தீபச்செல்வன் ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமாவார். நான்காம் கட்டத்தில் இடம்பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன் தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறார். மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்ட இவர் சமகாலத்தின் மிக வலிமையுடைய குரலாக கருதப்படுபவர்.
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தமிழில் இளங்கலைச் சிறப்புப் பட்டமும், தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் (ஆ.யு) பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் எம்.பில் பட்டமும் பெற்றவர்.
பயங்கரவாதி ❤️ • புத்தகங்களையே கவசமாக கொண்டு, பேனாக்களையே ஆயுதமாக தூக்கி, தேசத்தின் கனவான கல்வியை தன் கனவாகவும் கொண்டு பல்கலைக்கழகம் எனும் களம் புகுந்த இளைஞன் ஒருவனின் கதை. • ஈழப்போராட்ட காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கிய இன்னல்கள் அவர்களை பின்னணியாக கொண்டு சம காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் என இறுக்கமான தருணங்களை வரிகளாக வடித்திருக்கிறார் தீபச்செல்வன். • போராட்ட காலத்தில் பாதை மூடப்பட்ட காரணத்தால் கிளிநொச்சிக்கு செல்வதற்காக யாழ்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு கப்பலில் சென்று அங்கிருந்து கிளிநொச்சிக்கு செல்வதாக காட்சி ஒன்று வரும். ஒரு மணித்தியாலத்தில் செல்ல வேண்டிய தூரம் இரண்டு/மூன்று நாட்கள் பயணமாக்கப்பட்டது. இக்காட்சி சிறுவயதில் கொழும்பு செல்வதற்காக கப்பல் மூலம் திருகோணமலை சென்ற நினைவுகளை என் முன் கொண்டுவந்தது. • தீபச்செல்வனின் அண்மைய படைப்பான இதுவே நான் வாசிக்கும் அவரின் முதல் நூல். உன்மை சம்பவங்களையும் புனைவையும் அளவாக கலந்து நட்பு, காதல், வீரம், துரோகம், இழப்பு என அனைத்தையும் அடக்கி பங்கங்களை புரட்ட வைக்கும் வகையில் அழகான ஒரு படைப்புத்தான் இந்த பயங்கரவாதி.