செகாவ்வின் கதைகள் நிதர்சன உலகைப் பிரதிபலிப்பவை. இவரது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனமோ, கிண்டலோ இவரது எழுத்துக்களில் இருக்காது. கருணை நிறைந்த கதாபாத்திரங்கள், இறந்த குழந்தையை வீட்டுக்குச் சுமந்து செல்லும் பெண்ணிடம் கனிவாகப் பேசும் முதியவர் போன்ற கதாபாத்திரங்கள் இவர் கதைகளில் ஏராளம். ரோமின் மியூசியம் புகழ்பெற்றது. செகாவ் மியூசியத்திற்குப் போகவில்லை, விபச்சார விடுதியைப் பார்வையிட்டார். உயிரற்ற பொருட்களைப் பார்த்து வியப்பதை விட, ரத்தமும் சதையுமான மனிதர்கள் செகாவ்வை கவர்ந்தார்கள். அதனால் தான் அந்த கதாபாத்திரங்களுக்கு இன்றும் உயிர்ப்பு இருக்கிறது.
செகாவ் புதிதாக சொல்வதில்லை, எது ஒன்றையும் அழுத்தியோ வாசகனின் கவனம் பெற எந்த சீர்தூக்கலும் துளியும் செய்யவில்லை. அவர் நடப்பவற்றை நடந்தவண்ணம் சொல்கிறார், வசூல் ராஜா படத்தின் டயலாக் தான் நியாபகத்திற்கு வருகிறது "நீ என்ன அடிக்கல எதுவும் பண்ணல ஆன உயிர மட்டும் எடுத்துட்டியேடா.." செகாவ் எழுத்துக்கள் வெளிப்படையாக ஒன்றுமே செய்யவில்லை ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் அடங்காத ஒளியை எரிய விட்டு விடுகிறது.