இந்த நூலுக்கு கிடைத்த முதல் முக்கிய வாசகியின் 'ஒப்பம்' குறித்த பார்வையை உங்களுக்காக தருகிறேன்... படியுங்கள்!
"ஒப்பம் - காலத்தின் கட்டாயத்தால் ஒரு கிராமத்தில், தன்னுள் இருக்கும் எழுத்தாளனை சிறையிலிட்டுவிட்டு, கிளை அஞ்சல் அலுவலர் பணியில் தன்னை சிறைபடுத்திக்கொண்ட கதை. நாயகனின் பன்முக அனுபவங்கள், அவற்றிலிருந்து பிறந்த உணர்வுகள், இறுதியில் அப்பணிச் சிறையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பறக்கத் துடிக்கும் மனச்சிறகின் பிரதிபலிப்பு 'ஒப்பம்'.
வாழ்வின் விந்தையான யதார்த்த பயணித்தில் வெறுப்பால், பொறுப்பால், வலியால், இறுக்கத்தால், அதிகாரத்தால், அதிகாரத்தின் அசட்டைத்தனத்தால், ஆதிக்கத்தால் மனித மனத்துள் விழும் ஓட்டைகள்; அவ்வோட்டைகளே சமூக கண்ணாடியில் விழும் பிம்பங்களாய், அப்பிம்பங்களின் ஒப்புமையே 'ஒப்பமா'ய்!
தலைவிரித்தாடும் பேயை ஒத்த புங்கைமரம் தொட்டு, காக்கை, கருப்பு ஃபேஷன் ப்ரோ, மரத்தால் கைவிடப்பட்டு அனாதையாகும் காய்ந்த சருகுகள், அதுகுறிக்கும் மூப்படைந்த பெற்றோர்கள் (என்னை நெகிழச் செய்த உருவக கவிதை), கேட்பாரின்றி எடுத்தாளப்படும் அதிகாரத்தின் எதேச்சதிகாரம், மணற்கடிகாரம் எடுத்துரைத்த கதையின் உள்மடிப்புகள் என பல்தரப்பட்ட உணர்வுகள்... சமூக ஓட்டை உடைசல்கள் யாவும் தேர்ந்த உருவகங்களால் உயிரூட்டப்பட்டு, ஒப்பனை செய்த தெளிந்த எழுத்தோடையாய்... 'ஒப்பம்'!"
'ஒப்பம்' சொல்லும் கதையின் மீதான உங்கள் பார்வையையும் தெரிந்துகொள்ளும் ஆவலோடு, நான்.