கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் அமெரிக்கர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தஅசாதரணமான நேரத்தில் ஃபிளாரிடா வாசியான அவனுடைய நண்பியும்,சக தெருவாசியுமான ஜெஸி மர்மமான முறையில் காணாமல் போகிறாள்.அந்த மர்மங்களை விளங்கிக் கொள்ள முயன்ற அவனுடைய வாழ்க்கையிலும் எவ்வளவோ நடந்துவிடுகிறது. அதையெல்லாம் தாண்டி அவிழ்க்கப்படாத மர்மங்களை அவன் அவிழ்த்தானா?காணாமல் போன ஜெஸி மறுபடியும் கிடைத்தாளா? என்பதே ஜெஸி (எ)ன்கிற ஜெஸிகா கிங் நாவலின் கதை.
மார்வெல் யூனிவர்ஸ், விக்ரம் லோகிவெர்ஸ் போன்று ஆரூர் பாஸ்கர் யூனிவர்ஸ் என்று ஒன்றில் நுழைந்ததாகவே தோன்றியது, அவரது முந்தைய நாவலான வனநாயகனில் கதாநாயகனின் காதலியாக வரும் ப்ரியாவின் பெயரே ஜெசி (எ) ஜெசிக்கா கிங் நாவலில் கதாநாயகனின் மகளின் பெயர், வனநாயகனில் பத்மாவை திருமணம் முடித்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு நாவல் நிறைவு பெரும், ஆனால் பத்மாவை மணந்துக்கொள்ளவில்லை என்று கதையின் ஆரம்பமே சற்றும் எதிர்பாராத திருப்பம். நாவலில் வரும் அழகியல் தன்மை ஒவ்வொரு பாத்திரத்தையும், சூழ்நிலையையும் விவரிப்பதில் வெளிப்படுகிறுது.
வனநாயகனிலும் சரி, ஜெசி நாவலிலும் சரி, இயற்கையே கதையின் எல்லா இடங்களிலும் இழைந்திருக்கும். இயற்கையின் மீதான ஆரூர் பாஸ்கரின் காதல் அவர் படைப்புகளில் தெரியும். வனநாயகனில் வரும் ஒராங்குட்டானாகட்டும், இர்மா நாவலில் வரும் மேனட்டி ஆகட்டும், ஜெசி கதையில் வரும் கிரேட் ப்ளூ ஹெரான் ஆகட்டும் அந்த இயற்கை குறியீடுகளும், இயற்கை மனிதனின் பேராசையால் அழிக்கப்படும் காட்சிகளும் ஆரூர் பாஸ்கர் அவர்களின் சிக்னேச்சர் (ஹா..ஹா… சிக்னேச்சரிலும் கூட நேச்சர் வருகிறது). ஒரு புனைவில் எத்தனை நுட்பமான இயற்கை சார்ந்த தகவல்கள், அதன் பின்னால் இருக்கும் கடும் உழைப்பை பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை. திரைபடங்களில் வரும் பின்னனி இசை போல The Great Blue Heron(நீல பறவை) கதை முழுக்க நம் கற்பனைகளில் விரிந்துக்கொண்டே வருகிறது. ஜெசியை பற்றிய வர்ணனைகளை தொடர்ந்து வாசிக்க வாசிக்க, Blue Eyed Blonde பெண்களை கண்டால் ஜெசி கதாபாத்திரம் இப்படி தான் இருப்பாளோ என்று தோன்றிவிடும். கதாநாயகனின் ஜெசி மீதான காதலை சொல்லும் தருணம் மிக subtleலாக அழகாக இருந்தது.
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பலரும் அவர்கள் வாழும் ஊர்களை பற்றி, மக்களை பற்றி, இயற்கையை பற்றி அதிகம் தெரியாமலேயே வாழ்ந்துவிடுவார்கள். யாரோ சொன்ன அல்லது எங்கேயோ கேட்டதை வைத்து தங்கள் அனுமானங்களை அமெரிக்கா பற்றிய புரிதலாக உருவாக்கி வைத்திருப்பர். அவர்கள் பலரும் அமெரிக்க வாழ்க்கையை பற்றி அறியாத ஆனால் அவர்கள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற அல்லது கடந்து போகிற பல தகவல்களை கதையின் போக்கிலேயே எழுதியிருக்கிறார். ஃப்ளோரிடா மாகானத்தில் வசிக்கும் பலருக்கும் பலமுறை பார்த்தும் கூட தெரியாத ஒரு பறவை அநிஹ்ங்கா(Anhinga) (தன் இறக்கைகளை விரித்து பாம்பு போன்ற கழுத்தை நீட்டி ஏரி கரையோரங்களில் வெயில் காய்ந்துக்கொண்டிருக்கும், மற்ற பறவைகளிலிருந்து பார்த்தவுடனே வித்தியாசமாக இருக்கும், இது வட அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகானத்தில் மட்டுமே காணகிடைக்ககூடிய பறவை) பற்றிய குறிப்பு வரும் இடத்தை வாசித்த போது, மனிதர் எவ்வளவு தூரம் ஒரு நாவலை எழுத ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தோன்றியது. எனக்கு பிடித்த இன்னொரு செய்தி குறைந்த வாடகை அப்பார்ட்மென்டுகளை தடுக்கும் வெள்ளையின மனநிலையை விளக்கும் இடம். இவற்றை நம்மவர்களும் சேர்ந்து எதிர்க்கும் பல சமயங்களை நானே பார்த்திருக்கிறேன். இவை எல்லாமே நாவலில் நான் வாசிக்க வாசிக்க வியந்த இடங்கள், இதை தாண்டி நாவலின் உச்சம் என்பது கடைசி மூன்று அத்தியாங்கள், சரியான திரில்லர்! அது வரை க்ரைம் திரில்லராக ஓடும் கதை, அமானுஷ்ய திரில்லராக மாறும் இடம் அருமை. அமெரிக்க க்ரைம் திரில்லர்களில் வருவது போல, கார்களை கராஜ்ஜில் வைத்து கழட்டி மாட்டி விளையாடும் இளைஞன் ஒருவன் தான் கொலையாளியாக இருக்க கூடும் என்று தோன்றும் நேரத்திலேயே, அங்கு எல்லோரிடமும் சண்டையிடும் கூப்பர் என்ற வெள்ளையர் இறுதியல் மன்னிப்பு கேட்கும் வரை அவர் கொலையாளியாக இருக்கலாம் என்றே தோன்றும், இப்படி பல இடுக்குகளை தொட்டு இறுதியாக ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார். வாசித்து முடித்த பிறகு அழகான-ஆழமான-க்ரைம்-அமானுஷ்ய நாவலை ஒரு சேர படித்த அனுபவத்தை கொடுக்கும். அருமையான வாசிப்பு அனுபவமாக படைத்துக்கொடுத்த ஆரூர் பாஸ்கர் அவர்களின் யுனீவர்ஸ் தொடர வாழ்த்துக்கள்!