இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில் நின்று வாழ்வையே பகடையாட்டமாகக் கருதும் மனிதர்களை மையமிட்டுச் சுழலும் இந்நாவலின் வழியாகச் சுடுசாம்பல் நிறம் நிலத்தை ஒருபோர்வையாகப் போர்த்துகிறது. மலையுச்சியில் நின்று மனித மனங்களின் தத்தளிப்பை ஆழமாக விசாரணை செய்கிறது இந்நாவல். கணியன் உருட்டும் சோழிகளைப் போல, எண்ணற்ற மனித மனங்களின் நிறங்களை அந்நிலத்தில் தூவியிருக்கிறார் சரவணன் சந்திரன். அதனூடே வளர்ந்த ஒற்றைச் சித்திரமே அசோகர்!
இந்த புத்தகம் என்னை வந்தடையும் முன் நான்கைந்து பேர் கைகளுக்கு சென்று யாரும் முழுதாக படிக்காமல் , என்னையும் படித்து நேரத்தை விரயம் ஆக்காதே என்கிற பரிந்துரையுடன் வந்தது . ஆசிரியர் உண்மையில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை எனக்கு பரிந்துரை செய்தவர்களின் முன்மொழியே சொல்லி விட்டது என்பதை நாவலை முழுமையாக படித்து முடித்தவுடன் உணர்ந்தேன் . நம் எல்லார் வாழ்க்கையிலும் இந்த கதையில் வரும் அசோகன் போல் ஒருவர் இருப்பார். நமக்கு சொந்தமாகவோ அல்லது நமக்கு தெரிந்திராவாகவோ ஏதாவது ஒரு மனிதராக இந்த அசோகனை நாம் பார்த்திருப்போம் . ஆனால் அப்படிப்பட்ட ஆளை பற்றி பேச முயற்சித்தால் " விடு , அவனை பத்தி பேச என்ன இருக்கு " என்ற பதிலே நம் சுற்றங்களுடன் நம்முடன் இருக்கும் அசோகனை பற்றி பேசாமல் வைத்திருக்கும் . அப்படிபட்ட ஆளை கதையின் கருவாக்கி அவனை பற்றி பேசியதற்காகவே ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள் . சரவணன் சந்திரனின் மொழி நடை , வேகம், படிப்பவரை சோர்வில்லாமல் பக்கத்தை கடத்தும் திறன் எல்லாவற்றையும் பற்றி என்னுடைய முந்தைய புத்தக விமர்சனங்களில் நிறைய பேசியாகிவிட்டபடியால் , கதையை பற்றி கொஞ்சம் அலசலாம் . அசோகனை பற்றிய அவனுடைய பிள்ளைகளின் பார்வைகள் பெரிதாக இல்லாதது இந்த நாவலின் எனக்கிருந்த ஒரு சிறு குறை . பூஜை , ஆன்மிகம் , சாபம் என்று ஆசிரியரின் ஆர்வம் அவரை இந்த முடிவுக்கு இழுத்து செல்லப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது . சந்தேகத்தை விட அது அவசியமா அதை விட நல்ல முடிவினை அவர் யோசித்து வைத்து அவரின் ஆர்வம் அவரை மடை மாற்றிவிட்டதா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது (குடித்து சீரழிபவர்கள் தங்களின் கடைசி காலத்தை மருத்துவமனையில் தான் கழிப்பார்கள் என்கிற என் எதிர்பார்ப்பை முன்னறிந்து அதைப் பொய்யாக்க இப்படி ஒரு முடிவு எழுதப்பட்டிருக்கலாம் ). இந்த நாவலின் என்னை மிகவும் கவர்ந்த விடயம் என்னவென்றால் , நாவலை படித்து முடித்தவுடன் அந்த நாவலின் அட்டைப்படம் நமக்கு அந்த நாவலை வேறு மாதிரியாக காட்டும் . நாவலின் அட்டைப்படத்தை கூட நாவலின் ஒரு அங்கமாக மாற்றி வாசகர்களை ஈர்க்கும் அளவு இங்கே தமிழ் எழுத்தாளர்கள் மெனக்கெடுகிறார்கள் என்கிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்த இலக்கியம் என்பது ஒரு காலத்தை ஒரு கலாச்சாரத்தி பிரதிநிதிப்படுத்தும் கருவியாக இருந்தது . அதை மனிதர்களை பிரதிபலிக்கும் கருவியாக மாற்ற முயற்சித்திருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் . அவரின் இந்த முயற்சிக்காகவே இந்த நாவல் பலரை சென்றடைய வேண்டும் .