சமஸ் (பிறப்பு: டிசம்பர் 4, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், உரையாளர். ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘தி இந்து’ தமிழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ’அருஞ்சொல்’ இணைய இதழின் ஆசிரியர்.
வாங்கிய இடம்: New Book Lands (புதிய புத்தக உலகம்) வாங்கிய நாள்:23-ஜூலை-2023 வகைமை: பயண கட்டுரை
எழுத்தாளர் ராஜ ராஜேஸ்வரி அவர்களின் சிறுகதை தொகுப்பான லண்டன் 1995 நூலை தேடிக்கொண்டிருந்த போது இந்த நூல் என் கண்ணில் பட்டது. இதற்கு முன் A K செட்டியார் மற்றும் எஸ்,ராமகிருஷ்ணன் அவர்களின் பயண கட்டுரைகளை வாசித்துருக்கிறேன். A K செட்டியார் அவர்களின் புத்தகங்களில் உள்ள எழுத்துகள் அவரது அனுபவ பதிவுகளின் ஆவணமாக இருக்கும் தன்மை கொண்டது. இன்னொரு பக்கம் எஸ் ராமகிருஷ்ணன் தான் பார்த்த இடங்கள் மற்றும் மக்களை தாண்டி தன்னுடைய தனிப்பட்ட நினைவலைகளையும் அந்த இடங்களின் வரலாறுகளையும் நமக்கு ஒரு சேர அவரது எழுத்தின் வழங்குவார்.
மாறாக சமஸ் அவர்களின் பயணமானது அவரது அலுவல் பணி நிமித்தமாக இருப்பதால் லண்டன் நகரின் வரலாறு, அதன் உள்கட்டமைப்புகளின் பரினாம வளர்ச்சி, பொருளாதார புரட்சியினால் மாசடைந்த சுற்று சூழலை மீட்டெடுத்த படிநிலைகள், அரசுக்கு மக்கள் மீதான அக்கறை, புலம் பெயர் குடிமைகளின் கண்ணோட்டம் , விவசாயத்தின் முக்கியத்துவம் அறிந்து அவற்றிற்கு மானியம் வழங்குதல், பன்முகத்தன்மை என்று அரசியல், மக்கள் தொகையியல், கொள்கைகள் சார்ந்த பல்வேறு நுட்பங்களை ஆரோக்கியமான உரையாடல் மூலம் நமக்கு கடத்தியிருக்கிறார் சமஸ்.
லண்டன் மாநகரின் புறநகர் பகுதியில் இரண்டரை ஆண்டு வசித்தபோது லண்டனுக்கு மாதம் 1 அல்லது 2 முறை செல்வது வழக்கம். அங்கே உள்ள வசதிகளை வியந்து அதை அனுபவித்திருக்கிறேன், ஆனால் அதன் பின்னால் இருக்கும் உழைப்பும் திட்டமும் இதற்கெல்லாம் வித்திட்ட கொள்கைகளும் அப்போது யாம் அறியேன்.
உதாரணத்திற்கு அங்குள்ள கடைகளிலுள்ள துணிகளில் Made in India என்று பார்க்கும் போது இந்திய உற்பத்தி பொருள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதே என்று சற்று பெருமையாக இருக்கும்.
ஆசாத் மற்றும் சமஸ் இடையில் உள்ள இந்த உரையாடலை வாசித்தபின் தான் தெரிந்தது இந்த அதீத பெருமை வேண்டாம் என.
"ஒரு உடையால் கிடைக்கும் லாபத்தை விட அந்த உற்பத்தியால் ஏற்படும் சூழல் இழப்பு அதிகம் என்றால் அதை தவிர்த்துவிடுவதேய நல்லது என்ற முடிவுக்கு மேற்குலகம் வந்து வெகு நாட்கள் ஆகின்றன, இன்றைக்கும் ஐரோப்பாவில் அதிகம் மாசு உண்டாக்கும் தொழிற்ச்சாலைகளின் பட்டியலில் பிரிட்டன் தொழிற்சாலைகளும் இருக்கிறன்றன. ஆனால் பிரிட்டனின் மாசை சீனாவின் மாசுடனோ இந்தியாவின் மாசுடனோ ஒப்பிட முடியாது " என்று சொன்னார் ஆசாத். எனக்கு திருப்பூரின் வருமான பெருக்கமும் நொய்யல் நதியின் சாவும் கண்ணில் தோன்றி மறைந்தன.
மூன்றாம் உலகநாடுகள் வளர்ந்த நாடுகளை அண்டி பிழைக்கும் சூழல் இருப்பதால் பிரிட்டன் அடைந்த வளர்ச்சியை அடைய இன்னும் காலம் இருக்கிறது.
இந்த கட்டுரையில் 5ஆவதாக வரும் "நீர்நிலைதான் சமூக வாழ்வுக்கான அளவுகோல் " என்ற கட்டுரை என் மனம் கவர்ந்த கட்டுரை.
நாங்கள் வாழ்ந்த காலம் என் மனைவிக்கு ஒரு முறை கூட சளி பிடிக்கவில்லை. அதற்கான காரணங்களும் காட்டுக்குள் ஒரு பெருநகரம் என்ற கட்டுரையில் கண்டடைந்ததில் மகிழ்ச்சி.
அங்கு வசிக்கும் ஈழத் தமிழர், ஆப்கானியர், ஆங்கிலேயர் மற்றும் பேராசரியியர் அவர்களின் நேர்காணலும் சிறப்பு வாய்ந்தது.
என்னுடைய இரண்டரை ஆண்டு கால பிரிட்டன் வாழ்வின் அம்சங்களை பூரணமாக உள்வாங்கியதன் நிறைவு தந்திருக்கிறது இந்த கட்டுரை தொகுப்பு.