காக விட்டு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது, சமுதாயத்தில் நிலவும் சில கொடிய பழக்க வழக்கங்களை சீர்திருத்த நினைத்தாலும் சமுதாயமே அதற்கு தடையாக இருப்பது என்று பல விஷயங்கள் ரசிக்கும் படியாக இருக்கின்றன. ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது போல் இருக்கிறது.
கிட்டத்தட்ட அனைத்து வரலாற்று நாவல்களிலும், வில்லன் மொக்கையாகவே இருப்பதனால், ஒரு கட்டத்தில் எப்பொழுது முடியும் என்று தோன்றி விடும். இந்த புத்தகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
அன்றைய காலகட்டத்தில் பின்படுத்தப்பட்ட சில பழக்க வழக்கங்களாக புத்தகத்தில் வருபவை என்னை மிகவும் திடுக்கிட செய்தன.
1. உழவு அறுவடை சிறப்பாக இருந்தால் கை விரல்களை வெட்டி தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்வது. 2. உடன் கட்டை 200 ஆண்டுகள் முன்பு வரை கூட நடைமுறையில் இருந்திருந்தாலும், கணவன் பிணத்துடன் மனைவியை உயிருடன் குழியில் தள்ளி மூடி அதன் மேல் பெரிய கல்லை வைத்து வருவது. படிக்கும் பொழுதே மிகவும் அருவருப்பாகவும் சக மனிதர்கள் மேல் வெறுப்பாகவும் இருந்தது. 3. இன்னும் ஒரு படி மேலே பொய், கணவன் உயிர் விட்ட பின், மனைவி முதல் சில நாட்கள் வழக்கமான உணவும், பிறகு சிறிது நாட்கள் திரவ உணவும், பிறகு சுடுநீர் அருந்தியும், பிறகு எதுவும் சாப்பிடாமல் உயிர் விட வேண்டுமாம். 4. கடன் வாங்கியவன் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என்றால் கடன் கொடுத்தவன் கடன் வாங்கியவனை ஒரு சிறு வட்டத்தை வரைந்து அவனை அங்கேயே நிற்கும் படி செய்யலாம். சோறு தண்ணீர் இல்லமால்.
வழக்கமான டெம்ப்ளேட் இல்லமால் சற்றே வித்தியாசமாக உள்ளதால் நன்றாகவே இருக்கிறது.