புத்தகம் வாங்கிய நாள்: 18-02-2022
வாங்கிய இடம்: வம்சி புக்ஸ், சென்னை புத்தக கண்காட்சி.
பவாவின் கதையாடலால் உந்தப்பட்டு நவீன இலக்கியத்தின் பக்கம் திரும்பி அதை வாசித்து கொண்டிருக்கிறேன்.
நான் கண்காட்சிக்கு போவதே அவரைப் பார்க்கத்தான். அவரின் இந்த இலக்கில்லா பயணங்கள் புத்தகத்தை வாங்கிய சில நிமிடங்களில் அவரின் அருகே சென்று புத்தகத்தில் அவரின் கையொப்பம் மற்றும் அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டது நான் வாழ்வில் ஆனந்தம் அடைந்த சில தருணங்களில் ஒன்று.
இலக்கில்லா பயணங்கள் ஒரு அபுனைவு வகைமையை சார்ந்தது. பவாவின் மேய்ப்பர்களைப் போல இந்த படைப்பும் ஒரு கட்டுரைத் தொகுப்பு. 14 கட்டுரைகள் அடங்கிய இந்த தொகுப்பில் ஒவ்வொரு கட்டுரையும் வேறு வேறு விடயங்களை கையாளுகிறது. இருப்பினும் இவை அனைத்தும் மனிதம் மற்றும் மனிதநேயம் என்ற ஒற்றை புள்ளியில் சந்திக்கிறது.
ஆம் முதல் கட்டுரை, மூன்று வேறு வேறு கதைகளில் இருந்து ஒத்த கதை மாந்தர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். டொமினிக் தவிர மற்ற கதாபாத்திரங்களான ஹென்றி மற்றும் சுமித்ரா வை நான் அறிவேன். இருப்பினும் இந்த கட்டுரையை வெகுவாக ரசித்தேன். காரணம் இந்த கதாபாத்திரங்களின் இடையில் இவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.
இதனை தொடர்ந்து, அவர் ரசித்த எழுத்தாளர் நரன், அவரின் வாழ்வில் அவர் சந்தித்த உன்னதமான மனிதர்கள் , கதை சொல்லல், அவரின் திரைப்பட அனுபவங்கள் என்று பவா தன்னுடைய வாசகர்களுக்காக விட்டு சென்றிருக்கும் குறிப்புகளாக நான் இந்த கட்டுரைகளை கவனிக்கிறேன். இந்த படைப்பு பவாவை அறியாதவரும் , பவாவை அறிந்தவற்களும் ரசித்து ருசித்து பருகும் வண்ணம் உள்ளதுதான் சிறப்பு.
பவாவை அறியாதவர்களுக்கு புதிய எழுத்து மற்றும் சமூக சேவையின் ஆளுமைகளை அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.
பவாவை அறிந்தவர்களுக்கு கலைஞர்களின் அறிமுகங்களை தாண்டி, இந்த படைப்பில் அவர் கையாண்ட எழுத்து எவ்வாறு என்று உற்று கவனிப்பார்கள்.
மேய்ப்பர்கள் புத்தகத்தில் "அடைகாத்து " என்ற சொல்லாடலை பவா அவ்வப்போது பயன்படுத்தியிருப்பார்.
அதே போல இதிலும் மொழியரசி தன் ஆசீர்வாதத்தை பூரணமாக அவருக்கு தந்து தனிச் சிறப்பு மிக்க சொல்லாடலை பிரயோகம் செய்யும் வண்ணம் அமைந்தது.
பவாவின் கதையாடல் மற்றும் அவரின் முந்தைய புத்தகங்களை வாசித்தவர்களுக்கு இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கும் அனுபவங்கள் ஏற்கவே நாம் அறிந்த ஒரு நிகழ்வுகளின் சொல்லப்படாத மறு பக்கங்களாக இருக்கும்.
13ஆவது கட்டுரையை நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் இதற்கு முன் இப்படி வெளிப்படையாக எழுத்தாளுமைகளின் அறிமுகம் என்று வெளிப்படுத்தியது கிடையாது. மேய்ப்பர்களில் கூட நமக்கு பல ஆளுமைகளை அறிமுகம் செய்திருந்தாலும் , நான் இவர்களை அறிமுகம் செய்கிறேன் என்று எங்கும் காண முடியாது.
அப்படி ஒரு அறிமுகக் கட்டுரை வரவேற்கத்தக்கது. இந்த கட்டுரையில் மேலும் என்னை வியப்பில் ஆழ்த்தியது K.R. மீரா என்ற எழுத்தாளரின் அறிமுகம் தான். மற்ற எழுத்தாளர்களை பற்றி பவா பல முறை அவருடைய மேடை பேச்சுகளில் குறிப்பிட்டு இருக்கிறார். என் நினைவில் K.R. மீரா வை பற்றி இவர் குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை.
அப்படி இருக்க இந்த கட்டுரையின் வாசிப்பு, 4 வருடத்திற்கு முன்பு ஆராசார் என்ற நாவலை வாங்கி இன்னும் வாசிக்காமல் வைத்தது நினைவில் வந்தது. அந்த புத்தகத்தின் பக்கங்கள் மற்றும் மலையாள எழுத்து வாசிப்பின் வேகமின்மை இவை காரணமாக அதை கிடப்பில் போட்ட எனக்கு இதை விரைவில் வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை தந்துவிட்டது.
இவையெல்லாம் விட இவர் தன் சக்திக்கும் மீறி நட்பு வட்டாரத்தின் துணையோடு வீடற்றோருக்கு வீடு கட்டி கொடுத்தது இவர் செயல் வீரராக மனித நேயத்தை பறைசாற்றுவதின் உச்சம்.
இதைப் பகிர்வதின் மூலம் அவருக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இதை வாசித்துவிட்டு யாரேனும் தன்னை சார்ந்த அல்லது சூழ்ந்தவற்களுக்கு உதவியாக ஏதேனும் ஒன்றை செயல் வீரராகச் செய்தால் அதுவே இந்த படைப்பின் வெற்றி.
பவா கதைச் சொல்லியாக, எழுத்தாளராக பல பரிமாணங்களில் இயங்கிக் கொண்டிருந்தாலும் மனிதநேயம் என்ற ஒற்றை பண்பை மீண்டும் மீண்டும் வாசகருக்குள் செலுத்தும் வகையில் இந்த படைப்பும் அமைந்துள்ளது.
ஒரு எளிய வாசகனுக்கான ஒரு எளிய படைப்பு.